Published : 01 Jun 2018 11:33 AM
Last Updated : 01 Jun 2018 11:33 AM
பொ
துவாக சலூன்களுக்கு சென்றால் மிலிட்டரி கட், போலீஸ் கட் என்று கேட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. புதிய பெயர்களில் ஸ்டைலான சிகையலங்காரங்கள் நிறையவே வந்துவிட்டன. ஆனால், மும்பையைச் சேர்ந்த மீட் கலா (meet gala) என்ற இளைஞர் தலைமுடியில் நெருப்பை பற்ற வைத்து புதுமையாக சிகையலங்காரம் செய்கிறார். ‘ஃபயர் கட்’ என்ற பெயரில் அவர் செய்யும் சிகையலங்காரத்துக்குத் தனி மவுசு ஏற்பட்டுள்ளது.
சாதாரண சிகையலங்கார சலூனாக இருந்த கடையை, ‘ஃபயர் ஹேர் கட்’ மூலம் சர்வதேச கவனம் பெரும் அளவுக்கு மாற்றியுள்ளார் கலா. ‘ஃபயர் ஹேர் கட்’ செய்துகொள்வதற்காக மும்பையில் கலா வைத்துள்ள கைஸோ சலூனுக்கு (kaizo saloon) தினமும் வாடிக்கையாளர்கள் படையெடுக்கிறார்கள். கலாவின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது அம்மாதானாம். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் சிகையலங்கார கலைஞராக உள்ளார் இவர்.
உதவிக்கு வந்த அப்பா
“ என் அம்மாவிடமிருந்தது தான் சிகையலங்காரக் கலையைக் கற்றுக்கொண்டேன். தினமும் சலூனில் வழக்கமாக சிகையலங்காரம் செய்ய சலிப்பாக இருந்தது. சிகையலங்காரத்தில் ஏதாவது புதுமையைப் புகுத்த வேண்டும் என முடிவெடுத்தேன். தலைமுடியில் எண்ணெய், வெண்ணை தடவி நெருப்பை பற்றவைத்து சிகையலங்காரம் செய்ய முடியுமா என சோதித்தேன். என் நண்பர் ஒருவர் காட்டிய வழியால், ரசாயனப் பொடியைக் கலந்து ‘ஃபயர் கட்’ என்ற புதுமையான சிகையலங்காரத்தை செய்ய தொடங்கினேன்” என்கிறார் கலா.
ரசாயனப் பொடியை தலைமுடியின் மீது தூவி, முடியில் நெருப்பை பற்ற வைக்கிறார். தலைமுடியில் நெருப்பு பற்றி எரியும்போதே சிகையலங்காரத்தை செய்கிறார் கலா. இந்த வகை ஸ்டைலால் உச்சந்தலையில் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லையாம். இந்தப் பணி சிகையலங்காரத்தால் பிளவுபட்ட முடிகள், பலம் இழந்த முடிகள் சாம்பலாகிவிடுகிறதாம். ‘ஃபயர் ஹேர் கட்’ செய்வதால், முடி பளபளப்பாக இருக்கும் என்கிறார் கலா. ஆனால், இந்தச் சிகையலங்காரத்தை தலை முடி அடர்த்தியாக உள்ளவர்களுக்கு மட்டுமே செய்கிறார்.
பீட்ரூட் கலரிங்
இவரிடம் சிகையலங்காரம் கற்றுக்கொண்டவர்கள் இந்த ஸ்டைலை பல இடங்களிலும் பின்பற்றி சிகையலங்காரம் செய்கிறார்கள். இந்த வகையான சிகையலங்காரத்துக்கு ஆயிரம் ரூபாய்வரை வசூலிக்கிறார்களாம். ‘ஃபயர் ஹேர் கட்’ மூலம் பிரபலமடைந்த மீட் கலா, தற்போது பீட்ரூட் காயைக் கொண்டு தலைமுடிக்கு கலரிங் கொடுக்க முடியுமா என்ற முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT