Published : 08 Jun 2018 11:36 AM
Last Updated : 08 Jun 2018 11:36 AM
உ
லகளவில் புகழ்பெற்ற ‘காதல்’ (Love) சிற்பங்களை உருவாக்கியவர் ராபர்ட் இண்டியானா. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இரண்டு வாரங்களுக்கு முன்னால் காலமானார். தனது மரணத்துக்குப் பிறகு தனது வீடும் ஸ்டூடியோவும் அருங்காட்சியகமாக மாற வேண்டும் என்பது அவரது ஆசை. அந்த ஆசைக்கு தற்போது வடிவம் கொடுத்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் அவரது வீடும் ஸ்டூடியோவும் அருங்காட்சியகமாக மாற இருக்கின்றன.
1965-ம் ஆண்டு, ‘LOVE’ என்ற வார்த்தையை வைத்து ‘மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸ்’ அருங்காட்சியகத்துக்கு ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை வடிவமைத்தார் ராபர்ட். அவரது இந்தப் கலைப் படைப்புக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, 1970-களில் ‘LOVE’ சிற்பங்களை ஒரு கலைத் தொடராக வடிவமைக்கத் தொடங்கினார் ராபர்ட். முதல் கட்டமாக அமெரிக்காவின் பிரபல நகரங்களில் வடிவமைக்கப்பட்ட இந்த ‘LOVE’ சிற்பம், உலகின் பிரபல நகரங்களிலும் பின்னர் வடிவமைக்கட்டது.
ஆங்கிலத்துடன் ஹீப்ரு, இத்தாலிய, ஸ்பானிய மொழிகளிலும் இந்தச் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காவின் பிரபல நகரங்களில் வண்ணமயமாக இந்தக் காதல் சிற்பங்கள் பரவியிருக்கின்றன.
1950-களின் இறுதியில் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் வெகுஜனக் கலைகளைப் பிரதிபலிப்பதற்காக உருவான ‘பாப் ஆர்ட்’ இயக்கத்தின் (Pop Art Movement) அங்கமாக இந்தக் காதல் சிற்பம் அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் ‘பாப் ஆர்ட்’ இயக்கத்தின் பிரபல கலைஞர்களின் ஒருவராக உலகம் முழுவதும் அறியப்படுகிறார் ராபர்ட் இண்டியானா. அவரது வீடு, தற்போது அமெரிக்காவின் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கான தேசிய பதிவி’லும் இடம்பெற்றிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT