Last Updated : 15 Jun, 2018 11:00 AM

 

Published : 15 Jun 2018 11:00 AM
Last Updated : 15 Jun 2018 11:00 AM

அவரை நீங்க பாத்தீங்களா?

வெ

குளி வெள்ளச்சாமி எப்படியோ ஒரு செய்தியாளர் ஆகிவிட்டான். ஒரு முறை தற்செயலாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடிகர் குஜினியைச் சந்தித்தான். அவசர அவசரமாக அவர் சமயமலைக்குத் தியானத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். வழக்கமாக விமானத்தில் செல்லும் குஜினி, இந்த முறை ஒட்டுத்தாடி, முகத்தில் மரு என்ற மாறுபட்ட கெட்டப்பில் இருந்தாலும் வெள்ளச்சாமியின் கூர்மையான பார்வையிலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை.

சட்டென்று அவர் முன் சென்று மைக்கை நீட்டினான் வெள்ளை. ‘என்ன என்ன’ என்று பதறினார் நடிகர். ‘ஒண்ணுமில்ல சார், இங்கே கிடைக்காத அமைதி சமயமலையில் உங்களுக்குக் கிடைக்கிறதா?’ என்று முதல் கேள்வியை ஒரு கத்தியைப் போல் சொருகினான் வெள்ளை. குஜினிக்கு ஒரு நிமிஷம் உடம்பே சுத்தியிருச்சு. கிறுகிறுன்னு வந்துருச்சு. அவர் பதற்றத்தில் ‘ஏய்.. ஏய்’ என்று மட்டும் சொன்னார்.

வெள்ளை பயந்து நடுங்கிவிட்டான். ‘என்னடா வம்பாப் போச்சு. நாம ஏதோ கேக்கப் போய் இவரு கையக் கால நீட்டிட்டாருன்னா நம்ம பாடு பெரும்பாடாப் போயிருமே’ன்னு சத்தமில்லாம, பதிலை பற்றிக் கவலைப்படாமல் மைக்கை எடுத்துட்டு வந்துட்டான். தன்னோட சேனலில்கூட இந்த விஷயத்தைச் சொல்லல. ஆனால், இதை எவனோ வீடியோ எடுத்து வேஸ்ட்அப்பில் பரப்ப, அதன் பின்னர் வெள்ளை நாடறிந்த செய்தியாளர் ஆகிவிட்டான்.

வெள்ளை செய்தியாளராக நிலைபெற்ற நேரத்தில் நடிகர் சீஸ்அர் லூஸ்புக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். அந்தப் பதிவை அவருடைய நண்பர் பேரிக்காவிலிருந்து அனுப்பி இருந்தார். அதைப் படித்த நடிகர் சீஸ்அர் அது என்ன ஏது என்று புரிந்து கொள்ளாமல் அதை அப்படியே லூஸ்புக்கில் பகிர்ந்துவிட்டார். அவ்வளவுதான். அதைப் பார்த்த அனைவரும் கொதித்து எழுந்தார்கள். நடிகர் சீஸ்அருக்கு எதிராகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள். அவர்கள் கோரிக்கையில் இருந்த உண்மையை உணர்ந்து நடிகர் சீஸ்அரே தன்னைக் கைது செய்வதுதான் சரியான நடவடிக்கை என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் காவல் துறையால் கண்டேபிடிக்க முடியவில்லை. இவ்வளவுக்கும் அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். ஒட்டுத்தாடி, மரு போன்ற மாறுபட்ட கெட்டப்பில் எல்லாம் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. எந்த மேக்கப்பும் இன்றி நடமாடினார். அதனாலோ என்னவோ அவருடன் வரும் காவலருக்குக்கூட அவரை அடையாளம் தெரியவில்லை.

காவல்துறையும் அவரது அடையாளத்தைச் சொல்லி பத்திரிகையில் விளம்பரம் எல்லாம் கொடுத்தது. அவரது சட்டையில் கீழ் பொத்தான் கிடையாது என்றும் வலது கையை ஆட்டிக்கொண்டே இருப்பார் என்றும் தகவல்கள் எல்லாம் தந்திருந்தனர். ஆனாலும் காவல் துறையினரால் மட்டும் அவரைப் பார்க்கவே இயலவில்லை. சாதாரண மனிதர்களின் கண்களுக்குத் தட்டுப்படும் சீஸ்அர், காவல் துறையின் கண்களுக்குத் தெரியாதவாறு பாராசக்தி தான் அவருக்குச் சக்தி கொடுத்திருக்க வேண்டும்.

நடிகர் சீஸ்அரைத் தான் ஏன் ஒரு பேட்டி எடுக்கக் கூடாது என நினைத்தான் வெள்ளை. அவருடைய வீட்டுக்கு நேரடியாகச் சென்றான். அப்போது சீஸ்அர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் உடற்பயிற்சி செய்கிறார் என்பதே அவனுக்கு வியப்புக்குரியதாக இருந்தது. பொறுமையாகக் காத்திருந்தான். நடிகர் சீஸ்அர், காப்பியைத் தருவித்து அவனுக்குத் தந்தார். குடித்து முடித்த வெள்ளை, ‘உங்களை ஏன் காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றான். அதற்கு நடிகர், ‘அவர்கள் வழக்கம்போல் பிற இடங்களில் எல்லாம் தேடுகிறார்கள்; நானோ எனது வீட்டிலேயே இருக்கிறேன். அதனால் அவர்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றார்.

‘நீங்களே சென்று ஏன் சரணடையக் கூடாது’ என்றான் வெள்ளை. சட்டென்று கடுங்கோபம் கொண்டார் நடிகர் சீஸ்அர். ‘நீங்கள் நமது காவல் துறையை அவ்வளவு இழிவுபடுத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது என்று சொல்லி விட்டு, நானே சென்று சரணடைந்தால் காவல் துறையினரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது போல் ஆகாதா’ என்று எதிர்க்கேள்வி கேட்டார். அவரது பதிலிலிருந்த நேர்மையை ரசித்தான் வெள்ளை. ‘ஆகவே, எத்தனை காலம் ஆனாலும் காவல் துறை வந்து தன்னைக் கைது செய்வதுவரை தான் பொறுத்திருக்கப் போவதாகவும், தன் ஆயுள் முடிவதற்குள் கண்டிப்பாகக் காவல் துறை தன்னைக் கண்டுபிடித்து கைதுசெய்யும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதா’கவும் நடிகர் சீஸ்அர் முத்தாய்ப்பாக முடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x