Last Updated : 02 Mar, 2018 11:07 AM

 

Published : 02 Mar 2018 11:07 AM
Last Updated : 02 Mar 2018 11:07 AM

பெண் எனும் பெரும்சக்தி: உழைக்கும் பெண்களின் உணர்வு

மு

றைப்படி கற்காமல், சுயமுயற்சியால் ஓவியங்கள் வரைய கற்றுகொண்டு, மாநில அரசின் சிறந்த ஓவியர் விருது வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரம்யா சதாசிவம். எம்பிஏ பட்டதாரியான ரம்யா, ஓவியக் கலையின் மீதிருக்கும் காதலால், மார்க்கெட்டிங் துறையில் செய்துகொண்டிருந்த பணியை விட்டுவிட்டு, முழுநேர ஓவியராக மாறியிருக்கிறார்.

ஓவியத்தின் மீது இந்த அளவுக்கு எப்படி ஈர்ப்பு வந்தது என்று கேட்டால், “சிறுவயதில் என் அம்மா ‘வாட்டர் கல’ரில் வரைந்திருந்த ஓர் இளவரசியின் ஓவியத்தைப் பார்த்துதான் ஓவியக் கலையின் மீது எனக்கும் ஆர்வம் வந்தது. பள்ளிக் காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது ஓவியங்கள் வரைவேன்.

ஆனால், ஓவியக் கலையை முழுநேரப் பணியாக அமைத்துக்கொள்வது பற்றிய கேள்வி இருந்தது. அதனால், எம்பிஏ முடித்துவிட்டு, ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ துறையில் சில காலம் பணியாற்றினேன். ஆனால், அந்தப் பணியில் மன திருப்தி கிடைக்கவில்லை. அப்போதுதான் ஓவியக் கலையில் கவனம் செலுத்துவது எனத் தீர்மானித்தேன். யூடியூப்பில் ஓவியங்களை வரைவதற்கான பாடங்களைப் பார்த்தே ஓவியங்கள் வரைய கற்றுக் கொண்டேன்” என்கிறார் ரம்யா.

மனித உருவங்களே இவரது படைப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அத்துடன் உழைக்கும் பெண்களை ஓவியங்களாகப் பதிவுசெய்வதில் இவர் அதிக கவனம் செலுத்துகிறார். “பொதுவாகவே, பெண்களை வரைவது எப்போதுமே அழகான அனுபவமாக இருக்கும். அதிலும், உழைக்கும் பெண்களின் உணர்வுகளைப் பதிவுசெய்வது இன்னும் சுவாரசியமானது. உழைக்கும்போது அவர்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு உணர்வுதான் என் ஓவியங்களுக்கான அடிப்படை” என்கிறார் ரம்யா.

இவரது ஓவியங்கள் பெரும்பாலும் எண்ணெய் வண்ண ஓவியங்களாகவே இருக்கின்றன. 2016-ம் ஆண்டில் ‘தமிழ்நாடு சிறந்த ஓவியர்’ விருதைப் பெற்றிருக்கிறார் இவர். அடுத்ததாக, பெண்கள், திருநங்கைகளை ‘லைவ் மாடல்’களாக வைத்து ஓவியங்கள் வரையத் திட்டமிட்டிருக்கிறார். மக்களை ஈர்க்கும் வகையில் புதிய ஓவிய வழிமுறைகளை மேற்கொள்ளவும் முயற்சித்துவருகிறார்.

ramyajpgரம்யாright

“இன்றைய காலக்கட்டத்தில் ஓவியர்கள் தங்கள் படைப்புகளை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், சிறந்த ஓவியர்கள்கூட தங்கள் படைப்புகளை விளம்பரப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. இந்தியாவில் ஓவியர்களுக்கான சந்தை இல்லை.

ஆனால், ஆன்லைன் ஓவிய விற்பனைத் தளங்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஓவியர்கள் படைப்புகளை விற்பனை செய்யலாம். ஓவியர்களின் படைப்புகளை விளம்பரப்படுத்த ஒரு ‘ஆன்லைன் போர்ட்டல்’ உருவாக்கவேண்டும் என்பதே என் லட்சியம்” என்கிறார் ரம்யா.

ரம்யாவின் ஓவியங்களைப் பார்க்க: www.ramyasadasivam.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x