Published : 23 Mar 2018 10:22 AM
Last Updated : 23 Mar 2018 10:22 AM
ச
முக சேவையில் இரண்டு ரகம் உண்டு. தன் வேலை போக, நேரம் கிடைக்கும்போது சமூக சேவையில் ஈடுபடுவோர் ஒரு ரகம். தன் வேலையைக்கூடத் தியாகம் செய்துவிட்டு சமூக சேவையில் ஈடுபடுவோர் இரண்டாவது ரகம். சென்னையைச் சேர்ந்த கார்த்தீபன் இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். சமூக சேவையில் ஈடுபடுவதற்காக ஐ.டி. வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்காக ஓடியாடி உழைத்துவருகிறார் இவர்.
சிறு வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பது கார்த்தீபனின் கனவு. நன்கு படித்து, ஐ.டி. துறையில் வேலை பார்த்தபோது, வார இறுதி நாட்களில் முடிந்தவரை சமூக சேவையில் ஈடுபட்டுவந்துள்ளார். வேலையில் இருந்துகொண்டே சமூக சேவைப் பணிகளில் ஈடுபடுவது கார்த்தீபனுக்குச் சிரமமாக இருக்கவே, ஐ.டி. வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாகச் சமூக சேவையில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.
மாணவர்களின் நலனுக்காக ‘டீம் எவரெஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார் இவர். ஆரணியில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டு, அவர்களுக்கு இலவசமாகக் கல்வி உதவியை வழங்கி வருகிறார்.
கல்வி சார்ந்த தொண்டை முன்னெடுத்தது ஏன் எனக் கேட்டபோது, “இந்தியாவில் கல்வித் தரம் மிகவும் குறைவு. அதனால் கிராமப் புறக் குழந்தைகளின் கல்வித் திறனும் குறைவாகவே இருக்கிறது. ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன் ஒரு முயற்சியாகத்தான் இந்தத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன்” என்கிறார் கார்த்தீபன்.
தற்போது ஆரணியில் ‘கிராமப் படிப்பு மைய’த்தைத் தொடங்கியிருக்கும் கார்த்தீபன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, கணினிப் பயிற்சிகளையும் அளித்துவருகிறார். சென்னையில் 12-ம் வகுப்பு படித்து முடித்தபின், குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாமல்போன 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து கல்வி உதவித்தொகையையும் வழங்கிவருகிறார். அது மட்டுமல்ல; அவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டி வகுப்புகளையும் எடுத்துவருகிறார்.
“இந்தக் காலத்தில் கணினி இயக்கம் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதனால்தான் சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாராவாரம் இலவசமாகக் கணினிப் பயிற்சியை வழங்கி வருகிறோம். அதுபோலத்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசத் தயங்குகிறார்கள். அப்படித் தயங்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியைத் தருகிறோம். நேரடியாக மட்டுமல்ல; தினமும் அரை மணி நேரம் தொலைபேசி மூலமாகவும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியை அளிக்கிறோம். ஏழை மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க விரும்புபவர்கள், வீட்டிலிருந்தபடியே இதைச் செய்து, அவர்களுக்கு உதவலாம்” என்கிறார் கார்த்தீபன்.
தொடர்புக்கு: https://www.facebook.com/ TeamEverestNGO/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT