Last Updated : 05 Jul, 2018 03:23 PM

 

Published : 05 Jul 2018 03:23 PM
Last Updated : 05 Jul 2018 03:23 PM

ஒரு மீம்: சில அதிர்ச்சிகள்

‘கவனச் சிதறலுக்கு உள்ளான காதலன்’ (Distracted Boyfriend Meme) என்ற மீமை நீங்கள் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த மீமின் எண்ணற்ற வடிவங்களையும் அறிந்திருக்கலாம். ஏனெனில், இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட மீம்களில் ஒன்று இது.

இளம்பெண்ணுடன் நடந்து செல்லும் இளைஞர் ஒருவர், தங்களைக் கடந்து செல்லும் வேறு ஒரு யுவதியைத் திரும்பிப் பார்ப்பது, அதைப் பார்த்து உடன் இருக்கும் பெண் ஆவேசமாக முறைப்பது போன்ற ஒளிப்படம்தான் இந்த மீமின் மையம். இந்தப் படம், வழக்கமான படமாக இருப்பதாகப் பலர் நினைக்கலாம். ஆனால், இந்தக் காட்சி நெட்டிசன்களுக்குப் பிடித்துப்போய்விட்டது. உதாரணமாக, ஒரு படத்தில், இரு பெண்களையும் முதலாளித்துவம், சோஷலிசமாகக் குறிப்பிட்டு, கவனம் மாறுவதை உணர்த்தியிருந்தனர். இதே மாதிரி, புதுப்புது மீம்களை உருவாக்கி, இன்றளவும் இணையத்தில் உலவவிடுகின்றனர்.

ஆனால், இந்த மீமே கொஞ்சம் பழைய மீம் தான். 2015-ம் ஆண்டில், இது முதலில் அறிமுகமானதாக மீம் வரலாற்றுத் தளமான ‘நோ யுவர் மீம்’ (Know your meme) தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு, இந்த மீம் புதிய வேகம் பெற்று இணையம் முழுவதும் பரவியதும், அதன் விளைவாக, இந்தப் படம் உண்மையில் ஒரு ‘ஸ்டாக் போட்டோ’ என்பதும், அதில் இடம்பெற்றுள்ள மூவரும் மாடல்கள் என்பதும் தெரிய வந்தது. இதுவும் பழைய கதைதான்.

இப்போது புதிய கதையாக, டிவிட்டர் பயனாளி ஒருவர் இந்த மீமை ‘அகழ்வாராய்ச்சி’க்கு உட்படுத்தி, இந்தப் படத்தில் இருக்கும் இளம் பெண் தொடர்பான அதிர்ச்சியான தகவல்களை வெளிபடுத்தியிருக்கிறார். அதாவது அந்த இளம் பெண்ணின் கடந்த காலம் இன்னும் ‘அதிர்ச்சி’யானது என்பதைக் கண்டறிந்துள்ளார். அப்படி என்ன அதிர்ச்சி என அதிர்ந்து போக வேண்டாம். இந்த அதிர்ச்சி முழுக்க முழுக்க சுவாரசியமானது.

இந்த கவனச்சிதறல் காதலன் மீம் இணையத்தில் உலா வரத்தொடங்கியதுமே இதன் பின்னணியை அறிவதில் பலருக்கும் ஆர்வம் உண்டானது. இந்த மீம் ஒரு ஸ்டாக் போட்டோ என்பது தெரிய வந்ததும், அடுத்த கட்டமாக மேலும் துப்பறிந்து, இந்தப் படத்தை எடுத்த ஒளிப்படக் கலைஞர் யார் எனக் கண்டறிந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ஸ்பெயினைச் சேர்ந்த ஆண்டோனியோ குயில்லம் (Antonio Guillem ) எனும் அந்த ஒளிப்படக் கலைஞரின் பேட்டியும் வெளியானது.

அந்தப் பேட்டியில், ஸ்டாக் போட்டோ எடுப்பது தனது தொழில் என்றும், குறிப்பிட்ட இந்தப் படத்தைத் திட்டமிட்டு எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த மூன்று மாடல்களில் இளைஞரின் பெயர் மரியோ என்றும், பெண்ணின் பெயர் லாரா என்றும் தெரிவித்திருந்தார். மூன்றாமவர் விலகிச்சென்றுவிட்டதால் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை.

இப்போது எர்னி ஸ்மித் (@ShortFormErnie ) எனும் டிவிட்டர் பயனாளி, இந்த மீம் ஆராய்ச்சியில் புதிய படங்களைக் கண்டறிந்து வெளியிட்டிருக்கிறார். கவனச் சிதறலுக்கு உள்ளான காதலன் படத்தில் உள்ள இளம் பெண்ணின் அதிர வைக்கும் வரலாறு என்று ஒரு குறும்பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, அந்தப் பெண் எதற்கெடுத்தாலும் அதிர்ச்சி அடைபவர் என்பதை உணர்த்தும் வகையில் வரிசையாகச் சில படங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில், அவர் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஸ்மார்ட்போன் திரையை விழி அகல வியப்புடன் பார்க்கிறார்.

இன்னொரு படத்திலும் அந்த பெண், கம்ப்யூட்டர் திரையை அகல விழிகளுடன் பார்க்கிறார். இன்னொரு படத்தில் அவருடைய தோழிகளும் திகைத்து நிற்கின்றனர். அவர் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாலும் திகைக்கிறார், கடிதத்தைப் பிரிக்கும் போதும் திகைக்கிறார் என மேலும் சில படங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். சும்மா இருக்கும்போது திகைக்கிறார் என்றும் ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். எல்லாப் படங்களிலுமே அந்தப் பெண், அவருக்கு உரியதாக, இணையம் இப்போது அறிந்திருக்கும் ‘டிரேட் மார்க்’ வியப்பையும் திகைப்பையும் வெளிப்படுத்துகிறார்.

இந்தப் படங்கள் எல்லாமே ஸ்டாக் படங்கள்தாம். ஒரு தேர்ந்த மாடலழகியாக, இந்தப் பெண் அவற்றில் விழிகள் அகல வியப்பாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த மீம்களை அவற்றை ஒருசேரத் திரும்பிப் பார்க்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. பார்க்கலாம், இந்த மீம் படத்தில், அடுத்த திகைப்பு அல்லது திருப்பம் என்னவாக இருக்கிறது என்று!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x