Published : 17 Aug 2018 11:07 AM
Last Updated : 17 Aug 2018 11:07 AM
திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மாபெரும் பொழுதுபோக்கு அம்சமாக இப்போது உருவெடுத்திருக்கின்றன வலைத் தொடர்கள் (Web Series). இந்தியாவில் வலைத் தொடர்களுக்கான ரசிகர் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் வரவேற்பு காரணமாக, புதுமையான திரைக்கதைகளுடன் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் நிறைய வலைத்தொடர்கள் இந்த ஆண்டு வெளியாகியிருக்கின்றன.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான ‘தி ரீயூனியன்’ இந்தி வலைத் தொடர் (ஆங்கிலத்தில் சப் டைட்டில் உண்டு) இளைஞர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கரிஷ்மா கோலி இயக்கியிருக்கும் இந்தத் தொடரில் சப்னா பப்பி, ஷ்ரேயா தன்வந்த்ரி, அனுஜ் சச்தேவா, வீர் ரஜ்வந்த் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் ‘ரீயூனிய’னில் பள்ளிக் காலத் தோழர்கள் நால்வர் சந்திக்கும் தருணங்களைச் சுவாரசியமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்த வலைத் தொடர்.
நண்பர்களைத் தேடி
ஒரு பிரபல ஃபேஷன் நிறுவனத்தில் வடிவமைப் பாளராகப் பணியாற்றும் ஆர்யா (சப்னா பப்பி), அமெரிக்காவில் மனிதவள ஆலோசகராகப் பணியாற்றும் தேவா (ஷ்ரேயா தன்வந்த்ரி), ‘ஸ்டார்ட் அப்’ தொடங்கும் கனவிலிருக்கும் அவளுடைய கணவர் தேவ் (அனுஜ் சச்தேவா), ஸ்டாண்ட் அப் காமெடியன் கவுரவ் (ரஜ்வந்த் சிங்) ஆகியோரின் கதாபாத்திரங்களைப் பின்தொடர்கிறது இந்தத் தொடர். பள்ளிக் காலத்தில் சிறந்த தோழிகளாக இருக்கும் ஆர்யாவும் தேவாவும் ஏதோவொரு காரணத்தால் பிரிந்துவிடுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போது மீண்டும் அந்த நட்பைப் புதுப்பித்துகொள்ள முடிந்ததா என்பதை யதார்த்தமாக விளக்குகிறது இந்தத் தொடர்.
நட்பின் பல பரிமாணங்களை இந்தத் தொடர் அழகாக முன்வைத்திருக்கிறது. எப்போதும் நண்பர்கள் அனைவரையும் இணைக்கும் புள்ளியாகவும் அவர்கள் பிரச்சினைகளைக் காதுகொடுத்து கேட்கும் நபராக இருக்கும் கவுரவ், உண்மையில் தனிமையில் சிக்கித் தவிப்பதைக் காட்சிப்படுத்தியிருந்த விதம் இந்தத் தொடரின் பலம். அனைவருடைய வாழ்க்கையிலும் பள்ளிக்கால நினைவுகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கின்றன என்பதற்கான விடையை இந்தத் தொடரின் மூலம் அளிக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கரிஷ்மா.
காதல், கனவு, பயம்
காதல் திருமண வாழ்க்கை கசந்துபோய்ப் பள்ளித் தோழர்களைச் சந்திக்கவரும் ஜோடி தேவ்-தேவா. அவர்கள் இருவரும் தங்கள் காதலை எந்த இடத்தில் கண்டடைந்தார்களோ, அதே இடத்திலேயே அது முற்றிலும் தொலைந்துபோயிருப்பதையும் உணர்கிறார்கள். தொலைந்து போன காதலை அவர்கள் மீண்டும் கண்டடைந்தார்களா இல்லையா என்ற கேள்விக்கும் விடைதேடுகிறது இந்தத் தொடர். அத்துடன், வாழ்க்கைக் கனவுகளைப் பின்தொடர் வதிலிருக்கும் பயம், தோல்வி தரும் வலிகள் போன்ற அம்சங்களையும் பேசுகிறது.
மகாராஷ்டிராவின் ‘பாஞ்க்கணி’ மலைப் பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இந்தத் தொடரின் இன்னொரு சிறப்பு. நட்பு, காதல், நகைச்சுவை ஆகிய மூன்று அம்சங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார் இயக்குநர். பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் ‘புல்லியிங்’ (Bullying) பிரச்சினையையும் ஒரு முக்கியப் பிரச்சினையாகப் பேசியிருக்கிறார். பள்ளிக்கால நினைவுகளை எப்போதும் அசைபோட விரும்புவர்கள் அனைவரும் இந்தத் தொடரைப் பார்க்கலாம்.
தொடரைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=20_2Q7hoKPk
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT