Published : 29 Sep 2017 12:33 PM
Last Updated : 29 Sep 2017 12:33 PM
நினைத்துப்பார்க்கிற யாவுமே உயிரின் வேரை நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்! என்னுடைய அன்பு மாணவன் தென்பத்து தெ.ஆறுமுகம் என்றும் மறக்க இயலாத மகாநதியாக மனதுக்குள் 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறான்.
அப்போது 1998-ம் ஆண்டு. முதலாம் ஆண்டு வரலாறு வகுப்பு. முந்தைய நாள் வகுப்பு முடியும் நேரம் ‘என் வேர்’ என்கிற தலைப்பில் “ஆறுமுகம் நாளை நீ பேசவேண்டும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். கிராமத்துப் பள்ளியில் பயின்ற ஆறுமுகத்தின் கூச்சத்தையும் தயக்கத்தையும் ஒரு வாரமாய் கவனித்து அவனைப் பேசச் சொன்னேன். அன்று மதியம் துறை அலுவலகத்துக்கு வந்தான். “ஐயா, நான் கிராமத்து மாணவன். எனக்கு யார் முன்னும் பேசிப் பழக்கமில்லை. இயல்பாக ஊரில் நான் பேசும் முறையில் பேசினால் எல்லோரும் சிரிப்பார்கள்” என்றான். “பரவாயில்லை சிரிக்கட்டும். ஆனால், நாளை எல்லோர் முன்னும் நீ பேசியே ஆக வேண்டும்” என்றேன்.
பேசவைத்த பேச்சு
மறு நாள் தமிழ் வகுப்பறையில் தன் வேராய் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் தன் கிராமமான தென்பத்து கிராமம் குறித்து அழகான நெல்லை வட்டாரச் சொற்களோடு மிக இயல்பாக வர்ணித்து பேசினான் ஆறுமுகம். ‘ஊரின் அருகில் குறுக்குத்துறைத் தாமிரபரணிக் குளியல், சொக்கட்டான் தோப்பு இளவட்டக் கல், அவன் பராமரிக்கும் மாடுகள், அது கன்று ஈன்ற நாளை காலண்டர் அட்டையில் குறித்து வைத்து அதன் பிறந்தநாள் கொண்டாடும் பழக்கம், மண்புழு உரம் தயாரிப்பதற்கும் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்க தன் கிராமத்தார்களுக்குத் தான் வழங்கும் பயிற்சி, கரகம், காவடி, கும்மி, பறை, காளி நடனத்தில் தனக்குள்ள பயிற்சி என்று அவன் தன்னை மறந்து என் வேர் இதுதான்’ என்று அவன் பேசியதை முதலாமாண்டு வரலாறு, ஆங்கில இலக்கிய மாணவர்கள் இமைக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதன்பின் அவனை இளைஞர் நலத் துறை மற்றும் கவின்கலை மன்றத்தின் மாணவப் பொறுப்பாளராகப் பொறுப்பு தந்து ஊக்கப்படுத்தினோம்.
நெல்லை மருத்துக் கல்லூரி நடத்திய ‘பீமர்-99’ மாணவர் கலைவிழாவுக்கு அழைத்துச் சென்றோம். குற்றாலக் குறவஞ்சிக் குறத்தியாய் பெண் வேடமிட்டு ஆறுமுகம் மேடை ஏறினான். நடுவர்களுக்கே கைரேகை பார்த்து ஜோசியம் சொன்னான். அரங்கம் அதிர மாறுவேடப் போட்டியில் முதலிடம் பெற்றான்.
சமூக விழிப்புணர்வு
ஒரு புறம் தேசிய அளவில் நாடகம், நாட்டுப்புறப் பாடல், நாட்டார் கலைகள் என சிறகுகள் விரித்து சென்று விருதுகளை வாங்கிக் குவித்துக்கொண்டிருந்தான். இன்னொரு புறம் கிராமத்து இளைஞர்களைக் கொண்டு கலைக்குழுவை உருவாக்கி மாலை நேரங்களில் ரத்ததானம், தாமிரபரணி ஆறு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று வரிசையாய் விழிப்புணர்வுக் குறுநாடகங்களைத் தானே எழுதி நடிக்கத் தொடங்கினான். நாளொரு கலையும் பொழுதொரு நிகழ்ச்சியுமாக அவன் கல்லூரி நாட்கள் பொருள்பொதிந்த நந்தவன நாட்களாய் நகர்ந்தன.
ஒரு நாள் வகுப்பறையில் நெல்லையில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியின் நிலைகுறித்து வருத்தத்துடன் பேசினான். அதற்கு மறுநாள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திறமைத் திருவிழாவை இளைஞர் நலத் துறை சார்பில் அறிவித்தது. மாணவர்களைத் தங்களைச் சுற்றி நடக்கும் சமூக நிகழ்வுகளை எவ்வாறு கண்டுகொள்கிறார்கள் என்பதைக் கண்டறிய களஆய்வு செய்து அறிக்கை தரும்படி அறிவித்தது. “நேற்று வகுப்பில் நான் பேசியபோது குறிப்பிட்ட பாடகசாலை என்கிற கிராமத்தில் உள்ள பாடசாலை பாடாவதியாய் உள்ளது ஐயா. அதுபற்றி களஆய்வு செய்து அறிக்கை தரவா” என்றான். கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று அனுப்பிவைத்தோம்.
பள்ளிக்கு கிடைத்த வாழ்வு
ஒரு வாரம் கழித்து வகுப்புக்கு ஒரு கண்ணாடி பாட்டிலோடு வந்தான். ஆறுமுகம் என்ன சொல்லப் போகிறான் என்று மாணவர்க்ள் ஆர்வத்தோடு காத்திருந்தார்கள். “கீழே விழப் போகும் மண்சுவர், கூரை வழியே உள்நுழையும் மழைத் தாரை, இரவு நேரம் மாட்டுத் தொழுவமாகும் பள்ளிக் கூடம்,
தவறாது வகுப்புக்கு வரும் பாம்புகள், தேள்கள். இதோ அந்தப் பள்ளியில் நேற்று நாங்கள் பிடித்த பாம்பு” என்று வகுப்பில் சொல்ல அனைவரும் அரண்டுபோனோம். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாணவர் தென்பத்து ஆறுமுகம் அந்த அறிக்கையைத் தான் பிடித்த பாம்போடு விளக்கிப் பேச, அடுத்தநாள் நெல்லை நாளிதழ்களில் அது முக்கியச் செய்தியானது.
செய்திகளின் மூலம் அரசின் பார்வைக்குப் போனது. பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் அந்தப் பள்ளியைப் பார்வையிட்டார்கள். உடனே கட்டட நிதி ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி நகரத்துக்கு அருகே உள்ள பாடக சாலை கிராமத்தில் பாடாவதியாய் கிடந்த பாடசாலை தெ.ஆறுமுகத்தின் இருபதுபக்க ஆய்வறிக்கையால் புத்துயிர் பெற்றது. அடுத்த ஆண்டில் அழகான பள்ளிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட செய்தியை ஆறுமுகம் சொன்னான். அதைக் கேட்டபோது மாண்புமிகு மாணவனாக தென்பத்து ஆறுமுகம் எனக்குத் தெரிந்தான்.
கட்டுரையாளர்: பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT