Last Updated : 15 Mar, 2018 06:19 PM

 

Published : 15 Mar 2018 06:19 PM
Last Updated : 15 Mar 2018 06:19 PM

தமிழுக்கு கட் அவுட்!

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்த விஷயம்தான். இதில் தெரியாத விஷயம், ஆங்கில மொழியைத் தாண்டி, வட்டார மொழிகளிலேயே மொபைல் போன்களை அணுகுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டிருப்பதுதான் அது.

இந்தியாவில் இந்தி அரசு மொழியாக இருந்தாலும், தமிழ், கன்னடம், வங்கம், மராத்தி போன்ற வட்டார மொழிகள்தாம் ஸ்மார்ட் போன்களில் கோலோச்சி வருகின்றன. அண்மையில் கூகுள் நிறுவனமும் கேபிஎம்ஜி நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

2017 இறுதியில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் படி, இந்தி மொழியில் இணையத்தைப் பார்ப்பவர்களைவிடத் தமிழ் மொழியில் இணையதளத்தைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கையே அதிகம். தமிழ் மொழியில் உள்ள இணையதளங்களை 42 சதவீதம் பேரும், இந்தி மொழி இணையதளங்களை 39 சதவீதம் பேரும் பார்த்துள்ளனர் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் 8 முக்கிய மொழிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர், தமிழ் மொழியில் இணையத்தைப் பார்த்திருக்கின்றனர். இதில் பெருமிதமான விஷயம், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் 40 சதவீதம் என்ற எல்லையைத் தாண்டவில்லை.

இணையத்தில் தமிழ் மொழியின் அசுர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் தயாரிக்கும் நிறுவனங்கள், அதைத் தமிழில் உருவாக்கவும் ஆர்வம் காட்டிவருகின்றன. இதற்குச் சிறந்த உதாரணம், இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியான வாட்ஸ்அப், தமிழ் உட்பட 11 மொழிகளில் தனது சேவையை வழங்குகிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தை கையில் வைத்திருக்கும் ஃபேஸ்புக், தமிழ் உள்பட இந்தியாவின் 13 உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இது ஒரு புறம் என்றால், ஸ்மார்ட்போன்களிலும் தமிழின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை டைப் செய்வதற்கு மட்டுமின்றி, இன்றைக்குப் பலரும் தங்களின் ஸ்மார்ட்போன் மூலமாகவே தமிழ் உட்பட பல்வேறு பிராந்திய மொழிகளில் கதை, கவிதை, கட்டுரை, கருத்துகளை எழுதி, அதைச் சமூக ஊடங்களில் பதிவிட்டுவிடுகிறார்கள்.

2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளரின் எண்ணிக்கை சுமார் 30 கோடி. இந்த ஆண்டு அது 34 கோடியாகவும், 2022-ல் 44 கோடியாகவும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை உயரும்போது, அதைத் தாய்மொழியில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். அப்படிப் பார்க்கும்போது இணையம், ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியோடு சேர்ந்து தமிழ் மொழியின் பங்களிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x