Published : 15 Aug 2014 10:00 AM
Last Updated : 15 Aug 2014 10:00 AM
கல்லூரிக்குள் நுழைந்து முதல் செமஸ்டருக்குள் பேஸ்புக்கில் தங்கள் ‘ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ்’ எப்படியாவது ‘சிங்கிளில்’ இருந்து ‘கமிட்டட்’ ஆக மாறிவிடாதா என்ற ஏக்கம் பலரிடம் இருக்கவே செய்கிறது. அது ஒரு வகையில் நியாயமானதும்கூட.
இந்த ‘ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ்’ மாறுவது என்பது இரு தனிநபர்களின் பரஸ்பரப் புரிதலுடன் இயல்பாக மாறும்போது அதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படுவதும் இல்லை. ஆனால், ‘பியர் பிரஷ’ரால் (உடன் இருப்பவர்களால் வரும் நெருக்கடி) உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை மாற்றுவதற்கு வலிய தேடிச் சென்று முயற்சிகள் மேற்கொண்டால் அது உங்களுக்கு மோசமான அனுபவமாகக்கூட மாற வாய்ப்பிருக்கிறது என்று பல மாணவர்களிடையே பேசும்போது தெரியவருகிறது.
கல்லூரியில் ‘சிங்கிளாக’ இருப்பதை பலரும் ‘பியர் பிரஷர்’ காரணமாக ஏதோ பெரிய குறையாக நினைக்கிறார்கள். ஆனால், ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ, அதே அளவுக்கு சிங்கிளாக இருக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை ரிலேஷன்ஷிப் எக்ஸ்பர்ட்களும் உறுதிசெய்கிறார்கள்.
காதலிக்க நேரமில்லை!
பதினெட்டு வயது ஆகிவிட்டால், கட்டாயம் ரிலேஷன்ஷிப்பிற்குள் நுழைந்துவிட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வாழ்க்கையின் கனவுகளுக்கும், லட்சியங்களுக்கும் அடித்தளம் அமைப்பதற்கான நேரமும் இதுதான் என்பதை மறந்துவிடக் கூடாது. கேர்ள் பிரண்டோ, பாய் பிரண்டோ கிடைத்துவிட்டால் பிறகு அவர்களுடனே உங்கள் பெரும்பாலான நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.
அவர்களின் விருப்பு வெறுப்புகளை உங்களுடையதாக மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் ஆபத்தும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கவே செய்கிறது. “ரிலேஷன்ஷிப்பில் நுழைந்தவுடன் ஏதாவது ஒரு விதத்தில் நம்முடைய சுயத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆனால், சிங்கிளாக இருக்கும்போது நமக்குப் பிடித்த விஷயங்களை யாருடைய அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் சுதந்திரமாக செய்யலாம்” என்கிறார் சிங்கிளாக இருக்கும் கீர்த்தனா.
மிஸ்ஸாகும் நட்பு
ரிலேஷன்ஷிப்பிற்குள் நுழைவதற்கு முன்புவரை ‘ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்’ என்று நட்பைக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள்கூட ‘கமிட்’ ஆனவுடன் தலைகீழாக மாறிவிடுவார்கள். அதுவும் உங்களுக்கு ஒரே ஒரு ‘பெஸ்டீ’ இருந்து அவர் சமீபத்தில்தான் ‘கமீட்’ ஆனவர் என்றால் அவ்வளவுதான். ஒரே வாரத்தில், அவர் உங்களை ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்று பாட வைக்காமல் விட மாட்டார்.
அந்த ஒரே வாரத்தில், ஏதோ உலகத்திலே நாம் மட்டுந்தான் ‘தனிமையிலே இனிமை’ தேடிக்கொண்டிருப்பவராக மாற்றி, நம்மிடம் பேசும் இரண்டு நிமிடத்தில், “மச்சான், யூ மஸ்ட் ஆல்சோ கெட் இண்டு ரிலேஷன்ஷிப்” என்று இலவச அட்வைஸ் வழங்குவார்.
ஆனால், அதற்கெல்லாம் அசரவே கூடாது. இப்படி அட்வைஸ் செய்த இதே ‘பெஸ்டீ’ அடுத்த வாரமே வந்து, “மச்சான் நான் தப்பு பண்ணிட்டேன். இந்த ரிலேஷன்ஷிப்பில் இருப்பதைவிட கொடுமை எதுவும் கிடையாது” என்று கதறுவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
“ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் சோஷியல் கனெக்டிவிட்டியை இழக்கவே செய்கிறார்கள். குடும்பத்துடனும் நண்பர்களிடமும் அவர்கள் செலவிடும் நேரம் திடீரென்று ஒரேடியாகக் குறைந்துவிடும். அத்துடன் ‘ரியாலிட்டியை’ மறந்து ஒரு வித இன்செக்யூரிட்டியுடனேயே நட்பு வட்டத்தில் வலம் வருவார்கள்”, என்று ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் பத்தொன்பது வயது சரண்.
சிங்கிளாக இருப்பவர்கள் கஷ்டப்பட்டு சமாளிக்க வேண்டியது, அவர்கள் நண்பர்களுக்கு ஆகும் ‘பிரேக் அப்’பிற்குப் பிறகான நேரத்தைத்தான். “பிரண்டு வருத்தப்படும்போது எப்படி சமாதானம் சொல்லாமல் இருப்பது என்று நினைத்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்தால் அவ்வளவுதான், நாம் தொலைந்தோம். ஒரு நாள் முழுக்க அசராமல் நம்மைப் பேசவைத்துவிட்டு, அடுத்த நாளே எந்த சுவடும் தெரியாமல் அவர்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். கேட்டால், சாரி சொல்லியாச்சு, எவ்ரிதிங் இஸ் ஃபைன் என்று கூலாக நம்மைக் கழட்டி விட்டுவிடுவார்கள்”, என்று எச்சரிக்கிறார் கீர்த்தனா.
விரைவில் வசப்படும் கனவுகள்
பியர் பிரஷருக்கு ஆட்படாமல் ‘சிங்கிள்’ ஸ்டேட்டஸை இயல்பாக எடுத்துக்கொள்பவர்கள் சீக்கிரத்தில் தங்கள் லட்சியங்களையும் கனவுகளையும் அடைகிறார்கள் என்பது உண்மை. கவனச் சிதறல் என்பது சிங்கிள் சிங்கங்களுக்குக் கிடையாது. கல்லூரியில் கல்ச்சுரல்ஸ், வர்க் ஷாப்ஸ், செமினார் என இவர்கள் திறமையால் கலக்கல் ரவுண்டு வந்துகொண்டிருப்பார்கள்.
ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் எப்படியிருந்தாலும் ஒரு வித கவனச் சிதறலுக்கு ஆட்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் மாணவர்கள் கருதுகிறார்கள். “சமூகத்துடனும் கனவுகளுடனும் தொடர்ந்து பயணம் செய்வது சிங்கிளாக இருக்கும்போது நிறைய சாத்தியப்படும்” என்று சொல்கிறார் கீர்த்தனா.
ஆண் / பெண் நட்பு எப்படி இயல்பானதோ அதேபோல சிங்கிளாக இருப்பதும் இயல்பானதுதான். அதில் தவறேதும் இல்லை என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கிளாக இருப்பதையும் ஜாலியாக என்ஜாய் செய்வதில் எந்த மனத்தடையும் தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT