Last Updated : 08 Jun, 2018 11:41 AM

 

Published : 08 Jun 2018 11:41 AM
Last Updated : 08 Jun 2018 11:41 AM

வாக்களிக்க உதவும் செயலி!

‘நான் வேலை பார்க்குறது சென்னைல… ஆனா, எனக்கு ஓட்டு இருக்குறது மதுரையில. இதுக்காக ஊருக்குப் போய் ஓட்டு போட முடியுமா?’ என்பது போன்ற பல்வேறு காரணங்களைச் சொல்லி ஜனநாயக உரிமையைப் பறிகொடுத்து விடுகிறோம். இதற்கெல்லாம் தீர்வு காணும் விதமாக ‘வோட்சிஸ்டம்’ (VoteSystem) என்ற செயலியை வடிவமைத்திருக்கிறார் இளம் பொறியியல் பட்டதாரியான குருசாமி. ஸ்மார்ட்ஃபோன் செயலியைப் பயன்படுத்தி வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்கிறார் அவர். தனது கண்டுபிடிப்பை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டு, அதன் முடிவுக்காகக் காத்திருக்கிறார் இவர்.

மதுராந்தகத்தில் உள்ள செண்டூ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்கும் குருசாமி, பிறந்து வளர்ந்தது எல்லாம் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியில்.

பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவர் இவர். பிளஸ் டூவிலும் சிறப்பாக மதிப்பெண் குவித்தவர். ஆனால், பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் என்பதால் கல்விக் கட்டணம் ஏதுமின்றிப் பொறியியல் படிப்பை மேற்கொள்ள இவருக்கு கைகொடுத்திருக்கிறது இவருடைய கல்லூரி நிர்வாகம். “நல்லா படிக்கிற மாணவனாக இருந்தாலும் நான் புதியதைப் படைக்கக் கத்துகிட்டது வகுப்பறைக்கு வெளியிலதான். எங்களுடைய கல்லூரியின் அப்துல் கலாம் புத்தாக்க மையத்துலதான் எந்நேரமும் ஆய்வில் ஈடுபட்டுக்கிட்டிருப்பேன். அதுக்கு முழு ஒத்துழைப்பும் உத்வேகமும் என்னுடைய கல்லூரி முதல்வரும் பேராசிரியருமான முகமது அப்துல் காதர் கொடுத்தார்” என்கிறார் அவர்.

எதற்கு தொழில்நுட்ப அறிவு?

மூன்றாமாண்டு படிக்கும்போது கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆண்ட்ராய்டு பயன்பாடு தொடர்பான ஒரு பயிலரங்கத்தில் கலந்துகொண்டு செயலி வடிவமைப்பைக் கற்றுக்கொண்டிருக்கிறார் இவர். அதன் மூலம் மருத்துவமனை மேலாண்மை, மாணவர் வருகை மேலாண்மை போன்றவற்றுக்கு செயலிகளை வடிவமைத்திருக்கிறார். இதன்பின்னரே ‘வோட் சிஸ்டம்’ செயலியையும் உருவாக்கினார்.

“நிர்வாகம் தொடர்பான செயலிகளை வடிவமைத்துக்கொண்டிருந்த நாட்களில் முதலாமாண்டு படிக்கும்போது தேர்தலில் வாக்களிக்க ஒரு நாள் விடுமுறையில் அவசர அவசரமாக மதுராந்தகத்திலிருந்து ஆலமரத்துப்பட்டிக்கு போய்வந்தது நினைவுக்கு வந்தது. அட, இது போன்றவற்றுக்குத்தானே நம்முடைய தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தணும் என்று முடிவெடுத்தேன். ‘வோட்சிஸ்டம்’ செயலியை உருவாக்கினேன்” என்கிறார் குருசாமி.

ஏற்கெனவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குப்பதிவு பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. வாக்களித்ததற்கு அடையாளமாக விரலில் பூசிய மையைக்கூட அழித்துவிட்டு மீண்டும் கள்ள ஓட்டு போடும் வேலைகள்கூட நடைபெறுகின்றன, இதில் செயலி மூலமாக முறைகேடு அற்ற வாக்குப்பதிவு சாத்தியமா? என்று கேட்டால், “நிச்சயம் சாத்தியம்தான்.

முறைகேடுகளைத் தடுப்பது மட்டுமல்ல தேர்தல் முடிவுகளையும் குறுகிய நேரத்தில் இந்தச் செயலியின் மூலமாகவே கணக்கிட்டு விடலாம். 100 சதவீதம் வாக்குப்பதிவு என்கிற கனவை நிஜமாக்க இந்தச் செயலி கைகொடுக்கும். அந்த நம்பிக்கையில் செயலியை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறேன்” என்கிறார் குருசாமி.

வாக்குப்பதிவுக்கான செயலியை வடிவமைத்த தேர்வில் குருசாமி வெற்றி காண்பரா என்பதை இனித் தேர்தல் ஆணையம்தான் சொல்ல வேண்டும்!

செயலி வாக்களிப்பு எப்படி?

தேர்தல் ஆணையம், வாக்காளர்கள், தேர்தல் முடிவு உள்ளிட்ட மூன்று பகுதிகளைக் கொண்டது ‘வோட் சிஸ்டம்’ செயலி. வேட்பாளர்கள், வாக்காளர்களின் விவரங்கள் தேர்தல் ஆணையம் பகுதியில் பதிவுசெய்யப்பட்டிருக்கும். 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணைப் பதிந்து இந்தச் செயலியைப் பயன்படுத்லாம். வாக்காளர்கள் தங்களுடைய பெரு விரல் ரேகையைப் பதிந்து செயலியைத் திறக்கலாம்.

அதன்பின் அவர்களுடைய ஸ்மார்ட்ஃபோனுக்கு ஒரு ‘OTP’ எண் அனுப்பப்படும். அதைப் பதிவேற்றியதும் ஸ்மார்ட்ஃபோன் திரையில் வேட்பாளர் பட்டியில் தோன்றும். வாக்களிக்க விரும்பும் வேட்பாளரை ‘கிளிக்’ செய்தவுடன், ‘உறுதியளிப்பு’ கேட்கப்படும். மீண்டும் உறுதிசெய்தவுடன் வேட்பாளருக்கு வாக்கு சென்றுவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x