Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM
வேறென்ன விசேஷம் என்று கேட்ட தலைமுறை போயே போச்சு. இது வாட்ஸ்அப் காலம். நொடிக்கொரு முறை ஃபேஸ்புக் அப்டேட், வாட்ஸ் அப் ஃபோட்டோ ஷேரிங் என இளைஞர்கள் நெட்டில் 24 மணி நேரமும் சுற்றுகிறார்கள். ஃபேஸ்புக்கில் லைக்கோ ட்விட்டரில் ரீட்வீட்டோ இல்லையென்றால் வாடிப்போய் விடுகிறார்கள். சிலர் என்ன போட்டாலும் போடுறதுக்கு முந்தியே லைக்குகள் விழுந்துவிடுகின்றன.
ஆனால் நமக்கு அப்படி இல்லையே என வாடும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி வருந்துபவர்களும் ஃபேஸ்புக் லைக்குகளை அள்ளலாம்; லைஃபில் ஜாலியா இருக்கலாம். அதுக்குப் பெரிய திறமை எல்லாம் தேவையில்லை. ரொம்ப சிம்பிளா வேலையை முடிச்சிடலாம்.
முதல் வழி ஓல்டுதான்; பட் கோல்டு. கஜினி வழியில் போயிர வேண்டியதுதான். அவரு உடம்பு முழுவதும் எழுதி வைப்பாரே அதே மாதிரி ஃபேஸ்புக் பூராவும் எழுதிவைக்கணுமான்னு கேக்கறீங்களா? கஜினின்னாலே சூரியாதானா? அதுக்கும் முன்னால நமக்கு ஒரு கஜினி தெரியுமே.
கொஞ்சம் யோசிங்க. கூகுளில் தேடுங்க. கண்டுபிடிச்சீட்டிங்க இல்லையா? கஜினி முகம்மது என்பது சரிதான். படையெடுங்க. டெய்லி படையெடுங்க. எதையாவது ஃபேஸ்புக்ல போட்டுட்டே இருங்க. முதலில் லைக்குகள் பெரிசாக் கிடைக்காது. ஆனால் போகப்போக நிலைமை மாறும். தொடர்ந்து லைக்குகள் விழுந்துகொண்டே இருக்கும்.
அடுத்து ஈவு இரக்கமே இல்லாமல் லைக்குகளைப் போட்டுத் தாக்குங்க. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, வந்தவங்க, போனவங்க, ஃப்ரண்ட், ஃப்ரண்டோட ஃப்ரண்டுன்னு ஒருத்தரயும் விடாதீங்க. எதைப் பார்த்தாலும் லைக்கைப் போடுங்க.
விரோதியைக்கூட விட்டுவைக்காதீங்க. லைக்குகள எவ்வளவுக்கு எவ்வளவு போடுறீங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு லைக்குகள் குவியும். நீங்களே ஆச்சரியப்படுற அளவுக்கு ஃபேஸ்புக்கத் திறந்தாலே லைக் நோட்டிஃபிகேஷன் நிரம்பி வழியும்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கைப்புள்ள சங்கம், பாட்டுப் பாடுற பாவனா ரசிகர் மன்றம், வொரிலெஸ் கேங் போன்ற ஒரு குரூப்பையும் விடாம எல்லாத்திலும் மெம்பரா சேர்ந்துடுங்க.
இப்ப உங்களுக்கு தனியா பெரிய குரூப்பே சேர்ந்துரும். பிறகென்ன நீங்கதான் விஐபி. உங்களத் தெரிஞ்சவங்க நிறையப் பேரு அப்புறம், வந்துருவாங்க. நீங்க என்ன போட்டாலும் லைக்குகளப் போட்டுத்தானே ஆகணும்.
சினிமா, கிரிக்கெட்டுன்னு எல்லாத்துலயும் கரண்டா கலக்குற ஆளுங்களப் பற்றிய சூடான செய்திகளைச் சுடச்சுட போஸ்ட் பண்ணுங்க. நியூஸ்பேப்பரவிட ஃபாஸ்டா இருக்கியேடா மாப்ளேன்னு, உங்க ஃப்ரண்ட்ஸே உங்களுக்கு கமெண்ட்டுகளப் போட்டுத் தாக்குவாங்க.
சித்தார்த், சூர்யா, சிவகார்த்திகேயன்னு போஸ்ட் போட்டா உங்க கேர்ள்ஃப்ரண்ட்ஸ் குஷியாயிருவாங்க. கலர் ஃபுல்லான எந்த பொண்ணுங்க போட்டோவப் போட்டாலும் பாய் ஃப்ரண்ட்ஸ் ஜாலியாயிருவாங்க. பிறகென்ன லைக்குகள் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமே. நீங்களும் ஆனந்தக் கண்ணீர் விடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT