Published : 22 Aug 2014 10:00 AM
Last Updated : 22 Aug 2014 10:00 AM

யாரு வச்ச பேரு?

சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களுக்குப் பேர் வச்சி பார்க்கறதுதான் அப்படீங்கற உயரிய கொள்கையோடதான் எங்க கல்லூரி நாட்கள் நகர்ந்தன. ஒவ்வொருத்தருக்கும் அவங்க வீட்ல காரணத்தோட பேர் வச்சாங்களோ இல்லையோ, நாங்க வைக்கிற பேருக்குப் பின்னாடி நிச்சயம் ஹிஸ்டரி, ஜியாகரஃபி எல்லாமே… அவ்ளோ ஏன் ஜுவாலஜிகூட இருக்கும்.

நான் படிச்சது விமன்ஸ் காலேஜா இருந்தாலும் கோ-எட் காலேஜையே தூக்கிச் சாப்பிடுற அளவுக்கு அலப்பறை அள்ளும். பஸ்ல எங்களோட வர்ற சீனியர் அக்காஸ்கிட்டே ஆரம்பிச்சு, காலேஜ்ல பாவமா இருக்கற அட்டெண்டர்ஸ் வரைக்கும் பேர் வச்ச பரம்பரை நாங்க.

எப்போ பார்த்தாலும் அடிக்கிற கலர்லயே புடவை கட்டிக்கிட்டு வந்து எங்க கண்ணைக் கடுப்பேத்தறது மட்டுமில்லாம, நுனிநாக்கு இங்கிலீஷ்ல பேசறேன்னு எங்க பேருங்களை எல்லாம் எகனை மொகனையா உச்சரிச்சு வெறுப்பேத்தற இங்கிலீஷ் மேம்தான் எங்ககிட்டே இருந்து முதல் பட்டப் பெயரைப் பெற்ற பாக்கியசாலி.

இண்டர்நேஷனல் லெவல்ல பேசுற அவங்களுக்கு லோக்கலா பேர் வச்சாதானே நல்லா இருக்கும்? அதனால ‘கோவிந்தம்மா’ன்னு அம்சமா

ஒரு பேர் வச்சோம். அடுத்தாப்புல எங்க ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மேம். கெமிஸ்ட்ரி லேப்ல எப்படிப் பாதுகாப்பா இருக்கணும்னு சொல்லும்போதே அதை ஊத்தினா இப்படி வெடிச்சிடும், இதைக் கலந்தா இப்படி தெறிச்சு கண்ணு தெரியாம போயிடும்னு களேபரப்படுத்தி காலராவை வரவைப்பாங்க. அதனால அவங்களுக்கு ‘தம்பி இது ரத்த பூமி’ன்னு பேர் வச்சோம்.

ஜுவாலஜி மேம், குட்டி குட்டி பூச்சி அப்படின்னு சொல்ல வேண்டியதை குச்சி குச்சி பூச்சின்னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு மழலையோட தமிழை உச்சரிக்கிற அவங்க அருமை பெருமைக்குக் கண்டிப்பா கோயில் கட்டிதான் கும்பிட்டு இருக்கணும்.இருந்தாலும் எங்க தகுதிக்கு ஏற்ப ‘குச்சி ஐஸ்’னு பேர் வச்சோம்.

பஸ்ல வர்ற ஒரு சீனியர் அக்கா, தலையில பூ வச்சிக்கிட்டு வரச் சொன்னா, பூக்கடையையே வச்சிக்கிட்டு வருவாங்க. அதனால அவங்க ‘நடமாடும் பூக்கடை’யா மாறிட்டாங்க. நாங்க அதையே செல்லமா சுருக்கி என்.பி.ன்னு கூப்பிடுவோம். அக்காவும் ஏதோ நாங்க எல்லாம் புகழறதா நெனைச்சு சிரிப்பாங்க. நாங்க படிச்ச பாடங்கள்ல வர்ற வார்த்தைகளைக்கூட எங்களுக்குச் சாதகமாவே பயன்படுத்திக்குவோம்.

சாம்பிராணியோட கெமிக்கல் பேர் பென்சோயின். அதனால அடிக்கடி பல்பு வாங்கற பொண்ணுங்களை மட பென்சோயின்னு திட்டுவோம்.

நம்ம உடம்புல இருக்கற செல்லில் இருக்கற மைட்டோகாண்ட்ரியாங்கற நுண் உறுப்பு செருப்பு மாதிரி இருக்கும். அதனால எவளையாவது பயங்கரமா திட்டணும்னா மைட்டோகாண்ட்ரியாவால அடிவிழும்னு சொல்லுவோம்.

சிலருக்கு எல்லாம் அவங்க சொந்த ஊரே அவங்களுக்கு நல்ல பேரை வாங்கிக் கெடுத்துடும்... சாரி கொடுத்துடும். அந்த வகையில மதுரை மயிலாத்தா, ராணிப்பேட்டை ரங்கநாயகி, திருவண்ணாமலை திருநடனநாயகி, ஆற்காடு அதிவீர கருப்பாயி, பொன்னை பொன்னுத்தாயி போன்ற பெயர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

இப்பவும் நாங்க எல்லாம் சந்திச்சிக்கிட்டா போதும். நாங்க பேசுற பேச்சு புரியாம சுத்தி இருக்கற எட்டுப்பட்டி ஜனங்களும் தெறிச்சு ஓடுவாங்கன்னு நான் சொல்லித்தான் உங்களுக்குப் புரியணுமா?

- இப்படிக்கு முன்னாள் கல்லூரி மாணவி
மதிப்புமிகு சிப்காட் சிங்காரி.

பெயர் சூட்டு விழா

என்ன ப்ரெண்ட்ஸ்... உங்க கல்லூரி நாட்களில் நீங்க இப்படி யாருக்காவது பெயர் சூட்டியிருக்கலாம். அல்லது சூட்டப்பட்டு இருக்கலாம். அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x