Last Updated : 13 Jul, 2018 11:12 AM

 

Published : 13 Jul 2018 11:12 AM
Last Updated : 13 Jul 2018 11:12 AM

தண்ணீர் சாமி

வெ

குளி வெள்ளைச்சாமி ஆயா உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஊர் பேர் தெரியாத ஆளாகத்தான் இருந்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ வாங்கிய காசிலேயே தனி உணவகம் கட்டும் அளவுக்குச் சம்பாதித்துவிட்டான் என்று அவனுடைய எதிரிகள் சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் பத்து தோசை, இருபது இட்லி, பத்து காபி சாப்பிட்டால் வெள்ளை பில்லில் இரண்டு தோசை, ஐந்து இட்லி, இரண்டு காபி என்று குறிப்பிட்டுவிடுவான். ஆகவே, வாடிக்கையாளர் தாங்கள் அடைந்த லாபத்தில் பெரும்பகுதியை வெள்ளைக்கு டிப்ஸாகத் தருவார்கள்.

இந்த வேலையில் வெள்ளை நிம்மதியாக இருந்தான். ஆயா உணவகத்தில் எப்போதும் கூட்டம் ‘ஜேஜே’ என்று இருந்ததால் உணவகத்தை நடத்திய ஆயாவுக்கு வெள்ளையின் கள்ளத்தனம் பற்றித் தெரியவே இல்லை. ஆயாவின் தங்கை சின்ன ஆயாவுக்கோ வெள்ளையின் மீது அபார நம்பிக்கை. தனக்கேற்ற அடிமையாக சின்ன ஆயா வெள்ளையை நம்பினார்.

அதேநேரம் ஆயாவின் நம்பிக்கைக்குரிய பணியாளாகத் தண்ணீர் பாண்டி இருந்தான். ஆயாவின் எதிரே தண்ணீர் பாண்டி நிமிர்ந்தே நின்றதில்லை. தண்ணீர் பாண்டிக்கு முதுகு நேரானதா இல்லை பிறவிலேயே கூன் விழுந்துவிட்டதோ எனச் சந்தேகப்படும் அளவுக்கு அத்தனை கச்சிதமாகத் தண்ணீர் பாண்டியின் முதுகு வளையும். ஆயா எங்கு சென்றாலும் பொறுப்பைத் தண்ணீர் பாண்டியிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார். தண்ணீர் பாண்டியும் மிகவும் பணிவாக நடந்துகொள்வான். கணக்குவழக்குகளைக் கச்சிதமாகப் பராமரிப்பான். டிப்ஸ் கணக்குகளைக்கூடச் சொல்லிவிடுவான். காலையில் வேலையைத் தொடங்கும் முன்னர் ஆயா இருக்கும் திசை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவான்.

ஆனால், தண்ணீர் பாண்டி லேசுபட்டவனல்ல. அவன் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பர்ஸில் கைவைத்துவிடுவதில் சமர்த்தன். ஆள் பார்ப்பதற்கு அப்பாவியாக இருப்பானே ஒழிய தண்ணீர் பாண்டி பயங்கரமான தந்திரக்காரன். காலில் விழ வேண்டுமென்றால் காலில் விழுவான். கழுத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் கழுத்தைப் பிடிப்பான். காலில் விழுவதை வெளிச்சத்தில் செய்யும் தண்ணீர் பாண்டி, கழுத்தைப் பிடிப்பதை இருட்டில் செய்வான். அதுதான் அவனது சாமர்த்தியம்.

ஆகவே, வெள்ளை, தண்ணீர் பாண்டியிடம் எந்தப் பிரச்சினையும் வைத்துக்கொள்ள மாட்டான். தண்ணீர் பாண்டியும் வெள்ளையின் விஷயத்தில் தலையிடுவதில்லை. வெள்ளைக்கு உடம்பு வளர்ந்த அளவு மூளை வளரவில்லை. எது வளருமோ அது தானே வளரும் என்று வெள்ளையும் அப்படியே விட்டுவிட்டான். ஆனால், தண்ணீர் பாண்டியைவிடத் தான் அறிவாளி என்று நினைத்துக்கொள்வான்.

திடீரென்று ஒரு நாள் ஆயா உணவகத்து உரிமையாளரான ஆயா தொலைதூர தேசம் சென்றுவிட்டார். அவர் எங்கே போனாரென யாருக்குமே தெரியவில்லை. ஆதரவற்ற நிலைக்குச் சென்றது ஆயா உணவகம். வாடிக்கையாளர்கள் கலங்கிப்போனார்கள். மூன்று நேரமும் ஆயா உணவகத்திலேயே சாப்பிட்டு உடம்பு வளர்த்த கவிஞர் பாம்பன், ‘ஆயா எங்க ஆயா போன? எங்களுக்குத் தேவ பாயா… நீ வந்துடு ஆயா வந்து தந்திடு பாயா’ என்று ஒரு கவிதையே பாடினார். அந்தக் கவிதையை யாரோ ஆயா காதில் போட்டுட்டாங்களோ என்னவோ ஆயா பயந்துபோய் திரும்பி வரவே இல்லை. இந்தச் சூழலில் ஆயா உணவகத்தின் பொறுப்பைத் தான் ஏற்கலாமெனத் தண்ணீர் பாண்டியும் வெள்ளையும் தனித் தனியாகத் திட்டம் போட்டார்கள். ஆனால், உணவகத்தின் பொறுப்பைத் தானே ஏற்கலாம் எனச் சின்ன ஆயா தயாரானபோது வெள்ளையும் பாண்டியும் அமைதியாகிவிட்டார்கள்.

ஆனால், சின்ன ஆயாவால் உணவகப் பொறுப்பை ஏற்க முடியாத அளவுக்கு உடல்நலம் மோசமாகிவிட்டது. ஆயா உணவக உணவை அதிகமாக உண்டதால் அப்படியாகிஇருக்கலாம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆகவே, சின்ன ஆயா உடல்நலம் சரியாகும்வரை பொறுப்பை வெள்ளையிடம் ஒப்படைத்துவிட்டார். தண்ணீர் பாண்டி என்னவெல்லாமோ யுத்தம் நடத்திப் பார்த்தான்; ஒன்றும் பாச்சா பலிக்கவில்லை. வேலைன்னு வந்துட்டா வெகுளி வெள்ளைச்சாமி நிஜமாகவே வெள்ளைக்காரன் என்பது தெரிந்தது. ஆகவே, வெள்ளையிடம் சமாதானமாகப் போய்விடலாம் என்று முடிவெடித்து தண்ணீர் பாண்டி வெள்ளைக்குச் சமாதானக் கொடி காட்டினான்.

அதன் பின்னர் ஆயா உணவகத்தில் ரெண்டு உரிமையாளர்கள் என்பது போல் வெள்ளையும் பாண்டியும் ஆனார்கள். எங்கு போனாலும் இருவரும் ஒன்றாகத்தான் போனார்கள். ஒன்றுக்குக்கூட அவர்கள் தனித்தனியாகப் போனதில்லை. அப்படியொரு ‘மாற்றா’னாக மாறினார்கள். அவர்களைத் தனித் தனியாக யாராவது பார்த்தார்கள் என்று சொன்னால், சொன்னவர்கள் கண்ணில் கோளாறு என்றே பொருள். அதன் பின்னர் அந்த ஊர்க்காரர்கள் நகமும் சதையும்போல் என்று சொல்வதற்குப் பதில் பாண்டியும் வெள்ளையும்போல் எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

வெகுளி வெள்ளைச்சாமி தனது பெயரில் சாமி இருப்பதால் தன்னைச் சாமியாக நினைத்துக்கொண்டான். ஆனால், வாடிக்கையாளர்கள் அவனைப் பூதம் எனக் கேலி செய்வார்கள். அது வெள்ளைக்குத் தெரியாது. வெள்ளையும் பாண்டியும் ஒன்றுசேர்ந்தது ஆயா உணவகத்துக்குக் கேடுதான் என்று நீண்ட கால வாடிக்கையாளர்கள் பேசிக்கொள்வது அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x