Last Updated : 01 Aug, 2014 12:00 AM

 

Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

சர்ப்ரைஸ், சந்தோஷம், பார்ட்டி, கொண்டாட்டம்!

ஆச்சரியம் தரும் சந்தோஷ நிமிடங்களை ஆச்சரியத்தைக் கொடுத்தவராலும் சரி, அதை அனுபவித்தவராலும் சரி மறக்கவே முடியாது. எப்போதும் பசுமையாக நினைவில் தேக்கி வைக்கக்கூடிய அத்தகைய அனுபவம் யூத் அகராதியின் தனி ‘கிக்’.

‘சர்ப்ரைஸ் பார்ட்டிகள்’தான் இன்றைய டிரெண்டிங் கல்சர் என்கின்றனர் இளைஞர்கள்.

அவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது, பிறந்தநாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடுவது, 12 மணிக்கு போனில் வாழ்த்துச் சொல்வது, பின்னர் 12 மணிக்கு குடும்பத்தாருடன் கேக் வெட்டுவது என்ற பர்த் டே கொண்டாட்டங்களின் காலம் காற்றில் கலந்துவிட்டது. இப்போதெல்லாம் இந்த சர்ப்ரைஸ் பார்ட்டிகளே ஜமாய்க்கின்றன.

சரி, எப்படித்தான் இந்த சர்ப்ரைஸ் பார்ட்டிகள் கொண்டாடப்படுகின்றன எனச் சென்னையைச் சேர்ந்த எஸ். சிந்துவிடம் கேட்டோம்.

பொதுவாக ஐ.டி. துறை, எம்.என்.சி.களில் பரவிய இந்தக் கலாசாரம் மெல்ல, மெல்லக் குடும்பங்களிலும் புகுந்துள்ளது என்றும் பிறந்தநாள், திருமண நாள், புதிய வேலை, வேலையில் புரொமோஷன் என சர்ப்ரைஸ் பார்ட்டிகளின் எல்லை பரந்து விரிந்துள்ளதாகவும் சிந்து கூறுகிறார்.

“என் பிறந்தநாளன்று என் நண்பர்கள் எனக்காக ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்தவர்கள், என் உயர் அதிகாரிகள் சிலரை வரவழைத்து என்னைப் பற்றி 5 நிமிடங்களுக்கு அவர்களைப் பேச வைத்தார்கள். எனக்கு அது ஆச்சரியமாகவும், சுவாரசியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்று குதூகலிக்கிறார் சிந்து.

தன் தோழி ஒருவரின் பிறந்தநாளன்று ‘டிரஷர் ஹண்ட்’ (புதையல் வேட்டை) விளையாடியதையும் சிந்து குறிப்பிடுகிறார். அந்தப் பெண்ணின் வண்டியில் ஒரு குறிப்பு வைத்துவிட்டார்கள். அந்தக் குறிப்பில் உள்ள செய்தியைப் படித்தால் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போயாக வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

இப்படியே அந்தப் பெண்ணை விரட்டிக் கடைசியாக விமான நிலையத்திற்கு வரவழைத்துவிட்டார்கள் நண்பர்கள். “அங்கே அவருக்கு கிஃப்ட் எல்லாம் கொடுத்து சர்ப்ரைஸ் பார்ட்டியைக் கொண்டாடினோம்” என்று உற்சாகத்துடன் தெரிவிக்கிறார் சிந்து.

சர்ப்ரைஸ் பார்ட்டிகளுக்குப் பல முகங்கள் உள்ளன. இவற்றைக் கொண்டாடும் வயதினரையும், அவர்களது பணிச் சூழலையும் பொறுத்து இவற்றின் தன்மை மாறுகிறது. பெங்களூரில் கல்லூரி விடுதியில் தங்கிப் பொறியியல் படிக்கும் மாணவி ரேணுகா, பெங்களூரில் இது ரொம்ப பிரபலம் என்கிறார்.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் என் நண்பர்கள் எனக்காகவும் அவர்கள் பிறந்தநாளுக்கு நானும் சர்ப்ரைஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வோம் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், அந்த பார்ட்டியில் நம்மை மகிழ்விக்கப்போகும் பரிசு என்ன என்பதுதான் சர்ப்ரைஸ் என்கிறார்.

விடுதியில் இருக்கும் தன்னைப் போன்ற ஸ்டூடண்ட்ஸுக்கு இத்தகைய பார்ட்டிகள் இமோஷனல் பூஸ்ட் தருகின்றன என்று கூறும் ரேணுகா, “நான் கல்லூரி முடிந்து திரும்பியபோது விடுதி அறை வரையிலும் வண்ண மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தது ரெட் கார்பெட் வெல்கம் போல் இருந்தது. அறை முழுவதும் பலூன், பொம்மைகள், சாக்லேட், கிப்ட் என நிரப்பி வைத்திருந்தது ஒரு ஸ்பெஷல் ஃபீல்” என சிலாகிக்கிறார்.

தன்னால் மறக்க முடியாத ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி, தனது கல்லூரித் தோழி ஒருவருக்கு வகுப்பில் இருந்த அனைவரும் சேர்ந்து பெர்சியன் பிரீட் பூனைக் குட்டி வாங்கிக் கொடுத்ததுதான் என்பதை அவர் நினைவுகூர்கிறார். “அப்போது தோழியின் கண்களில் கண்ட மகிழ்ச்சியும், முகத்தில் தெரிந்த நெகிழ்ச்சியும்.... சான்சே இல்லை. வொர்த் எ மில்லியன் டாலர்” என்று துள்ளிக் குதிக்கிறார்.

நிறுவனங்களின் கொண்டாட்டம்

சில ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடைய பிறந்தநாளில், அனைவரையும் கேஃபடேரியாவில் ஒருங்கிணைத்து விலை உயர்ந்த கேக் வெட்டிக் கொண்டாடுகின்றன. சென்னையில் ஃபோயர் டெக்னாலஜிசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விவேக், தனக்கு நேர்ந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது என விவரிக்கிறார்.

பிறந்தநாளன்றும் வழக்கம் போல் கணினி முன் பணியில் இருந்த அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நண்பர் உடனடியாக பீச்சுக்கு வரச் சொல்லியுள்ளார்.

அவர் அங்கே சென்றபோது, விவேக்கின் நெருங்கிய உறவினர்கள், கல்லூரித் தோழர்கள், உடன் பணியாற்றும் உற்ற நண்பர்கள் என 20 பேர் அங்கே திடீரெனத் தோன்றியுள்ளனர். கடற்கரைக் காற்றைச் சுவாசித்தபடி பிறந்தநாளைக் கொண்டிய சர்ப்ரைஸ் என்றும் நினைவைவிட்டு அகலாது எனப் பூரித்துப் போகிறார் விவேக்.

பர்த்டே, சர்ப்ரைஸ் பார்ட்டி எல்லாமே மேற்கத்திய கலாச்சாரம் என்றாலும், நமக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்பதால் அதை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

‘நீ கோரினால் வானம் மாறாதா' என்ற பாடலில் பிறந்தநாளுக்கான ஒரு டிரஷர் ஹண்டின் சுவாரஸ்யம் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

அதைவிட அழகாகவே நிறைய ஆச்சரியங்களை அளித்து உறவினர்களையும், நண்பர்களையும் குதூகலம் அடையச் செய்வதுதான் இந்த ‘சர்ப்ரைஸ் பார்ட்டி’யின் ஸ்பெஷல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x