Last Updated : 29 Jun, 2018 10:22 AM

 

Published : 29 Jun 2018 10:22 AM
Last Updated : 29 Jun 2018 10:22 AM

வெல்லுவதோ இளமை 11: அறிவின் சுடரில் ஜொலித்த அழகு

‘சோஃபி, கிளம்பலாமா?’ என்றாள் வாரிஸ்.

‘இதோ, வந்துட்டேன்கா’ என்றது குழந்தை. பள்ளிப் பையைத் தூக்கிக்கொண்டு குடுகுடுவென்று ஓடிவந்தது. இருவரும் பேசியபடி நடக்கத் தொடங்கினார்கள்.

சோஃபியின் பள்ளி சற்றுத் தொலைவிலிருந்தது. தினமும் வாரிஸ்தான் அவளைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்ப அழைத்துவருவாள்.

வாரிஸ் அந்த வீட்டில் வேலைக்காரிமாதிரி. நிச்சயமாக ‘வேலைக்காரி’ என்று சொல்லாமல் ‘மாதிரி’ என்றொரு சொல்லைச் சேர்க்கக் காரணம், அந்த வீட்டில் குடியிருந்தவர் வாரிஸின் உறவினர். தன்னுடைய வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்வதற்காக அவளை லண்டனுக்கு அழைத்து வந்திருந்தார்.

லண்டனில் எல்லாரும் படபடவென்று ஆங்கிலம் பேசினார்கள். வாரிஸுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

அதனால் என்ன? வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மொழியா தேவை?

வாரிஸ் நாள் முழுக்க வேலை பார்த்தாள். அவ்வப்போது கனவு கண்டாள். நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும், கௌரவமாக ஊருக்குத் திரும்பிச்செல்ல வேண்டும்.

எப்படிப் பணம் சம்பாதிப்பது?

அவள் மாடலிங்கில் நுழைய விரும்பினாள். ஏனெனில், அவளுக்குத் தெரிந்த சிலர், ‘நீ ரொம்ப அழகா இருக்கே, பெரிய மாடலா வருவே’ என்று பாராட்டியிருந்தார்கள்.

இத்தனைக்கும் மாடலிங் என்றால் என்ன என்றுகூட வாரிஸுக்குச் சரியாகத் தெரியாது. அதற்காக என்னென்ன கற்றுக்கொள்ள வேண்டும், அத்துறையில் நுழைய என்ன முயற்சிகளை எடுக்க வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்று எதுவும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. வெறும் ஆசை மட்டும் இருந்தது.

அன்றைக்கு, சோஃபியும் வாரிஸும் பள்ளியை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது, எதிரில் ஒருவர் வந்தார். வாரிஸைப் பார்த்ததும் சட்டென்று நின்றுவிட்டார். அவளையே கூர்ந்து கவனித்தார்.

29chgow_Waris1

அவருடைய பார்வை, வாரிஸுக்குக் கூச்சம் தந்தது. ‘இந்த ஆள் எதுக்கு என்னை இப்படிப் பார்க்கறான்?’ என்று யோசித்தாள்.

அந்த மனிதருக்குச் சுமார் நாற்பது வயதிருக்கும், முடியைச் சேர்த்துச் சடைபோட்டிருந்தார். வாரிஸை அவர் பார்த்த பார்வை, இதுவரை அவர் பெண்களையே பார்த்ததில்லையோ என்பது போலிருந்தது.

சட்டென்று சோஃபியைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பி நடந்தாள் வாரிஸ். அதேநேரம் அந்த மனிதரும் வாரிஸை நோக்கி வந்தார். ஏதோ பேச ஆரம்பித்தார்.

வாரிஸுக்குதான் ஆங்கிலம் தெரியாதே. அவள் நடுங்கிப்போனாள், குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடிவிட்டாள்.

இந்த விஷயம் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது. அவளும் சோஃபியும் பள்ளிக்குச் செல்லும் வழியில் அந்த மனிதர் நின்றிருப்பார், வாரிஸிடம் பேச முயல்வார், அவள் ஏதும் பேசாமல் வீட்டுக்குச் சென்றுவிடுவாள்.

ஒருநாள் மதிய நேரம், சோஃபியை அழைத்து வருவதற்காகக் கிளம்பினாள் வாரிஸ். பள்ளியை நெருங்குவதற்குச் சற்றுத் தாமதமாகிவிட்டது. அதற்குள் சோஃபி வெளியே வந்திருந்தாள். அவளருகே இன்னொரு குழந்தை நின்றுகொண்டிருந்தது.

வாரிஸைப் பார்த்ததும், ‘ஹலோ’ என்றாள் சோஃபி, ‘இதுதான் என்னோட புதுத்தோழி!’

‘ஹலோ’ என்றாள் வாரிஸ், ‘சரி, வா, போகலாம்.’

அப்போதுதான் அந்த இரு சிறுமிகளுக்கும் அருகே நின்றிருந்த மனிதரைக் கவனித்தாள் வாரிஸ். நடுங்கிப்போனாள். அவளைத் தினமும் துரத்திவந்த மனிதர்தான் அங்கே நின்றிருந்தார்.

ஆனால், இந்த முறை அவர் வாரிஸிடம் பேசவில்லை. சோஃபியிடம் பேசினார், ‘இந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் பேச வருமா?’

‘யாருக்கு? வாரிஸுக்கா?’

‘ஆமாம்!’

‘ம்ஹூம், அவளுக்கு ஆங்கிலம் தெரியாது’ என்றாள் சோஃபி, ‘நீங்க என்ன விஷயம்னு சொல்லுங்க, நான் அவளுக்கு மொழிபெயர்த்துச் சொல்றேன்.’

அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு வாரிஸ் நடுங்கிவிட்டாள். ‘ஏய் சோஃபி, அந்தாள்கிட்ட என்ன பேச்சு? வா, போகலாம்’ என்றாள்.

‘அக்கா, இவர் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்.’

‘ம்ஹூம், நான் யார்கிட்டயும் பேசமாட்டேன்’ என்றாள் வாரிஸ். சட்டென்று சோஃபியை இழுத்துக்கொண்டு ஓடிவந்துவிட்டாள்.

அப்போதும், அந்த மனிதர் விடவில்லை. ஒருநாள் வாரிஸுக்குப் பின்னால் நடந்து அவளுடைய வீட்டுக்கே வந்து அழைப்புமணியை அடித்துவிட்டார்.

அப்போது கதவைத் திறந்தவர், வாரிஸின் உறவினர். ‘உங்களுக்கு யார் வேணும்?’

‘இந்த வீட்ல ஒரு பொண்ணு இருக்கு, அவகிட்ட நான் பேசணும்’ என்றார் அவர்.

‘நீங்க யாரு? எங்கிருந்தோ வர்றீங்க, திடீர்ன்னு வீட்டுக்குள்ள வந்து சின்னப் பொண்ணுகிட்ட பேசணும்னு சொன்னா என்ன அர்த்தம்?’

‘என் பேர் மால்கம் ஃபேர்சைல்ட். நான் ஒரு தொழில்முறைப் புகைப்படக் கலைஞர்’ என்றார் அவர், ‘இந்தப் பொண்ணைப் பள்ளிக்கூடம் போற வழியில பார்த்தேன். ரொம்ப அழகான முகம். அவளைப் படமெடுக்கணும்ன்னு ஆசைப்படறேன்.’

‘அதெல்லாம் முடியாது, வெளியே போங்க’ என்று கதவை அறைந்து சாத்திவிட்டார் வாரிஸின் உறவினர்.

இதைக் கேள்விப்பட்ட வாரிஸ் இன்னும் நடுங்கிப்போனாள், ‘யாரோ ஒரு ஆள் என்னைப் படமெடுக்கறேன்னு துரத்தறாரே, இதுக்கு என்ன அர்த்தம்? ஒருவேளை, இவர் ஆபாசமாப் படமெடுக்கிறவரோ?’

நல்லவேளையாக, வாரிஸின் உறவினர் தந்த பதிலடிக்குப்பின் அந்த மனிதர் அவளைத் தொந்தரவுசெய்யவில்லை. எப்போதாவது அவளைப் பார்த்தாலும் மெல்லச் சிரிப்பார். அவ்வளவுதான்.

ஒருநாள், அவர் மீண்டும் வாரிஸை நெருங்கிவந்தார். தன்னுடைய தொழில், முகவரி விவரங்களைக் கொண்ட ஓர் அட்டையைக் கொடுத்தார்.

வாரிஸ் தன்னுடைய சோமாலி மொழியில் அவரைக் கண்டபடி திட்டினாள். ஆனால், அவர் தந்த முகவரி அட்டையை வாங்கிக்கொண்டாள், அதைத் தூக்கியெறியவில்லை.

அதன்பிறகு, வாரிஸ் வாழ்க்கையில் பல மாற்றங்கள், அவளுடைய உறவினர் சொந்த நாட்டுக்கே திரும்பிவிட்டார், அவள் இங்கே ஓர் உணவகத்தில் வேலைபார்த்தபடி ஆங்கிலம் கற்றுக்கொண்டாள், அவளுக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள், தன்னம்பிக்கை அதிகரித்தது.

ஒருநாள், அவள் வேலைசெய்கிற உணவகத்துக்கு அந்த மனிதர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும், அவளுக்குள் ஏதோ குறுகுறுப்பு. பல நாட்களுக்குமுன் அவர் தந்த முகவரியட்டையைத் தேடி எடுத்தாள். அதில் இப்படி எழுதியிருந்தது: ‘Malcolm Fairchild, Fashion Photographer.’

அதென்ன ஃபேஷன் ஃபோட்டோகிராஃபர்? வாரிஸுக்குப் புரியவில்லை. தன்னுடைய தோழி ஒருத்தியிடம் கேட்டாள்.

‘ஃபேஷன் ஃபோட்டோகிராஃபர்னா, அழகான ஆண்கள், பெண்களுக்குப் புது ஆடைகளை அணியவெச்சுப் புகைப்படம் எடுக்கறவங்க’ என்று விளக்கினாள் அந்தத் தோழி.

‘அட!’ என்றாள் வாரிஸ். ‘எனக்கு இது பிடிக்குமே!’

‘அப்புறமென்ன? அவரோட தொலைபேசி எண் இருக்கு, கூப்பிட்டுப் பேசு!’

அந்தத் தொலைபேசி அழைப்பு, வாரிஸின் வாழ்க்கையை மாற்றியது. அந்த மனிதர் வாரிஸை அழகாக ஒரு புகைப்படமெடுத்தார். அந்தப் புகைப்படம் அவளுக்குப் பல புதிய வாய்ப்புகளை உண்டாக்கித் தந்தது. குறைந்த சம்பளத்துக்கு நாள் முழுக்க வேலைபார்த்துச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த வாரிஸ், உலகின் முன்னணி மாடல்களில் ஒருவராகிப் பெயரும் புகழும் சம்பாதித்தார். தன்னைப் போல் ஏழைக் குடும்பங்களிலிருந்து வந்த பெண்களுக்காகக் குரல்கொடுத்து உதவினார்.

மாடலிங் துறையில் நுழைய வேண்டும் என்று விரும்பிய இளம்பெண் வாரிஸை அதற்கான வாய்ப்பு தேடி வந்தது. ஆனால், அவள் அதைப் புரிந்துகொள்ளாமல் பயந்தாள், அதிலிருந்து விலகி ஓடினாள். காரணம், அவளுக்குள் அப்போது தன்னம்பிக்கை இல்லை, என்ன நடக்கிறது என்பதும் புரியவில்லை. பின்னர், அந்த மனிதரைப் பற்றியும் அவருடைய தொழிலைப் பற்றியும் தெரிந்துகொண்ட பிறகு, அவள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறினாள்.

அறியாமை பயமுறுத்தும், முடக்கிப்போடும், அந்த நோய்க்கு ஒரே மருந்து, அறிவுதான். எதைப் பற்றியும் கேள்வி கேட்டு மேலும் மேலும் தெரிந்துகொள்ளும்போது, நல்ல வெளிச்சம் பிறக்கும். அறிவின் சுடரில்தான் முன்னேற்றம் சாத்தியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x