Last Updated : 04 May, 2018 10:06 AM

 

Published : 04 May 2018 10:06 AM
Last Updated : 04 May 2018 10:06 AM

வெல்லுவதோ இளமை 03: நான் அவன் அல்ல!

 

‘க

ண்ணா, உன்னை வைத்து ஒரு படமெடுக்க எண்ணியிருக்கிறோம், உடனே புறப்பட்டு வா.’

1976-ல் இப்படிதான் இளைஞர் ஒருவருக்கு அவசரத் தந்தி வந்தது. தன்னுடைய வாழ்க்கையே மாறப்போகிறது என்ற கனவுடன் புறப்பட்டுச்சென்றார் அவர்.

அதற்கு முன்பே சில படங்களில் அவர் நடித்திருந்தார். ஆனால், எல்லாம் சின்னச் சின்ன வேடங்கள்.

ஏதாவது அதிசயம் நடக்கும் என்று பொறுமையாகக் காத்திருந்தார் அந்த இளைஞர். இப்போது, அதற்கான நேரம் கனிந்திருப்பதாகத் தோன்றுகிறது.

2

ஆசையோடு புறப்பட்டுவந்த இளைஞரைப் படக் குழுவினர் சந்தித்தார்கள், ‘தம்பி, இந்தப் படத்துல நீங்கதான் கதாநாயகன், செம சண்டைகாட்சிகள் எல்லாம் வெச்சிருக்கோம். படம் வெளியானதும் நீங்க எங்கயோ போயிடுவீங்க’ என்றார்கள்.

‘ரொம்ப மகிழ்ச்சிங்கய்யா. நான் என்னோட முழுத் திறமையையும் காட்டி வேலைசெய்வேன், நீங்க என்மேல வெச்சிருக்கிற நம்பிக்கையைக் காப்பாத்துவேன்’ என்றார் அவர்.

தன்னுடைய வாழ்க்கையே இந்த ஒரு படத்தால் மாறிவிடக்கூடும் என்பது அவருக்குப் புரிந்திருந்தது. அதற்காகக் கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தார்.

ஆனால், படப்பிடிப்பு தொடங்கியதும்தான் அவருக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. ‘இவர்கள் தன்னை வைத்துப் படம் எடுக்கவில்லை, ஜெராக்ஸ் காப்பி எடுக்கிறார்கள்!’

யாருடைய காப்பி?

புரூஸ்லீ என்றோர் உலகப் புகழ்பெற்ற நடிகர். சண்டைக் காட்சிகளுக்காகவே பிரபலமானவர். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று இறந்துபோயிருந்தார்.

ஆகவே, அன்றைய திரைத்துறையினர் இன்னொரு புரூஸ்லீயைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவரைப் போல் நடிக்கிற, சண்டைபோடுகிற ஓர் இளைஞரை வைத்துப் பணத்தை அள்ளிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

3right

அந்த வலையில்தான் இந்த இளைஞர் சிக்கிக்கொண்டார். அவரை புரூஸ்லீபோல் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கட்டாயப்படுத்தினார். அவருடைய ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு சண்டையும் ஒவ்வோர் அசைவும் புரூஸ்லீயைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது.

அப்போது அவருக்கு வயது 22. இயக்குநர் சொல்வதைக் கேட்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை.

‘ஐயா, எல்லாரும் புரூஸ்லீ ஆகிட முடியாது, அப்படி ஆகணும்னு அவசியமும் இல்லை’ என்று சொல்லிப் பார்த்தார் அவர். ‘என்னோட பாணியே வேற. புரூஸ்லீமாதிரி நடிக்கறது எனக்கு ஒத்து வராது.’

இதைக் கேட்ட இயக்குநரும் மற்றவர்களும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள். ‘தம்பி, நீ இது வரைக்கும் நடிச்சதெல்லாம் சின்னச் சின்ன வேஷம், உனக்குன்னு ஓர் அடையாளம் இன்னும் உருவாகலை, நாங்க சொல்றதைக் கேளு, புரூஸ்லீ மாதிரி நடிச்சேன்னா சட்டுன்னு நீ முன்னேறிடலாம்.'

வேறு வழியில்லாமல் இயக்குநர் சொன்னபடி நடித்தார்.

அப்போது திரையுலகில் பலரும் இப்படி ‘புரூஸ்லீ-ஜெராக்ஸ்’ படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதே பாணியில் இயக்குநர் இந்தப் படத்தையும் உருவாக்கினார். அது நிச்சயம் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால், அவருடைய நாயகருக்கு அந்த நம்பிக்கை இல்லை. இயக்குநர் சொன்னதை வேண்டா வெறுப்பாகத்தான் பின்பற்றினார். ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கும்போதே அவருக்கு உறுதியாகத் தோன்றியது, ‘இது எனக்குப் பொருந்தவில்லை, மக்களும் இதை ரசிக்க மாட்டார்கள், என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.’

ja

அவர் நினைத்தது உண்மை என விரைவிலேயே மெய்யானது. அந்தப் படம் வெளியாகிப் படுதோல்வியடைந்தது.

நியாயப்படி பார்த்தால் அந்தப் படத்தின் நாயகன் வருந்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். ‘இனிமேலாவது இந்த இயக்குநருக்குப் புத்திவரும்!’

ம்ஹூம், புத்தி வரவில்லை. அவர் தொடர்ந்து அதேமாதிரி படங்களைத்தான் எடுத்தார். இவருக்கும் அதேமாதிரி வேடங்கள்தான் வந்தன. எப்படியாவது அவரை இன்னொரு புரூஸ்லீயாக்கிவிட வேண்டும் என்று எல்லாரும் போராடினார்கள்.

‘ஆசையாசையாகப் படத்தில் நடிப்பேன், ஆனால், போஸ்டரில் என்னுடைய பெயர்கூட வராது, இரண்டாவது புரூஸ்லீ என்றுதான் போடுவார்கள்’ என்று பின்னர் ஒரு பேட்டியில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் அவர். ‘நான் இன்னொரு புரூஸ்லீயாக விரும்பவில்லை. ஆனால், அதை நான் சொன்னபோது யாரும் கேட்கவில்லை.’

அன்றைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் கோணத்திலிருந்து பார்த்தால், அவர்களுக்கு வெற்றி வேண்டும், அவ்வளவுதான். ஏற்கெனவே புரூஸ்லீ வெற்றிபெற்றுவிட்டார் என்பதால், அதை அப்படியே பிரதியெடுப்பதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

ஆனால், ஆரம்ப நிலையிலிருக்கும் ஒரு நடிகர் இப்படி புரூஸ்லீயைப் பிரதியெடுத்தால், அவருடைய தனித்துவம் எப்படி வெளிப்படும்? அவருக்கென நல்ல வேடங்கள் கிடைக்குமா? ரசிகர்கள், விமர்சகர்கள் மதிப்பார்களா?

அந்த இளைஞர் புரூஸ்லீயின் நிழலிலிருந்து விலகி நிற்க விரும்பினார். தன்னுடைய முகம், உருவம், நடிப்புப்பாணி, தோற்றத்துக்கேற்ற வேடங்களில் நடிக்க ஏங்கினார், தனக்கென்று வித்தியாசமான சண்டைக்காட்சிகளை அமைக்க விரும்பினார். ஆனால், அத்தகைய வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை.

4right

இப்படிச் சில ஆண்டுகள் போராடிய பிறகு, அவர்மேல் நம்பிக்கை வைக்கும் ஒரு புதிய இயக்குநர் கிடைத்தார். முதன்முறையாக நடிப்பில், சண்டைக் காட்சிகளை அமைப்பதில் அவருக்கு முழுச் சுதந்திரம் கிடைத்தது. புரூஸ்லீயிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட, நகைச்சுவையான ஒரு படத்தை அவர்கள் உருவாக்கினார்கள்.

அன்றைய சூழலில் அது மிகப் பெரிய ஆபத்து. எல்லாரும் புரூஸ்லீயைப் பிரதியெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் அதிலிருந்து விலகி நிற்கிற ஒரு படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? சண்டைக் காட்சிகளோடு நகைச்சுவையைக் கலந்து தரும் வேறுவிதமான பாணிக்கு ரசிகர்களுடைய வரவேற்பு இருக்குமா?

‘Snake in the Eagle's Shadow’ என்ற அந்தப் படம் 1978-ல் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்றது. ‘இப்படியொரு படத்தை இதுவரை பார்த்ததில்லை’ என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். ‘எல்லாரும் புரூஸ்லீயைக் காப்பியடிக்காம வித்தியாசமா யோசிங்கய்யா’ என்று சொல்லாமல் சொன்னார்கள்.

முக்கியமாக, அப்படத்தின் நாயகன் ஜாக்கி சானுக்குப் பிரமாதமான வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு, அவர் யாரையும் பிரதியெடுக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து வெற்றிபெற்ற நடிகர்களின் வரிசையில் இணைந்தார், தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்தார்.

ஏற்கெனவே வென்ற ஒருவரைப் பிரதியெடுப்பது மிக எளிது. ஆனால், அப்படிப் பிரதியெடுப்பவருக்குப் பெரிய மரியாதை இருக்காது. நம்முடைய தனித்திறமைகள் வெளிப்படும்வண்ணம் செயல்படுவதுதான் தொலைநோக்கில் நமக்கு வெற்றிதரும்.

ஆகவே, உங்களை யாராவது காப்பியடிக்கச்சொன்னால், அவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள். உங்கள் தனித்துவத்துக்கான வெற்றி மெதுவாக வந்தாலும், நீடித்து நிற்கும்.

(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x