Published : 24 Aug 2018 09:20 AM
Last Updated : 24 Aug 2018 09:20 AM
நீங்கள் பயண ஆர்வலராக இருந்து புத்தகப் பிரியராகவும் இருந்தால் 'டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்திவிடும். ஏனெனில், இந்தத் தளம் பயணங்களின்போது படிப்பதற்கு ஏற்ற புத்தகங்களைப் பரிந்துரை செய்கிறது. அந்த வகையில் பயணிகளுக்கான ‘புத்தக வழிகாட்டி’ என்று இதை வர்ணிக்கலாம்.
இணையத்தில் அருமையான புத்தகப் பரிந்துரை இணையதளங்கள் பல இருக்கின்றன. இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ‘டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ கொஞ்சம் வித்தியாசமான புத்தகங்களைப் பரிந்துரைக்கிறது. பயணங்களுக்குத் தயாராகும்போது பலரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைப்பதோடு, பயணத் துணையாகப் புத்தகங்களை எடுத்துச் செல்வதுண்டு.
பயணத்தில் சிலர் அலுப்பைப் போக்குவதற்காகப் புத்தகங்களை நாடலாம். இன்னும் சிலரோ நீண்ட நாளாகப் படிக்க நினைக்கும் புத்தகத்தை வாசிப்பதற்கான வாய்ப்பாகப் பயணத்தைக் கருதலாம். இவ்வளவு ஏன், ஒரு சிலர் பயண நினைவாகத் தாங்கள் செல்லும் ஊர்களில் புதிய புத்தகங்களை வாங்கி வரலாம்.
உள்ளூர்க் கதைகள்
இதெல்லாம் இயல்பானவையே. இந்த அனுபவத்தை இன்னும் சுவாரசியமாக மாற்றுகிறது ‘டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ தளம். ஒருவர் எந்த நகருக்குச் செல்கிறாரோ, அந்த நகரம் தொடர்பான புத்தகத்தை இந்தத் தளம் பரிந்துரைக்கிறது. குறிப்பிட்ட அந்த நகரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்தப் புத்தகம் புனை கதையாக இருக்கலாம் அல்லது அபுனைவு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
எந்த இடத்துக்கு செல்கிறோமோ அங்குள்ள உள்ளூர் மக்கள், கலாச்சாரம், வாழ்க்கை ஆகிய விஷயங்களைச் சரியாக அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்தப் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்படுகின்றன.
பொதுவாக, சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டிப் புத்தகங்களை நாடுவதுண்டு. ஆனால், வழிகாட்டிப் புத்தகங்கள், குறிப்பிட்ட நகரங்களில் இடங்களுக்கான வழியைக் காட்டுமே தவிர, உள்ளூர் மக்களின் குணத்தை அறிந்துகொள்ளவோ அந்த ஊரின் வரலாற்றுப் பின்னணியை அறிந்துகொள்ளவோ உதவாது. இதற்குக் குறிப்பிட்ட நகரங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களும் புத்தகங்களும் சரியான வழி என்று ‘டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ கருதுகிறது.
நகரங்களைப் படிக்கலாம்
இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நகரிலும் படிக்க வேண்டிய புத்தகங்களைப் பரிந்துரைக்கிறது. இப்போதுதான் அறிமுகமாகி இருக்கும் தளம் என்பதால், விரல்விட்டு எண்ணக்கூடிய நகரங்களே தற்போது உள்ளன. கேப்டவுன், லண்டன், டோக்கியோ, மேட்ரிட், நியூ யார்க், பாரீஸ் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவற்றில் எந்த நகரை ‘கிளிக்’ செய்தாலும் அந்த நகருக்கான புத்தகப் பட்டியல் தோன்றுகிறது. புத்தகப் பட்டியலும் நீளமாக இல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்களையே கொண்டுள்ளன. ஒவ்வொரு புத்தகத்துக்கான அறிமுகமும் மாதிரி வாசிப்புப் பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
நகரங்களுக்காகப் பட்டியலிடப்படும் புத்தகங்கள், இலக்கியத்திலும் பயணத்திலும் அனுபவம் வாய்ந்தவர்களால் தேர்வு செய்யப்படுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. பயனாளிகளும் தாங்கள் சிறந்தது எனக் கருதும் புத்தகங்களைப் பரிந்துரைக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் உறுப்பினராக இணைந் தால், புத்தகத் தேர்வில் இன்னும் தீவிரமாகப் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நகரங்கள் இணைக்கப்படுவதை அறிந்துகொள்ள விரும்பினால், இந்தத் தளத்தின் (www.destinationreads.com/#cities) செய்திமடல் சேவையில் சந்தாதாராக இணையலாம்.
இன்னொரு தளம்
இந்தத் தளம் சுவாரசியமாக இருக்கிறது என நினைப்பவர்கள், ‘வாட் ஷுட் ஐ ரீட் நெக்ஸ்ட்’ (whatshouldireadnext.com/) தளத்தையும் குறித்து வைத்துக்கொள்ளலாம். இந்தத் தளத்தின் பெயர் உணர்த்துவது போலவே, நீங்கள் அடுத்து என்ன புத்தகத்தைப் படிக்கலாம் என இது பரிந்துரைக்கிறது. இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் தலைப்பை இந்தத் தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் சமர்ப்பித்தால் அதன் அடிப்படையில் பொருத்தமான புதிய புத்தகம் முன்வைக்கப்படுகிறது.
இந்தத் தளத்தில் உறுப்பினராகப் பதிவுசெய்து கொண்டால், பரிந்துரையாகப் பெறும் புத்தகங்களை எல்லாம் பட்டியலிட்டு வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கான இணைய நூலகம் போலவும் இது அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT