Published : 28 Sep 2018 11:38 AM
Last Updated : 28 Sep 2018 11:38 AM
‘Night Gallery!’
யுனிவர்சல் டிவியின் புதிய தொலைக்காட்சிப் படம் அது. மூன்று பகுதிகளைக் கொண்ட அந்தப் படத்தின் இரண்டாம் பகுதியில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஜோன் க்ரஃபார்ட். அது பற்றிய விவாதங்களின்போது, ‘இயக்குநர் யாரு?’ என்று விசாரித்தார்.
“ஸ்டீவன்னு பேரு, புது இயக்குநர்!”
“என்னது, புது இயக்குநரா?” ஜோனின் முகத்தில் திருப்தியின்மை. “யார் இவர்? இதுக்கு முன்னாடி படம், நாடகம் ஏதாவது எடுத்திருக்காரா?”
“சில குறும்படங்கள் எடுத்திருக்கார்” என்று விளக்கினார் தயாரிப்பாளர். “சின்ன வயசுதான். ஆனா, ரொம்ப திறமைசாலி!”
அவர் ‘சின்ன வயசு’ என்று சொன்னதும், ஜோனுக்கு இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. ‘இந்தத் தயாரிப்பாளர் யாரோ ஒரு கத்துக்குட்டி இயக்குநர் கையில என்னோட படத்தை ஒப்படைச்சுட்டார்போல!’
ஜோன் சாதாரண நடிகை இல்லை. மௌனப் படங்களில் தொடங்கி ஏராளமான திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்களில் நடித்தவர். இந்த அறுபத்தைந்து வயதிலும் அவருக்கென்று ரசிகர் கூட்டம் இருந்தது.
இப்படிப்பட்ட முக்கியமான நடிகையின் படத்தை, அனுபவமில்லாத ஒரு புதிய இயக்குநரை நம்பி ஒப்படைக்கலாமா? அவர் ஏதாவது சொதப்பிவிட்டால் ஜோனுடைய பெயர்தானே கெட்டுப்போகும்?
அந்தத் தொலைக்காட்சிக் குழுமத்தின் துணைத்தலைவரான சிட்னி ஷீன்பெர்கை அழைத்தார் ஜோன். “எதுக்கு இந்தப் புது இயக்குநர் பரிசோதனையெல்லாம்? எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை” என்றார். “இவரை மாத்திட்டு யாராவது அனுபவமுள்ள, நல்ல இயக்குநரைக் கொண்டுவாங்களேன்!”
சிட்னி சிரித்தார். “ஜோன், தயவுசெஞ்சு அவசரப்படாதீங்க. ஸ்டீவனை நேர்ல பாருங்க. அவர் வேலை செய்யற விதத்தைக் கவனிங்க. உங்களுக்கு அவரை நிச்சயமாப் பிடிக்கும்!”
ஓர் இளம் இயக்குநரை சிட்னி இந்த அளவுக்குப் பரிந்துரைக்கிறார் என்றால், அதற்கு ஒரு காரணம் உண்டு. சில மாதங்களுக்கு முன் ஸ்டீவன் எடுத்திருந்த ‘Amblin’ என்ற குறும்படத்தைப் பார்த்திருந்தார் சிட்னி. அதன் நேர்த்தியிலும் கதைசொல்லும் பாணியிலும் அசந்துபோனார். ‘இந்த இளைஞர் நிச்சயம் பெரிய ஆளா வருவார்’ என்று ஊகித்திருந்தார். உடனடியாக ஸ்டீவனை அழைத்து அவரோடு ஏழு வருட ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டார்.
இதெல்லாம் ஜோனுக்குத் தெரியாது. அவரைப் பொறுத்தவரை ஸ்டீவன் ஒரு புதிய இயக்குநர். ஆகவே, ஸ்டீவன் மீது அவருக்கு நம்பிக்கை வரவில்லை.
அதேநேரம், சிட்னி மீது ஜோனுக்கு நம்பிக்கை இருந்தது. ஆகவே, ஸ்டீவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அந்தப் படத்தில், பார்வையில்லாத ஒரு பெண்ணாக நடிக்கவிருந்தார் ஜோன். அதற்காகத் தன்னுடைய கண்களைக் கட்டிக்கொண்டு அறையில் அங்குமிங்கும் தட்டுத் தடுமாறி நடந்து பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஸ்டீவன் அங்கு வந்தார். புதிய இயக்குநர் வந்திருக்கிறார் என்றதும், கண்ணைக் கட்டியிருந்த துணியை ஆவலுடன் பிரித்தார் ஜோன்.
மறு நிமிடம், பலத்த ஏமாற்றம் அவரைத் தாக்கியது. காரணம், அவர் முன்னே நின்றிருந்தது இளைஞர்கூட இல்லை. ‘சின்னப்பையன்’தான். ‘பன்னிரண்டு வயதுச் சிறுவனைப் போல் தோன்றினார் ஸ்டீவன்’ என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஜோன்.
அவருடைய மனநிலையை ஸ்டீவனும் புரிந்துகொண்டார். எந்த நேரத்திலும் ஜோனின் தலையீட்டால் தான் மாற்றப்பட்டுவிடுவோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
ஜோனுக்கு ஸ்டீவன் மீது நம்பிக்கை இல்லை என்பது உண்மைதான். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ என்று அவர் புலம்பியதும் உண்மைதான். அதேநேரம், அவர் தன்னுடைய தொழிலுக்கு நேர்மையாக இருந்தார். ஸ்டீவனின் அனுபவமின்மையைச் சாக்காக வைத்து அவரை ஆட்டிப் படைக்காமல், அவருடைய பணியில் குறுக்கிடாமல் சுதந்திரமாகச் செயல்படவிட்டார். தன்னுடைய விருப்பமின்மையை, ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் அவர் சொன்னபடி நடித்துக்கொடுத்தார்.
அடுத்த சில நாட்களுக்குள், ஸ்டீவன் தன்னுடைய திறமையால் ஜோனை வென்றுவிட்டார். அவர் ஓர் இளம் மேதை என்பதை அந்தப் படப்பிடிப்பிலிருந்த எல்லாரும் புரிந்துகொண்டார்கள்.
அந்த மேதைமையால் ஸ்டீவன் திமிராகவோ பிறரிடம் அலட்சியமாகவோ நடந்து கொள்ளவில்லை. எல்லாரிடமும் மிகுந்த பணிவுடன், மதிப்புடன் பேசினார். தனக்கு என்ன வேண்டும் என்பதை அவர் கச்சிதமாக அறிந்திருந்தார், அதைத் தெளிவாக விவரித்துச்சொல்லி நடிகர்களிடம் வேலை வாங்கினார். தான் நினைத்த காட்சி அமையும்வரை விடவில்லை. அந்த அர்ப்பணிப்பு ஜோனுக்குப் பிடித்திருந்தது.
கொஞ்சம்கொஞ்சமாக, ஜோனின் தயக்கங்கள் விலகின. ‘அனுபவமிக்க இயக்குநர்கள்’ என்று சொல்லிக்கொண்டு வருகிறவர்களெல்லாம் வழக்கமான காட்சிகளையேதான் திரும்பத் திரும்ப எடுப்பார்கள். ஆனால், இந்தப் ‘புதிய இயக்குந’ரின் சிந்தனையே புதுமையாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு கோணத்திலும் வித்தியாசம் தெரிகிறது. அதைத் திரையில் பார்க்கும்போது மாறுபட்ட அழகுடன் இருக்கிறது என்று வியந்தார்.
இத்தனைக்கும் அந்தப் படத்தில் ஸ்டீவன் இயக்கிய பகுதி மிகச் சிறியது. அரைமணி நேரத்துக்கும் குறைவான அந்தக் காட்சிகளிலேயே அவர் தன்னுடைய திறமையை மிகச் சிறப்பாகக் காட்டியிருந்தார். ‘உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது’ என்று அவருக்குக் குறிப்பெழுதினார் ஜோன்.
அந்தக் கணிப்பு மிகச் சரியாக அமைந்தது. அடுத்த சில ஆண்டுகளுக்குள், தன்னுடைய தனித்துவமான கதை சொல்லும் பாணியாலும் அழகியலாலும் திரைத்துறையில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்தார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அவருடைய படங்கள் வசூலுக்கு வசூல், விருதுகளுக்கு விருதுகள், விமர்சகர்களின் பாராட்டுகள் என அனைத்தையும் அள்ளிக்கொண்டன.
ஸ்டீவன் முதன்முதலாக ஜோனை இயக்கிக் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு தலைமுறை ரசிகர்கள் மாறிவிட்டார்கள். ஆனாலும், ஸ்டீவனின் படங்கள் தொடர்ந்து பேசப்படுகின்றன. அவரைப் பின்பற்றி ஓர் இளைஞர் கூட்டமே திரைத்துறைக்குள் வந்திருக்கிறது.
ஒரு வேளை, அன்றைக்கு ஜோன் தன்னுடைய ‘பெரிய நடிகை’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இயக்குநரை மாற்றியிருந்தாலும், வேறொரு படத்தில் ஸ்டீவன் வெளிப்பட்டிருப்பார். அப்படிச் செய்யாமல் தொடர்ந்து நடித்ததன்மூலம் ‘யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது’ என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார் ஜோன்.
இன்னொரு பக்கம், அவரைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை இயக்கும்போதும் தன்னுடைய இயல்பான கலைத்திறமையைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாமல், சமரசம்செய்து கொள்ளாமல் அந்தப் படத்தைத் தன்னுடைய படமாக உருவாக்கினார் ஸ்டீவன். தன் திறமை மீது முழு நம்பிக்கை வைக்கிறவர்களால் மட்டுமே இது முடியும்!
யார் வெற்றியடைகிறார்களோ, எந்தப் பாணி வெற்றியடைகிறதோ, அதை அப்படியே பிரதியெடுத்தால் நாமும் வெற்றியடைந்துவிடலாம் என்று பெரும்பான்மையினர் நினைக்கிறார்கள். ஏனெனில், அது வெற்றியடையக்கூடிய வழி என்று ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை மீறிப் புதிதாக ஒரு வழியை உருவாக்குவது ஆபத்து என்று இவர்கள் தயங்குவார்கள். இதனால், யார் எதைச் சொன்னாலும் தலையாட்டுவார்கள். இழுத்த இழுப்புக்குச் செல்வார்கள். அதன்பிறகு, அது இவர்களுடைய படைப்பாக இருக்காது. படைப்பில் இவர்களும் இருக்க மாட்டார்கள்.
உண்மையான திறமையாளர்களுக்குத் தங்களுடைய சிந்தனையில், படைப்பில், தாங்கள் செல்லும் பாதையில் முழு நம்பிக்கை இருக்கும். இதற்கு முன் யாரும் இதைச் செய்திருக்காவிட்டாலும் பரவாயில்லை, ‘நான் இதில் முதல் வெற்றியாளனாவேன்’ என்ற நம்பிக்கையோடு அதை முன்வைப்பார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் வரலாறு சாதனையாளர்களாகக் கொண்டாடுகிறது.
(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT