Published : 09 Mar 2018 11:14 AM
Last Updated : 09 Mar 2018 11:14 AM
கி
ரிக்கெட்டில் பதின்ம வயதில் ஒரு வீரர் சர்வதேச அணியின் கேப்டனாவதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனால், அதை நிஜமாக்கியிருக்கிறார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான். 19 வயதிலேயே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகி, சர்வதேச கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
இளம் கேப்டன்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இளம் கேப்டன்களின் பட்டியலில் கடந்த 14 ஆண்டுகளாக நீடித்துவந்தார் வங்கதேசத்தின் ரஜின் சல்லே. இவர் 2004-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணியை வழிநடத்தினார். அப்போது அவரது வயது 20 ஆண்டுகள், 297 நாட்கள். இத்தனைக்கும் இவர் இரண்டு போட்டிகளுக்கு மட்டும்தான் வங்கதேச கேப்டனாக இருந்தார். இந்தச் சாதனையைத்தான் ரஷீத் முறியடித்துள்ளார்.
ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் கடந்த 4-ம் தேதி ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடியபோது ரஷீத் கான் அந்தச் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய அன்று அவருடைய வயது 19 ஆண்டுகள், 165 நாட்கள். அதுவும், ரஷீத் கான் மிகவும் முக்கியமான தொடருக்குத் தலைமையேற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப்போட்டித் தொடருக்குதான் ரஷீத் அணியை வழிநடத்துகிறார்.
இந்தத் தொடருக்கு அவர் நேரடியாக கேப்டனாக நியமிக்கப்படவில்லை. அணியின் கேப்டனாக இருக்கும் அஸ்கர் ஸ்டானிக்சாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் துணை கேப்டனாக இருந்த ரஷீத் கானுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. இன்று அது சாதனையாகவும் மாறியிருக்கிறது.
புகழின் உச்சியில்...
சர்வதேச கிரிக்கெட்டில் இன்று ஜாம்பவான் அணிகளின் வீரர்களுக்கு இணையாகப் பரபரப்பாகப் பேசப்படும் வீரர்களில் ஒருவர் ரஷீத். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இணை உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் ஐ.சி.சி. விருதை ரஷீத் கான் கடந்த ஆண்டு பெற்றார். சிறந்த பவுலர்களுக்கான பிரிவில் இந்த விருது ரஷீத் கானுக்குக் கிடைத்தது. அப்போதும் ஒரு சாதனையை அவர் படைத்தார். அது, இளம் வயதில் ஐசிசி விருது வாங்கிய ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என்பதுதான்.
எதிரணி வீரர்களை மந்திர சுழற்பந்து வீச்சின் மூலம் சிதறடிக்கும் வீரர் என்ற சிறப்பைப் பெற்றவர் இவர். இதுவரை 37 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 86 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார் ரஷீத். சராசரியாக ஒரு போட்டியில் 3.8 விக்கெட்டுகள். கடந்த ஆண்டு மட்டும் இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும். பவுலிங்கில் மட்டுமல்ல; பேட்டிங்கிலும் அசத்தக்கூடியவர்.
தற்போது சர்வதேச டி-20 பவுலிங் தரவரிசையிலும் முதல் இடத்தில் இருக்கிறார் ரஷீத். இந்த வயதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் டி-20 பவுலிங் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியதும் இதுவே முதன்முறை. இதன் காரணமாகவே, ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்திலும் பல அணிகளின் விருப்பப் பட்டியலில் இவரே இடம் பிடித்திருந்தார். கடந்த ஆண்டு இவரை, ‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
ஆப்கன் வீரர் ஒருவர் இவ்வளவு விலைக்குப் போனதைப் பார்த்து அப்போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்திலும் ‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணி, இவரை ஒரு மடங்கு கூடுதலாக 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. பல அணிகளும் இவரைத் தங்கள் அணிக்கு எடுக்க போட்டாபோட்டி போட்டதும் நடந்தது.
கடந்த ஓராண்டில் இப்படிப் பல சாதனைகளைப் படைத்திருக்கும் ரஷீத் கான், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாகி, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தன் பெயரையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT