Published : 22 Jun 2018 11:21 AM
Last Updated : 22 Jun 2018 11:21 AM
‘லின்க்டுஇன்’ சமூக வலைப்பின்னல் வகை சேவைகளில் ஒன்று என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.அது முற்றிலும் தொழில்முறையிலானது. தொழில்முறைத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வழிசெய்வதும், வேலைவாய்ப்புக்கான தேடலில் கைகொடுப்பதும் ‘லிங்க்டுஇன்’ சேவையின் சிறப்பு.
சமூக வலைப்பின்னல் பரப்பில் ஃபேஸ்புக்குக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட சேவை இது. சில ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. ‘லிங்க்டுஇன்’னால் மைக்ரோசாப்ட்க்கு என்ன பயன் என்ற கேள்வி அப்போது கேட்கப்பட்டது. இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
புதிய வசதி
இந்த இடைப்பட்ட காலத்தில் ‘லின்க்டு இன்’ சேவை தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து பயனாளிகளைக் கவர்ந்திழுத்தபடி இருக்கிறது. அண்மைக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சங்களில் அதன் முகப்புப் பக்க மாற்றம் முக்கியமானது. வெறும் அல்காரிதமை மட்டும் நம்பாமல், எடிட்டர்கள் துணையோடு உள்ளடக்கம் தீர்மானிக்கப்படும் வகையில் இந்த முகப்புப் பக்கம் அமைந்திருப்பதால், நிலைத்தகவல்கள் குறைந்து, செய்திகள் அதிகரித்துள்ளன.
இதேபோல அதிகம் பேசப்படும் விஷயங்களை ‘டிரெண்டிங்’ தலைப்புகளாகப் பின்தொடரும் வசதியும் உள்ளது. காலண்டர் சார்ந்த அரட்டை மென்பொருள் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் ஃபேஸ்புக் வழங்கும் வசதிகளை ஒத்திருப்பவை.
தவிர, உறுப்பினர்கள் பகுதியில் தகவல்கள் இடம்பெறும் விதத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகப் பகுதியில், இடம்பெறும் சுருக்கத்திலும் அதிகத் தகவல்களைப் பதிவிட வழி செய்யப்பட்டுள்ளது. அதிக இணைப்புகளையும் சேர்க்கலாம்.
மிக மிக அண்மையில், ‘குடோஸ்’ எனும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. உறுப்பினர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வசதி இது. ஐபோனுக்கான செயலி வடிவில் அறிமுகமாகியுள்ள இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது, தொடர்புடைய நிறுவனத்துக்கான பயணத் தொலைவு எவ்வளவு எனத் தெரிந்துகொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எளிதான வழிகள்
‘லிங்க்டுஇன்’ சேவையை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த வல்லுநர்கள் எளிதான வழிகளைப் பட்டியலிட்டுள்ளனர்.
முதல் விஷயம், அறிமுகப் பகுதியில் உங்கள் ஒளிப்படத்தை இடம்பெறச் செய்யுங்கள். அந்தப் படம் தொழில்முறையில் இருப்பது அவசியம். ஒளிப்படத்தைப் பதிவிறக்கம் செய்தவுடன், தற்போதைய இருப்பிடம், கல்வித் தகுதி, திறன்கள் தொடர்பான தகவல்களையும் ‘அப்டேட்’ செய்ய வேண்டும். வர்த்தக நிறுவனங்கள் எளிதாகக் கவனிப்பதற்கு இவை உதவும். ஒளிப்படம் மட்டுமல்லாமல், பின்னணியைப் பொருத்தமான ஒளிப்படம் கொண்டதாக மாற்றலாம்.
அதேபோல வேலைவாய்ப்பு தேடும் நபர் எனில், உங்களுக்கான உறுப்பினர் பகுதியில் அதைத் தெரிவிக்க வேண்டும். ‘ஓபன் கேண்டிடேட்’ எனத் தெரிவிப்பதன் மூலம் இதை எளிதாகச் செய்யலாம். உங்கள் பக்கம் எளிதாக இணையத் தேடலில் கண்டறியப்படும் வகையில், பயனர் முகவரியில், உங்கள் பெயரில் மாற்றம் செய்துகொள்ளலாம். ‘எடிட் பப்ளிக் புரொபைல்’ பகுதியில் சென்று யூ.ஆர்.எல். வாய்ப்பைத் தேர்வுசெய்து இதற்கான மாற்றத்தை மேற்கொள்ளலாம்.
விவாதத்தில் பங்கேற்கலாம்
உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் தங்களை வந்தடையும் வகையில் ‘வேலைவாய்ப்பு அலெர்ட்’ வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வேலை கிடைக்கும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள மற்றவர்களிடமிருந்து உங்களுக்கான பரிந்துரையைக் கோரலாம். ‘ஆஸ்க் பார் ஏ ரெஃபரல்’ மூலம் இதற்கான கோரிகையை விடுக்கலாம். இதற்காக ஏற்கெனவே எழுதப்பட்ட கோரிக்கை இருந்தாலும் சுயமாக எழுதுவது இன்னும் நல்லது. ‘லின்க்டுஇன்’ குழுக்களில் இணைந்து விவாதத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பதும் உங்களை அடையாளம் காட்ட உதவும்.
எழுத்துத் திறமை இருந்தால், கட்டுரைகள் எழுதும் வசதியைப் பயன்படுத்தி நீளமான பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம். இவை எல்லாம் வேலையை நாடுபவர்களுக்கானது. ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் தொழில்முறைத் தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளவும் புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
லின்க்டுஇன் பயன்பாடு தொடர்பான கட்டுரை: https://bit.ly/2t9LkDT
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT