Published : 26 Sep 2014 01:03 PM
Last Updated : 26 Sep 2014 01:03 PM
சீறிப்பாயும் பைக்குகளில் காற்றைக் கிழித்துகொண்டு பறக்கும் இளைஞர்கள், தங்கள் வண்டியை அழகாக மாற்றுவதில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர். தங்கள் பைக்குகளுக்குப் பல விதமான தீம்களில் ஸ்டிக்கர்களை ஒட்டும் டிரெண்ட் இப்போது ஹிட்டாக ஆரம்பித்துள்ளது.
முன்பெல்லாம், பைக்குகளை அழகாகவோ அல்லது வித்தியாசமானதாகவோ காட்டிக்கொள்ள சில பாகங்களை மாற்றுவார்கள் அல்லது சீரமைப்பார்கள். ஆனால், இப்போது கலக்கலான தீம்களில் இருக்கும் ஸ்டிக்கர்கள் தான் இளைஞர்களை அதிகம் கவர்கின்றன. கல்லூரி மாணவர்கள், பைக்கையே வாழ்க்கையாகக் கருதும் ரேஸர்கள் என இதனை விரும்பும் பலர் இருக்கின்றனர்.
மான்ஸ்டர்ஸ் தீம், பேட்மேன் தீம், பாந்தர் தீம், டேஞ்சர் தீம், ஸ்கல் தீம், ஃபயர் தீம், ஸ்போர்ட்ஸ் தீம் போன்றவை இந்த பைக் பிரியர்களின் விருப்பங்களாக இருக்கின்றன. “பொதுவாக, இப்போதைய பைக் ஸ்டிக்கர் டிரெண்டை இணையதளத்தில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்படும் ஸ்டிக்கர்களை வைத்துதான் தீர்மானிப்போம்.
பெரும்பாலும், வாடிக்கையாளர்களின் பைக் மாடலுக்கு ஏற்ற ஸ்டிக்கர்களை அவர்களுக்குப் பரிந்துரைப்போம். அதோடு, வாடிக்கையாளர்களும் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ற ஸ்டிக்கர்களை இணையதளத்தில் தேர்ந்தெடுத்து எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்” என்கிறார் புதுப்பேட்டையில் ஸ்டிக்கர் ஷாப் வைத்திருக்கும் விஜயகுமார்.
குறிப்பிட்ட தீம்கள் மட்டுமல்லாமல், வாழ்க்கை தத்துவங்களை சொல்லக்கூடிய வாசகங்கள் மற்றும் 'My dad’s gift , My bro’s gift ,My mom’s gift' போன்ற ஸ்டிக்கர்களும் அதிகம் விற்பனை ஆகிவருகின்றன.
“நாம் எப்படி டிசைன் டிசைனாக, மாடர்னாக உடை அணிகிறோமோ அதுபோலதான் பைக்குகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதும். யார் வித்தியாசமான ஸ்டிக்கர்கள், தீம்களை ஒட்டுகிறோம் என்பதில்கூட எங்களுக்குள் போட்டி இருக்கிறது. என்னோட பைக்குக்கு நான் பேட்மேன் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கேன்.
என் ஃப்ரெண்டு அதுக்குப் போட்டியாக ஃபயர் தீம் ஒட்டியிருக்கிறான்” என்கிறார் கல்லூரி மாணவர் சரத்குமார். இந்த ஸ்டிக்கர்கள் பெரும்பாலும் ரேடியமில் இருக்கும்படி பார்த்துவாங்குகிறார்கள். அப்போதுதான் அவை இரவிலும் எல்லோருக்கும் பளிச்சென்று தெரியுமாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT