Last Updated : 19 Sep, 2014 01:36 PM

 

Published : 19 Sep 2014 01:36 PM
Last Updated : 19 Sep 2014 01:36 PM

எது சொர்க்கம்?

‘ச்சீ... கை டர்ட்டி ஆகிடும்’ என்று சொல்லாமல் மதுரை விளாங்குடி, ரெயிலார் நகர், கூடல்நகர் பகுதிகளில் வீதியெல்லாம் அலைந்து பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கிறார்கள், பாத்திமா கல்லூரி மாணவிகள்.

சாக்கடை, நாற்றமெடுத்த குப்பை என்றாலும் அருவருப்படையாமல், கையுறை அணிந்து அவற்றைப் பொறுக்குகிறார்கள். ஒரு நாள் கூத்தாக அல்ல, வாரந்தோறும். அது மட்டுமின்றி, இது போன்ற மட்காத குப்பைகளை தனியே போட்டு வைக்கும்படி, வீடுதோறும் தனி பைகளை வழங்கிவிட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் வீடுகளுக்கே சென்று அவற்றை சேகரித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஏன் இந்த வேலை என்றுதானே நினைக்கிறீர்கள்? இவ்வாறு சேகரிக்கப்பட்ட குப்பைகளைக் கல்லூரியின் ஒரு ஓரத்தில் குவித்து வைத்து பாலித்தீன் பை, பிளாஸ்டிக் கப், குடிநீர் மற்றும் குளிர்பான கேன்கள், டெக்ஸ்டைல் கவர்கள் என்று தரம் பிரித்துப் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்புகிறார்கள்.

ஆக, கல்லூரிச் சாலை மட்டுமின்றி அந்த ஏரியாவே பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பகுதியாக மெல்ல மெல்ல மாறிவருகிறது. பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்துவது, துண்டு பிரசுரங்களை வழங்குவது போன்ற வேலைகளையும் இம்மாணவிகள் சப்தமில்லாமல் செய்து வருகிறார்கள்.

“முதலில் எங்கள் கல்லூரியை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்ற நினைத்துத்தான் ‘விரிவாக்க செயல்பாட்டுக் குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். ஏராளமான மாணவிகள் ஆர்வமாக முன்வந்ததைத் தொடர்ந்து கல்லூரியை மையமாக வைத்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுவரை இந்தப் பணிகளை விரிவுபடுத்தினோம்.

1,042 மாணவிகள் இந்தப் பணியில் ஈடுபடுவதால், நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளது”, என உற்சாகத்தோடு சொல்கிறார் கல்லூரியின் துணை முதல்வர் சகோதரி பாத்திமா மேரி.

இந்தச் சேவையில் ஈடுபடுவது குறித்து மாணவி ரஞ்சனி கூறுகையில், “வீதியில் இறங்கி பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகளை எடுக்குறப்ப ஒன்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன். தூக்கி எறியுறது ரொம்ப ஈஸி... ஆனா திரும்ப எடுக்கிறது அவ்வளவு ஈஸி இல்லைன்னு. இந்த எண்ணம், தனிப்பட்ட முறையில என்னோட வாழ்க்கை முறையையே மாத்திடுச்சு.

இப்ப நானும், என் வீட்டாரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிஞ்சளவு குறைச்சுட்டோம். கடைகளுக்குச் சென்றால்கூட, துணி அல்லது காகிதப்பை எடுத்துட்டு போறோம். நாங்க கஷ்டப்படுறதைப் பார்த்து, இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் சிலரும் தன்னார்வத்துடன் ஒத்துழைக்க ஆரம்பிச்சிருக்காங்க.

இத்தனை நாள் களப்பணியில் கிடைத்த அனுபவத்தை வச்சு, அரசாங்கத்திற்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்க ஆசைப்படுகிறேன். பாலத்தீன் பைகளுக்கு மாற்றாக காகித பை கண்டுபிடித்ததைப் போல, வாட்டர் கேன்களுக்குப் பதில் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பில்லாத மாற்றை கண்டுபிடிங்க, ப்ளீஸ்” என்கிறார்.

பிளாஸ்டிக் இல்லாத உலகம்தான் சொர்க்கம் என்பதைப் புரிந்துகொண்டாலே போதும், எல்லாமே மாற ஆரம்பித்து விடுமில்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x