Last Updated : 23 Mar, 2018 10:22 AM

 

Published : 23 Mar 2018 10:22 AM
Last Updated : 23 Mar 2018 10:22 AM

யூடியூப் உலா: வீக் எண்ட் அலப்பறைகள்!

 

வா

ரம் முழுவதும் வேலை வேலை என்று ஓடித் திரிபவர்களுக்கு ஒரு வார்த்தைதான் ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ எஃபக்ட் தரும். அது, ‘வீக் எண்ட்’. வாரத்திலேயே நமக்குப் பிடித்தமான நாட்கள் சனி, ஞாயிறுதானே! வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே ‘வீக் எண்ட் பிளான்’ போடும் இளைஞர்கள் அதிகம்.

இதையே கதைக் கருவாக வைத்து, ‘வீக் எண்ட் மச்சி’ என்ற இணையத் தொடரை இயக்குநர் கௌதம் வாசுதேவின் நிறுவனம் தயாரித்து யூடியூபில் வெளியிட்டுவருகிறது. நான்கு ‘பேச்சுலர்’ இளைஞர்களின் வாரக் கடைசி ஆட்டம், பாட்டம், ஆர்ப்பாட்டம், கொண்டாட்டம், கொட்டம் என அத்தனையும் கலந்த கலவைதான் ‘வீக் எண்ட் மச்சி’.

சனிக்கிழமையில் சோம்பல் முறித்து எழுந்திரிக்கவே பாதி நாளை விழுங்கும் நான்கு இளைஞர்களின் வீடு எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டுமா என்ன? சுவர் முழுவதும் போஸ்டர்கள். அதுவும் ஒரு பக்கம் ‘கரகாட்டக்காரன்’ நாயனம் செந்தில் கட்அவுட் என்றால் அதன் பக்கவாட்டில் பெரிய புத்தர் படம். நாலாபுறமும் கலைந்து கிடக்கும் துணி மணி, பொருட்களின் குவியல். தட்டு முட்டுச் சாமான்களோடு கிடந்து உருளும் நால்வர், எழுந்ததும் டி.வி.யில் எந்த சேனலைப் பார்க்கலாம், மேட்னி ஷோ என்ன படம் பார்க்கலாம் என்ற கருத்து மோதலில் தொடங்குகிறது இவர்களுடைய வார விடுமுறை நாள்.

இடையிடையே சண்டை பிடிக்கும் சாக்கில் முன்னாள் காதலனை வந்து பார்த்துக் கடிந்துவிட்டுப்போகும் முன்னாள் காதலியின் அன்புச் சீண்டல், பேச்சுலர் பார்ட்டி கொண்டாட்டம், நான்கு நாட்கள் சேர்ந்த மாதிரி கிடைத்த வார விடுமுறையை கோவாவில் உல்லாசமாகக் கழிக்கலாம் என்று திட்டம்போட்டு கடைசியில் சொதப்பல், டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்த உற்சாகத்தில் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆட்டம் என அச்சு அசலாக பேச்சுலர் பசங்களின் வார இறுதி கொண்டாட்டத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது இந்த சீரியல்.

தண்ணீர் பஞ்சம் பிடித்தாட்டும் சிங்காரச் சென்னையில் தங்களுடைய வீட்டின் கழிவறைக் குழாயைக்கூடக் கவனமாக மூடாத நம் இளைஞர்களின் அலட்சியத்தைப் போகிறபோக்கில் சுட்டிக்காட்டியது நல்ல ‘பஞ்ச்’.

இளைஞர்களின் சோம்பேறித்தனத்தை, சொதப்பல்களைப் பற்றி பெருமை பேசினாலும் ஆங்காங்கே குட்டி கருத்துகளும் சொல்லத் தவறவில்லை இத்தொடரை எழுதி இயக்கியிருக்கும் ஷமீர் சூல்தான். எவ்வளவுதான் சண்டை போட்டாலும், அவர்கள் தங்களை மறந்து மீண்டும் ஒன்றுகூடும் கணங்கள் இயல்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x