Last Updated : 13 Sep, 2024 06:09 AM

 

Published : 13 Sep 2024 06:09 AM
Last Updated : 13 Sep 2024 06:09 AM

ஓவியமாகும் கல்யாண வைபோகம்!

திருமணத்தில் மணமக்களை ஒளிப்படமோ வீடியோவோ எடுப்பது புதுமையல்ல. ஆனால், அதுவே ஓவியமாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்! கிராஃப்ட் பிசினஸில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மதி ராஜ் இதைத்தான் செய்து வருகிறார்.

‘லைவ் வெட்டிங்’ ஓவியம்: திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் வந்தவர் சூழ்ந்திருக்க மணமக்களின் ஓவியங்களை ‘லைவ்’ ஆக வரைவதுதான் இந்த ‘லைவ் வெட்டிங்’ ஓவியங்களின் கான்செப்ட். மேடை, அரங்கம், பூ அலங்காரம், மணமக்கள், மாலைகள் என ஒவ்வொன்றையும் தத்ரூபமாக ஓவியத்தில் கொண்டுவருவது சவாலான காரியமே. தேர்ந்த கலைஞர்களின் உதவியோடு இந்தப் பணியைத் திறம்படச் செய்துவருகிறார் மதி ராஜ்.

“திருமண நிகழ்ச்சியின்போது ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களை கேமராவிலும் திறன்பேசியிலும் படம் பிடித்தாலும் இந்த ‘லைவ்’ ஓவியம் கண்டிப்பாக மணமக்களுக்கு மறக்க முடியாத பரிசாக அமையும். அதுவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு நேரமெடுத்து ஒளிப்படத்தைப் பார்த்து ஓவியத்தை வரைவதுபோல அல்லாமல், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே ஓவியத்தை வரைந்து கொடுப்பது அந்தத் தருணத்தைச் சிறப்பானதாக மாற்றிவிடும். தேர்ந்த ஓவியர்கள் இந்த ‘லைவ் வெட்டிங்’ ஓவியங்களை வரைகிறார்கள்.

“இது ஒரு பரிசு என்பதைத் தாண்டி விருந்தினரையும் உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு செயலாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கிறது. விருந்தினராக வருபவரில் சிலர் தொந்தரவு தரும் தொணியில் பேச்சுக் கொடுத்தாலும், அவர்களைச் சமாளித்து நிகழ்ச்சி முடிவதற்குள் ஓவியத்தை வரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முன் இருக்கும் பெரிய சவால்.

முடிவில் ஓவியத்தைப் பார்க்கும்போது அந்த அலப்பறைகளெல்லாம் மறக்க முடியாத அனுபவங்களாகிவிடும். மணமக்களை ஆச்சரியப்படுத்த இந்த ‘லைவ் வெட்டிங்’ கிஃப்ட்டைத் தேர்வு செய்யலாம்” என்கிறார் மதி ராஜ்.

புதுமைகள் புகுத்தி: பிறந்தநாளோ பண்டிகையோ எதுவென்றாலும் கொண்டாட்டம்தான். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பணமோ பொருளோ பரிசாகத் தருவதும், பெறுவதும் வழக்கம்தான். ஆனால், எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் கிராஃப்ட் பொருள்களையே பரிசாகத் தருகிறார் மதி ராஜ்.

அவருக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிராஃப்ட் ஆர்வம், தற்போது ‘லீ கிஃப்ட்ஸ்’ எனும் பரிசுப் பொருள்களுக்கான அங்காடியாகவும் வளர்ந்துள்ளது. தனி ஆளாகக் கைப்படச் செய்து கிஃப்ட் பொருள்களை விற்பனை செய்து வந்தவரோடு, தற்போது 22 பேர் பணியாற்றுகின்றனர்.

“கைக்கடிகாரம், துணி, பை, ஸ்மார்ட் பொருள்களைப் பரிசாகத் தந்தாலும், அவற்றைச் சொந்தமாக வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், கைப்பட எழுதிய கடிதங்கள், ஓவியங்கள், ஒளிப்படங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளே மனதுக்கு நெருக்கமான பரிசுகளாக அமைகின்றன.

இதை ‘customized’ பொருள்கள் என்கிறோம். அதாவது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்துக்கேற்ப ஒளிப்படங்கள், வாழ்த்துகள் சேர்த்து வடிவமைக்கப்படும் பொருள்கள் இந்த வகையில் சேரும். அந்தக் காலத்தில் கைப்பட எழுதிய வாழ்த்து அட்டைகளின் இன்னொரு வடிவமே இது. ஆனால், தொழில்நுட்பத்தின் உதவியோடு சில புதுமைகளையும் புகுத்தி பரிசுகளைத் தயாரிக்கிறோம்.

“பணப்பையில் பிடித்தவரின் ஒளிப்படத்தை வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘வாலட் கார்டு’ பரிசுப் பொருளில் ஒளிப்படத்தை மெருகேற்றி, பிடித்த பாடலின் ‘ஸ்கேன் கோட்’ஐ ஒட்டி உருவாக்கியுள்ளோம். இதைப் பணப்பையில் வைத்து, கொண்டு செல்லலாம்.

திறன்பேசியில் ஸ்கேன் செய்தால் விருப்பப் பாடல் ஒலிக்கும். தற்போது இதுபோன்ற கிராஃப்ட் பொருள்களுக்குச் சந்தையில் வரவேற்பு உள்ளது. ‘லைவ் வெட்டிங் பெயிண்டிங்’, ‘லெட்டர் பாக்ஸ்’, ’கற்பனையான பென்சில் ஓவியங்கள்’ என ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்” என்கிறார் மதி ராஜ். இன்ஸ்டகிராம் இணைப்பைப் பார்க்க - https://www.instagram.com/leegiftsandletters/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x