Last Updated : 19 Sep, 2014 01:30 PM

 

Published : 19 Sep 2014 01:30 PM
Last Updated : 19 Sep 2014 01:30 PM

அழ வைக்காத சீரியல்கள்

சீரியல் - இந்த வார்த்தையைக் கேட்டவுடன், அதெல்லாம் வீட்ல அம்மாக்கள் பார்க்கிற 'அழுவாச்சி காவியங்கள்' என்று தானே தோன்றுகிறது. தமிழ் சீரியல்கள் என்றால் அப்படித்தான். ஹிந்திக்குப் போனால், 'சாஸ் பகு' (மாமியார் - மருமகள்) சண்டை சீரியல்கள்தான். என்றைக்காவது, யூத் பார்க்கும் சீரியல்களைப் பற்றி காதில் விழுந்திருக்கிறதா?

ஹாலிவுட் படங்களுடன் போட்டிபோடும் விதமாகப் பெரும் பொருட்செலவில் மாடர்னாகவும் விறுவிறுப்பாகவும் சில தொடர்கள் எடுக்கப்படுகின்றன.

எந்தக் கதை என்றாலும், இந்த சீரியல்களின் யு.எஸ்.பி. என்னவோ 'சந்தானம் மேட்டர்'தான். இப்படி யூத்தை வசீகரிக்கும் தொடர்கள் எடுக்கப்படும் இடம் நிச்சயமாக இந்தியா இல்லை. எல்லாமே அமெரிக்கன் இம்போர்ட்.

இப்படி இளைஞர்கள் கட்டிப்போடும் ஆங்கில சீரியல்களில் பல, டிவியில் எல்லோரையும் வாய் பிளக்க வைத்து, முடிந்தும் போய்விட்டன. லோக்கல் எஃப்.எம். பழைய சினிமா பாடல்களுக்கு ஆக்சிஜன் கொடுத்ததைப் போல, ஒலக வீடியோக்களின் சங்கமமான யு டியூபில் இதெல்லாம் இப்பவும் எக்கச்சக்க ஹிட் அடித்து வருகின்றன. இப்படி பிரம்மாண்ட வெற்றி பெற்ற சீரியல்களின் மினி டேட்டா:

விஸார்ட்ஸ் ஆஃப் தி வேவர்லி பிளேஸ் (Wizards of the Waverly Place)

இந்த சீரியலின் கதாநாயகி பதினைந்து வயது சிறுமி அலெக்ஸ் ரூசோ. மந்திரவாதி (Wizards) குடும்பத்தைச் சேர்ந்த அவளுடைய குறும்புத்தனம், நகைச்சுவையாக இருக்கும். அலெக்ஸ் ரூசோவும் அவளுடைய குடும்பமும் மந்திரவாதிகள் என்ற அடையாளத்தை மறைத்து எப்படி நகரவாசிகளாக வாழ்கிறார்கள் என்பதுதான் கதைக்களம்.

இத்தொடரில் அலெக்ஸ் ரூசோவின் அண்ணன் ஜஸ்டின் ரூசோவின் கதாபாத்திரம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான செலினா கோமஸ், இதில் அலெக்ஸ் ரூசோவாக நடித்திருந்ததுதான் ஸ்பெஷல்.

ஹன்னா மாண்டானா (Hannah Montana)

இந்தத் தொடர் இளைஞர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. புகழ்பெற்ற இளம் பாப் பாடகி மைலி சைரஸ்தான் (Miley Cyrus) கதாநாயகி.

சீரியலில் வரும் ஹன்னா மாண்டனா என்ற கேரக்டரும் இளம் பாப் பாடகிதான். அவள் தன் செலிபிரிட்டி அடையாளத்தை மறைத்து ஒரு சாதாரண ஹைஸ்கூல் பெண்ணாக மட்டும் வாழ ஆசைப்பட்டால் என்ன ஆகும் என்பதுதான் இந்தத் தொடர்.

தன்னுடைய செலிபிரிட்டி அடையாளத்தை மறைப்பதற்காக அவள் செய்யும் வேலைகளை படு நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஹைஸ்கூல் நட்பு, எதிர்பால் ஈர்ப்பு என இளைஞர்களின் உணர்வுகளை நகைச்சுவையுடன் சொல்லியிருந்ததால், இந்த சீரியல் பெரிய வெற்றி பெற்றது.

கேஸில் (Castle)

கேத் பெக்கெட் என்னும் துப்பறியும் நிபுணரும், ரிச்சர்டு கேஸில் என்னும் எழுத்தாளரும் சேர்ந்து எப்படி குற்றங்களையும், அதைச் செய்த குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தொடர். இதில் துப்பறிவதின் சூட்சுமங்கள் சுவாரசியமாக விளக்கப்பட்டிருக்கும்.

டிவியஸ் மெய்ட்ஸ் (Devious Maids)

வழக்கத்துக்கு மாறாக பெரிய பணக்காரக் குடும்பங்களில் பணிபுரியும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்த சீரியல். பணிப்பெண்களின் உரிமையைப் பற்றிப் பேசும் இந்தத் தொடரும் நகைச்சுவையாகச் சொன்னதால், ஹிட் அடித்துவிட்டது.

டூ அண்ட் ஹாஃப் மென் (Two and half men)

இந்தத் தொடர் முழுக்க முழுக்க ஆண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கான உலகம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக இத்தொடரில் விளக்கியிருக்கிறார்கள்.

இந்த சீரியல்கள் கலாசாரம் சார்ந்த ரசனை வேறுபாடுகளைத் தகர்த்துவருகின்றன. இப்படி ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள் வரவேற்பைப் பெறுவதற்குக் காரணம், அவை குறிப்பிட்ட ஒரு சாராரை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்படாமல் இருப்பது என்று சொல்லலாம்.

இந்த சீரியல்கள் நம் சமூகத்தில் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து விமர்சனம் இருந்தாலும், பரவலான கவனத்தை ஈர்க்கும் வகையில் அந்த சீரியல்கள் இருப்பதால், புதிய நேயர்களையும் கவர்ந்துவிடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x