Published : 05 Jul 2018 03:08 PM
Last Updated : 05 Jul 2018 03:08 PM

அனுபவம் புதுமை 12: நீங்க உஷார் பார்ட்டியா?

 

கு

டும்பம் குடும்பமாகச் சென்று கடை கடையாக ஏறி இறங்கி ஷாப்பிங் செய்ததெல்லாம் ஒரு காலம். இன்றைய இளைஞர்களின் டிரெண்ட் ‘ஆன்லைன் ஷாப்பிங்’. உணவு, உடை, எலெக்ட்ரானிக் பொருட்கள் என இளைஞர்கள் விரும்பும் அனைத்துமே இன்று ஆன்லைன் மூலம் எளிதாகக் கிடைத்துவிடுகின்றன.

“உட்கார்ந்த இடத்திலிருந்தே குண்டூசி தொடங்கி ஹோம் தியேட்டர் வரை ஆன்லைனில் வாங்கிவிடலாம். தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி தரும் சொகுசு இது. கடை கடையாக ஏறி இறங்க வேண்டாம். மால்களில் பார்க்கிங்குக்காகக் காத்திருக்க வேண்டாம்; 3 மணி நேரத்துக்கு அநியாயமாகக் கட்டணம் தர வேண்டாம். எந்தப் பொருள் வேண்டுமோ அதைக் கடையில் வாங்குவதைவிட குறைவான விலையில் இணையத்தில் வாங்க முடிகிறது" - ஆன்லைன் ஷாப்பிங் உங்களை ஏன் ஈர்க்கிறது என வகுப்பறையில் மாணவர்களிடம் கேட்டபோது அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.

உண்மைதான். நவீனமும் பலரகமும் கணினியில் கண் முன்னே விரிகின்றன. பிடித்த பொருளை நினைத்த நேரத்தில் வாங்க முடிகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கிலேயே ‘பேக் ஆபர்’ கிடைக்கிறது. குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவீதம் வரை கொடுக்கிறார்கள். அதை அடுத்தடுத்த ஷாப்பிங்கில் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி ஆன்லைன் ஷாப்பிங் பற்றி நேர் மறையான விஷயங்கள் நிறைய உள்ளன. இதன் காரணமாகவே இளைஞர்கள் மட்டுமல்ல; இணைய வசதியும் ஆன்லைன் ஷாப்பிங் மீது மோகமும் கொண்ட அனைவருமே இதை விரும்புகிறார்கள்.

விரும்புகிற, தேவையான பொருட்களை உலகில் எந்த மூலையில் உற்பத்தி செய்தாலும், ஒரு ‘கிளிக்’கில் வீடு தேடி வரவழைக்கத் தன்னால் இயலும் எனப் பெருமைபடக் கூறும் இளைஞர்களே இன்று அதிகம். ‘ஆன்லைன் ஷாப்பிங்’கில் வாங்கிய பொருள் என்றால், அதற்கு மரியாதையே தனி என நினைக்கும் இளைஞர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் எந்த அளவுக்கு எளிதோ அந்த அளவுக்கு அதில் வில்லங்கமும் இருக்கிறது. அதற்கு உதாரணமாக என் வீட்டுக்குப் பக்கத்தில் நடந்த இரண்டு இளைஞர்களின் கதையைச் சொல்லலாம்.

ராகுலும் விமலும் எப்போதுமே எல்லாப் பொருட்களையுமே ஆன்லைனில் வாங்கும் பழக்கம் உள்ளவர்கள். சில மாதங்களுக்கு முன்பு, ‘உயர் ரக மொபைல் போன் ஒன்று மிகக் குறைந்த விலையில்..’ என ஒரு குறுஞ்செய்தி ராகுலுக்கு வந்திருக்கிறது. அந்தக் குறுஞ்செய்தியை அவர்கள் தோண்டி துழாவியபோது, அவர்கள் நினைத்துப் பார்த்திராத அந்த போன் வெறும் ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து இருவரும் துள்ளிக் குதித்தார்கள்.

