Published : 26 Sep 2014 01:10 PM
Last Updated : 26 Sep 2014 01:10 PM
செல்ஃபி நம் அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி இருக்கிறது. எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும் அதை செல்ஃபிக்கள் இல்லாமல் யாரும் இப்போது கொண்டாடுவதில்லை. சந்தோஷமாக இருந்தாலும் செல்ஃபி, சோகமாக இருந்தாலும் செல்ஃபி, குழப்பத்தில் இருந்தாலும் செல்ஃபி, சிரித்தாலும் செல்ஃபி, அழுதாலும் செல்ஃபி என செல் முழுக்க நம் செல்ஃபிக்களால் நிரம்பி வழிகிறது.
ஆனால், பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் செல்ஃபி பற்றிய ஆய்வு முடிவுகள் நம்முடைய செல்ஃபி பழக்கத்தைப் பரிசீலிக்கச் சொல்கிறது.
சமூக வலைதளங்களில் அதிகமாக செல்ஃபி பகிர்பவர்களுக்கு நெருங்கிய உறவுகளிடம் பிரச்சினை வருவதாக அந்த ஆய்வு சொல்கிறது. பேஸ்புக்கில் அதிகமான லைக்குகளை அள்ளும் செல்ஃபிக்களால் நிஜ வாழ்க்கை உறவுகள் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
“தொடர்ந்து செல்ஃபி பகிர்பவர்களைச் சுற்றி இருப்பவர்களால் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை” என்கிறார் பர்மிங்கம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் ஹாஃப்டன்.
எந்தளவுக்கு அதிகமாக செல்ஃபிக்கள் பகிரப்படுகின்றனவோ, அந்தளவுக்குச் சுற்றி இருப்பவர்களின் ஆதரவை அது குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
“நாம் நம் நண்பர்களுக்காக ஃபேஸ்புக்கில் பகிரும் படங்கள் பல தரப்பினரைச் சென்றடைகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் உங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கும் பல்வேறு குரூப்பில் இருப்பவர்களுடன் அந்தப் படங்கள் பகிரப்படுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது” என்கிறார் ஹாஃப்டன்.
அதே மாதிரி, குடும்பத்தினருடன் இருக்கும் செல்ஃபிக்களைவிட நண்பர்களுடன் இருக்கும் செல்ஃபிக்கள் அதிகமாகப் பகிரப்படும்போது, அது தம்பதிகளின் உறவை அதிகளவில் பாதிக்கிறது.
“இளம்பெண்களின் செல்ஃபிக்களுக்கு ஃபேஸ்புக்கில் கிடைக்கும் வரவேற்பு, ஆண்களுக்கும், மற்ற வயதினருக்கும் கிடைப்பதில்லை” என்று அந்த ஆய்வு முடிவு சொல்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT