Published : 15 Jun 2018 10:55 AM
Last Updated : 15 Jun 2018 10:55 AM
அ
றைக் கதவு தட்டப்பட்டது. உள்ளேயிருந்த மாணவர் சோம்பலாக வெளியே வந்து கதவைத் திறந்தார். ‘யார் வேணும்?’
வெளியில் இரண்டு பேர் நின்றிருந்தார்கள். ‘மைக்கேல் இருக்காரா?’
‘மைக்கேலா, யாரது?’
‘இங்கேதான் இருப்பார்னு சொன்னாங்களே.’
‘அப்படி யாரும் இல்லை’ என்று கதவை மூட முயன்றார் அவர்.
வெளியில் நின்றவர்கள் விடவில்லை. ‘உங்களுக்கு மைக்கேலைத் தெரியாதா?’ அதான், ப்ளூ பாக்ஸ் வெச்சிருப்பாரே. அதை வெச்சு உலகம் முழுக்கத் தொலைபேசியில இலவசமாப் பேசுவாரே, அந்த மைக்கேல்தான்.’
இதைக் கேட்டதும் அந்த மாணவருடைய முகம் மலரும். ‘ப்ளூ பாக்ஸா?’ என்று ஆவலுடன் கேட்பார்.
உடனே, வெளியில் நின்ற இருவரும் மகிழ்ச்சியாகிவிடுவார்கள். ‘மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது’ என்று நினைத்துக்கொள்வார்கள். ‘உங்களுக்கும் ப்ளூ பாக்ஸ் வேணுமா?’ என்பார்கள். ‘எங்ககிட்ட இருக்கு. கம்மி விலைதான், பார்க்கறீங்களா?’
சரி, அதென்ன ப்ளூ பாக்ஸ்?
அதுவொரு தொழில்நுட்பச் சாதனை. அதேநேரம், மகாமோசமான திருட்டுத்தனம்.
அந்தக் கல்லூரி விடுதி அறையின் வாசலில் நின்று, ‘மைக்கேல் இருக்காரா?’ என்று விசாரித்த இருவரும்தான் அந்த ப்ளூ பாக்ஸை வடிவமைத்துத் தயாரித்தவர்கள். அதை விற்பதற்காக ‘மைக்கேல்’, ‘ஜோசஃப்’, ‘ஆல்பர்ட்’ என்று ஏதாவது ஒரு பொய்ப் பெயரைச் சொல்லி மாணவர்களை அணுகுவார்கள். அவர்களிடம் ப்ளூ பாக்ஸைப் பற்றிப் பேசி ஆசை காட்டுவார்கள்.
ப்ளூ பாக்ஸ் என்ற அந்தச் சிறிய கருவி தொலைபேசி இணைப்புகளில் சில தில்லுமுல்லுகளைச் செய்தது. அதன் மூலம், உலகில் எந்தவோர் எண்ணையும் இலவசமாக அழைத்துப் பேசலாம்.
‘Secrets of the Little Blue Box’ என்ற கட்டுரையில்தான் இந்தக் கருவியைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டிருந்தன. ஸ்டீவ் வாஜ்னியாக் என்ற மாணவர் அதைப் படித்தார், பரவசமானார், தன்னுடைய நண்பர் ஒருவரை அழைத்தார்.
அந்த நண்பருடைய பெயரும் ஸ்டீவ்தான், முழுப் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆமாம், ஆப்பிள், ஐஃபோன், ஐபேட் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸ்தான். ஆனால் அப்போது அவர் ஒரு மாணவர். இரண்டு ஸ்டீவ்களும் நல்ல நண்பர்கள்.
ப்ளூ பாக்ஸ் பற்றி ஒரு ஸ்டீவ் இன்னொரு ஸ்டீவுக்குச் சொல்ல, இருவரும் சேர்ந்து அதற்குத் தேவையான தகவல்களை, உதிரிப் பாகங்களைக் கண்டுபிடித்தார்கள். எலக்ட்ரானிக்ஸ் வித்தகரான ஸ்டீவ் வாஜ்னியாக், அதை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். ஆரம்பத்தில் கொஞ்சம் சொதப்பினாலும், விரைவில் ஓர் அருமையான ப்ளூ பாக்ஸைக் கண்டறிந்துவிட்டார்.
அதற்கு முன் பலரும் ப்ளூ பாக்ஸ்களை உருவாக்கியிருந்தார்கள். ஆனால் ஸ்டீவ் வாஜ்னியாக் உருவாக்கியது டிஜிட்டல் ப்ளூ பாக்ஸ். அத்தனை சிறியதாக, அத்தனை எளிமையாக, அத்தனை துல்லியத்துடன் ஒரு ப்ளூ பாக்ஸை வேறு யாரும் தயாரித்திருக்கவில்லை. அதை எளிமையாகப் பயன்படுத்தி எந்த வெளிநாட்டு எண்ணையும் இலவசமாக அழைக்கலாம். தொலைபேசி நிறுவனங்களை ஏமாற்றலாம். திருட்டுத்தனத்திலும் அப்படியொரு நேர்த்தி!
ஆனால், ஸ்டீவ் வாஜ்னியாக் அந்தக் கருவியை உருவாக்கியது திருட்டு நோக்கத்தில் இல்லை. அவருக்கு அதிலிருக்கும் சவால் பிடித்திருந்தது. இத்தனை சிக்கலான ஒரு கருவியைத் தனி ஆளாக அமர்ந்து உருவாக்கியது அவருக்கு மனநிறைவைத் தந்தது. அதை வைத்துச் சில விளையாட்டுகளில் ஈடுபட்டார், அவ்வளவுதான்.
ஸ்டீவ் ஜாப்ஸ் அத்துடன் நின்றுவிடவில்லை. ‘இந்தக் கருவியை நாம விற்பனை செஞ்சா என்ன?' என்று யோசித்தார் அவர். ‘இதைத் தயாரிக்கச் சுமார் 40 டாலர் செலவாகுது, 150 டாலர்ன்னு விலை வெச்சா மக்கள் நிச்சயமா வாங்குவாங்க. நமக்கு நல்ல லாபம் கிடைக்கும்.’
வாஜ்னியாக் கண்டறிந்த கருவியை ஜாப்ஸ் மெருகேற்றினார். மக்கள் அதை எளிதில் பயன்படுத்துவதற்கேற்ற வசதிகளைச் சேர்த்து விற்பனைக்குத் தயாராக்கினார். கொஞ்சம்கொஞ்சமாக ப்ளூ பாக்ஸ்களை உற்பத்தி செய்து மாணவர்கள் மத்தியில் விற்கத் தொடங்கினார். இதனால் அவர்கள் கையில் காசு புழங்க ஆரம்பித்தது.
அந்த ப்ளூ பாக்ஸ்கள் நன்றாகத்தான் வேலை செய்தன. ஆனால், அவற்றைப் பயன்படுத்தியவர்களில் பலர் ஏதோ சொதப்பி மாட்டிக்கொண்டார்கள். சில ப்ளூ பாக்ஸ்கள் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான எஃப்.பி.ஐ.வரை சென்றன. அவர்கள் அதைப் பிரித்து ஆராய்ந்துபார்த்தார்கள். ஆனால், அதற்குப் பின்னால் இருப்பது இந்த இரு ஸ்டீவ்கள்தான் என்பதை அவர்களால் கண்டறிய இயலவில்லை.
ஒரு முறை ஜாப்ஸ், வாஜ்னியாக் இருவரும் நேரடியாகவே காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டார்கள். அப்போது அவர்கள் கையில் ஒரு ப்ளூ பாக்ஸும் இருந்தது.
நல்ல வேளையாக, அந்தக் கருவியைப் பற்றிக் காவல்துறையினருக்கு எதுவும் தெரியவில்லை. ‘இதை எதுக்குக் கையில வெச்சிருக்கீங்க?’ என்று அவர்கள் கேட்க, ‘அது ஒரு மியூசிக் சிந்தசைஸர்’ என்று பொய் சொல்லித் தப்பினார்கள்.
இப்படிக் கொஞ்சம்கொஞ்சமாக இந்தத் திருட்டு வேலையிலிருக்கும் ஆபத்துகளை அவர்கள் உணர்ந்தார்கள். இந்த வம்பே வேண்டாம் என்று ப்ளூ பாக்ஸ் தயாரிப்பதையே நிறுத்திவைத்தார்கள்.
‘ஆனால், ப்ளூ பாக்ஸ்கள் இல்லாவிட்டால் ஆப்பிள் இல்லை’ என்று ஸ்டீவ் ஜாப்ஸ் பின்னர் குறிப்பிட்டார். ‘இந்த அனுபவம்தான் எங்களுக்குத் தன்னம்பிக்கை தந்தது, சொந்தத் தொழில் தொடங்கும் ஊக்கத்தை வழங்கியது.’
ப்ளூ பாக்ஸ் என்பது நிச்சயம் ஒரு திருட்டு வேலைதான். அதில் சந்தேகமில்லை. ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காகச் செய்ததைக்கூடக் கொஞ்சம் மன்னிக்கலாம். அதை வைத்துப் பணம் சம்பாதித்தது பெரிய தவறு.
ஆனால், அந்தத் தவற்றைச் செய்வதற்காக ஸ்டீவ் வாஜ்னியாக்கும் ஸ்டீவ் ஜாப்ஸும் தங்களுடைய கருவியை மெருகேற்ற வேண்டி இருந்தது. இருவரும் ஒரு குழுவாக வேலை செய்யக் கற்றுக்கொண்டார்கள். தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தங்களால் தீர்க்க இயலும் என்ற தன்னம்பிக்கையைப் பெற்றார்கள். ஒரு கட்டுரையிலிருந்து கற்றுக்கொண்ட விஷயத்தை வைத்து ஒரு முழுத் தயாரிப்பை உருவாக்க முடியும். தேவை உள்ளவர்களைச் சந்தித்து அதை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க முடியும் என்பதையும் புரிந்துகொண்டார்கள்.
ப்ளூ பாக்ஸ் விஷயத்தில் இவை அனைத்தும் சட்டவிரோதமாக நடைபெற்றன. ஏனெனில், ப்ளூ பாக்ஸ் என்பது தொலைபேசி நிறுவனங்களுடைய வலைப்பின்னலைத் தவறாகப் பயன்படுத்தி அவர்களுக்கு இழப்பை உண்டாக்கும் ஒரு கருவி.
சிறிது காலம் கழித்து, இதே திறமைகளைப் பயன்படுத்தி அவர்கள் ஆப்பிள் கணினிகளை உருவாக்கினார்கள். அவற்றை விற்பனை செய்து உலகப் புகழ்பெற்றார்கள். கெட்டதில் கற்றுக்கொண்டவை நல்ல விஷயங்களைச் செய்யப் பயன்பட்டன.
ஒரு வேளை, ப்ளூ பாக்ஸ் தயாரித்த குற்றத்துக்காக ஸ்டீவ் ஜாப்ஸோ ஸ்டீவ் வாஜ்னியாக்கோ பிடிபட்டிருந்தால், அவர்களுடைய வாழ்க்கையே மாறியிருக்கக்கூடும். நல்ல வேளையாக, அவர்கள் விரைவில் தவற்றை உணர்ந்து சரியான பாதைக்குத் திரும்பிவிட்டார்கள். தங்கள் திறமையை நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தி வெற்றிபெற்றார்கள்.
இளமையின் வேகமும் திறமையும் அபாரமானவை. அவற்றைப் பயன்படுத்தித் தீமையும் செய்யலாம், நன்மையும் செய்யலாம். வண்டி வேகமாக ஓடினால் மட்டும் போதுமா? சரியான பாதையிலும் சென்றால்தானே ஊர் வரும்!
(இளமை பாயும்) கட்டுரையாளர்
தொடர்புக்கு: nchokkan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT