Published : 16 Mar 2018 11:41 AM
Last Updated : 16 Mar 2018 11:41 AM
‘ஒ
ட்டியாணம் போல...’ பாடலை யூடியூபில் கேட்டு, அந்தக் குரலில் மனதைப் பறிகொடுத்த நெட்டிசன்கள் ஆயிரக்கணக்கானோரின் விருப்பமான பாடகி ஸ்வாகதா. ‘எஸ்.பி.பி. 50’ கலை நிகழ்ச்சிகளுக்காக உலகத்தின் பல நாடுகளுக்குச் செல்லும் குழுவில் இடம்பெற்றுள்ள பாடகி இவர். தற்போது விஜய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘கரு’ படத்தில் இவர் பாடியிருக்கும் ‘ஆலாலிலோ...’ பாடல் மயிலிறகால் வருடும் தாலாட்டு! ‘மகளிர் மட்டும்’, ‘தொடரி’, ‘2.0’ ஆகிய படங்களில் நடித்திருக்கும், வளர்ந்துவரும் நடிகை மாயாவுடைய தங்கை இவர். ஓவர் டூ ஸ்வாகதாவின் பாட்டுப் பேட்டி...
“மதுரையில்தான் படிப்பை முடித்தேன். தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்று, அதே துறையில் சில காலம் பணியாற்றினேன். சிறு வயதிலிருந்தே முறையான கர்னாடக இசைப் பயிற்சி பெற்றேன். மறைந்த விஜயலஷ்மி ராமசேஷனிடம் கர்நாடக இசைப் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
இசைதான் என்னுடைய அடையாளம் என்பதை உணர்ந்தவுடன் 2010-ல் சென்னைக்கு வந்தேன். அகஸ்டின் பால் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் கிளாசிக் கற்றுக்கொண்டேன்” என்று சொல்லும் ஸ்வாகதா, லண்டன் ட்ரினிடி இசைக் கல்லூரியின் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.
‘ஸ்வாகதா அண்ட் ஃபிரண்ட்ஸ்’ என்னும் பெயரில் சொந்தமாக இசைக் குழுவை நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு. ஜாம் செக்ஷன், சுயாதீன இசை நிகழ்ச்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தியிருக்கிறார்.
“இப்படி நிகழ்ச்சிகள் நடத்திவந்த வேளையில்தான் எஸ்.பி.பி. அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ‘எஸ்.பி.பி. 50’ வோர்ல்ட் டூரில் இடம்பெற்றுப் பாட முடியுமா என்று கேட்டார்கள். அப்படித்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. விஷால் சந்திரசேகருக்கு டிராக் பாடிக் கொண்டிருந்தபோதுதான், விஜய்-விக்கி சகோதரர்களின் இசையில் ‘ஒட்டியாணம் போல...’ பாடலைப் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. அருமையான கிராமத்துக் காதல் பாட்டு அது ” என்றபடி அந்தப் பாட்டை ஹம் செய்து காட்டினார் ஸ்வாகதா.
“மேடையில் பாடுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆயிரக்கணக்கான மக்கள் முன் பாடும் சந்தோஷமே தனிதான். லைவ்வாக ஒருவர் பாடிவிட்டால் போதும்; பின்னணி பாடுவதில் சிரமம் இருக்காது என்பது என் கருத்து. இதுநாள்வரை யாரையும் இமிடேட் செய்து நான் பாடியதில்லை.
நான் பாடும் பாடல்களில் என்னுடைய ஸ்டைல்தான் தெரியும். பின்னணி பாடுவதற்குக் குரலில் தனித்தன்மை வேண்டும்.
அப்படி இருந்தால்தான் வாய்ப்புக் கிடைக்கும். ‘கரு’ படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். எனக்கு நல்ல நண்பர். அவருடைய இசையில் டிராக் பாடினேன். இயக்குநர் கேட்டுவிட்டு, குரல் புதிதாக இருக்கிறது... நான் பாடியதே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். தற்போது சாமிடமே மியூசிக் சூப்பர்வைசராகப் பணிபுரிகிறேன்” என்னும் ஸ்வாகதாவிடம் உங்கள் சகோதரி மாயாவைப் போல் நடிக்க வாய்ப்புகள் வரவில்லையா?” என்று கேட்டால்,
“வாய்ப்புகள் வந்தன. ஆனால், இசைதான் இப்போதைக்கு என்னுடைய சாய்ஸ்!" என்கிறார் தீர்க்கமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT