Last Updated : 18 Jun, 2019 11:24 AM

 

Published : 18 Jun 2019 11:24 AM
Last Updated : 18 Jun 2019 11:24 AM

ஆட்டிச அழகன்!

ஒடிசலான உடல் வாகு, நெடுநெடுவென உயரம், வெளிர் நிறச் சருமம், மாசுமருவற்ற முகம் என்பதுபோன்ற வரையறுக்கப்பட்ட தோற்றம் கொண்டவர்கள் மட்டுமே மாடலாகி ஒய்யாரமாக  ‘ராம்ப் வாக்’ செய்யமுடியும் என்னும் காலம் மாறிவிட்டது.

அமில வீச்சுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவே மாடலாக மாறிய அமில வீச்சுப் போராளி லட்சுமி அகர்வால் தொடங்கி அண்மைக் காலத்தில் பலரை உதாரணமாகச் சொல்லலாம்.

இந்த வரிசையில் இடத்தைப் பிடித்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த பிரணவ் பக்ஷி. 19 வயதான இவர்தான் இந்தியாவின் முதல் ஆட்டிசம் கொண்ட மாடல்.

தன்னுடைய பலமே ஆட்டிசம்தான் என்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஒளிப்படக்கலையிலும், கோல்ஃப் விளையாட்டிலும் நாட்டம் கொண்டவர்.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி மேற்கொள்வதில் அலாதிப் பிரியம் கொண்டவராம். ஆட்டிசத்தின் தாக்கம் 40 சதவீதம் இருப்பதோடு அருகில் இருப்பவர்கள் பேசுவதைக் கேட்டதும் அதையே தானும் திரும்பத் திரும்பப் பேசும்  ‘எக்கோலாலியா’ என்ற நோய்க்கூறால் பாதிக்கப்பட்டவர் பிரணவ்.

எதுவானாலும் சரி, என்னுடைய மேடையில் நான் ராஜநடை போடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கிறார் இந்த ஆட்டிச அழகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x