ராகுலும் விமலும் உடனடியாக அந்த போனை ஆன்லைன் மூலம் பதிவுசெய்தார்கள். ‘தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும்’ என்று இருவரும் ஒரு சேர நினைக்க, உறவினர்கள், நண்பர்கள் எனப் பலருக்கும் அந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என 15 பேர் அடுத்தடுத்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். சில மணி நேரத்துக்குப் பிறகு அந்த இணையத்தில் ‘ஸ்டாக் இல்லை’ என்று வந்தது. தங்களுக்கு எப்படியோ அந்தப் பொருள் கிடைத்துவிட்டதை எண்ணி விமலும் ராகுலும் மனம் மகிழ்ந்தார்கள்.

ஆனால், அந்த நொடி வரை அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணரவில்லை. ஒரு வாரத்தில் மொபைல் கிடைக்கும் என்று காத்திருந்தார்கள். கடைசியில் ஒரு மாதம் ஆகியும் அவர்களுடைய கைகளுக்குப் பொருள் வந்து சேரவே இல்லை. செலுத்திய பணமும் வங்கிக் கணக்கில் சேரவே இல்லை. பிறகுதான் மொத்தமாக ஏமாற்றப்பட்ட விஷயமே இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இவர்கள் சொன்னதை நம்பி முன்பதிவு செய்த உறவினர்களும் நண்பர்களும் அவர்களை ‘அர்ச்சனை’ செய்ய அவமானத்தில் தலைகுனிந்தார்கள்.

ஆன்லைனில் அநியாயத்துக்கு மலிவு விலையில் விளம்பரப்படுத்தப்படும்போது, அது நமக்கு வைக்கும் கண்ணி வெடி என்பதை நினைக்காமல் போனது யார் தவறு? கனிணியில் மெய்நிகராகக் காண்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் உள்ள இடைவெளி எப்போதுமே கவனத்துக்குரியதுதான். அதைக் கடைப்பிடிக்காமல் போனதால் இருவருக்கும் வந்த பிரச்சினை இது.

இந்தியாவில் இதுவரை நகரத்து இளைஞர்களுக்கு மட்டுமே கிடைத்த உயர் ரக பிராண்ட்கள் இன்று சாதாரண ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் சாத்தியமாகியிருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் பிரபலமாகக் காரணம் இதுதான். ஆன்லைனில் எல்லாமே மெய் என்று நினைப்பது பெரிய தவறு. அதல பாதாளத்தில் தள்ளிவிடும் அளவுக்கு மோசமான இன்னொரு முகமும் அதற்கு உண்டு. ஆனால், இந்தக் கால இளைஞர்கள் அதைப் பற்றிய புரிதலுடன் இருக்கிறார்களே என்பது சந்தேகமே.

இன்று ஏராளமான இளைஞர்கள் ‘ஆன்லைன் ஷாப்பிங் மேனியா’வுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறார்கள் சைபர் துறை வல்லுநர்கள். அதாவது, குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் ஷாப்பிங் இணையதளங்களுக்குச் சென்று ஏதாவது ஆஃபர் இருக்கிறதா எனப் பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் ரகத்தினர். இவர்களுக்கு ஆன்லைனில் எதை வாங்கலாம் என்று மனம் துடிக்கும். கணினியைத் திறந்தாலே ஷாப்பிங் தளத்துக்குச் சென்று ஆஃபர் தேடும் அளவுக்கு அதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதைப் போலவே ஆன்லைன் ஷாப்பிங்கையும் வகைதொகை இல்லாமல் இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆன்லைனில் அடிக்கடி ஏதாவது ஒரு பொருளை வாங்குவதும்கூட ஒருவித போதையாகவே மாறிவிட்டது. டிஜிட்டல் யுகம் பரவலாகிவிட்ட இந்தக் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கை யாராலும் தவிர்க்க முடியாது. ஆனால், அதற்கு அடிமையாகாமல் சரியாகக் கையாள்வதும் உபயோகிப்பதும் இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது.

ஆன்லைன் ஷாப்பிங் என்பதே சிறு புழுவைக் காட்டி மீனைப் பிடிப்பது போலத்தான். ஆனால், அதில் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருந்துவிட்டால், யாருக்கும் பிரச்சினை இருக்காது!

கட்டுரையாளர்: பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x