Published : 20 Apr 2018 09:59 AM
Last Updated : 20 Apr 2018 09:59 AM
ஓ
ர் இளைஞனும் யுவதியும் சாதாரணமாகப் பார்த்துப் பேசிக்கொள்வதைக்கூடக் காதல் என்று நினைக்கக்கூடிய காலம் இது. இந்த விஷயத்தில் பதின் பருவத்தினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இரு பாலர் படிக்கும் கல்லூரி என்றால், வகுப்புத் தோழி யதார்த்தமாகப் பழகினால்கூட, மாணவர்கள் ‘மிஸ்டர் ரோமியோ’க்களாக மாறி கனவு காண ஆரம்பித்துவிடுவார்கள்.
இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத பருவம் என்பதால், அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. உடன்படிப்பவர்களும் அதே வயதுடையவர்கள் என்பதால், அவர்களுடைய வழிகாட்டலும் எதிர் மறையாக இருக்கும். ‘டேய், உன் ஆள் வருதுடா’ என்று தூபம் போட்டு காதல் நெருப்பை மூட்டிக்கொண்டே இருப்பார்கள்.
சம்பந்தப்பட்ட பெண் காதலிக்கிறாரா, இல்லையா; நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்ற நினைப்பெல்லாம் இனக்கவர்ச்சிக் காதலில் அடங்காது. சாதாரணமான பழக்கத்துக்கும் காதலுக்கும் வித்தியாசமும் தெரியாது. என்றாவது ஒரு நாள், ‘எல்லோரிடமும் பழகுவது மாதிரிதானே உன்னிடமும் பழகினேன். நீ தப்பா புரிஞ்சுக்கிட்டா என்ன பண்ண முடியும்’ என்று தோழி சொல்லும்போது சப்த நாடியும் அடங்கி, படிப்பு மறந்து, தூக்கம் துறந்து, அதிலிருந்து மீள கஷ்டப்படுபவர்கள் அனேகம். குறிப்பிட்ட யுவதி மீது இரு இளைஞர்களுக்கு இனக் கவர்ச்சியின் நீட்சி இருந்தால், ரணகளமாகிவிடும்.
அப்படியொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஆளுமைத் திறன் தொடர்பான வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் எடுப்பது எனது வழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு நாள் மையத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். வழியில் கும்பலாக ஆட்கள் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அங்கே நான் பார்த்த காட்சி சினிமாவை நினைவுபடுத்தியது. சாலையின் இரு பக்கங்களிலும் ஆட்கள் குவிந்திருக்க, என்னுடைய மாணவர்கள் சரவணனும் பாபுவும் அருகே நின்றுகொண்டு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்கள். அருகே நின்றவர்கள் ரவுடிகளைப் போலத் தெரிந்தார்கள். அடிதடி நடப்பதற்கான சூழல் தென்பட்டது.
அங்கே என்னைப் பார்த்தவுடன் இருவரும் பம்மினார்கள். சூழலைக் கருத்தில்கொண்டு, ‘எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று கூறி அவர்களை அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். உடன் இருந்த சிலரிடம் விசாரித்த போதுதான் காதல் விவகாரத்தால் மோதிக்கொண்டது தெரிய வந்தது. அவர்களை என் வீட்டுக்கு வரவழைத்தேன். “என்னை ஒரு சகோதரனா நினைச்சு பிரச்சினையைச் சொல்லு” என்று சொன்னவுடன் கிளிசரின் இல்லாமலேயே சரவணனின் கண்கள் கலங்கின. “சார், நான் லவ் பண்ற பொண்னோட மனசை பாபு மாத்திட்டான். நானும் அவளும் ஆறு மாசமா நல்லாத்தான் பழகிட்டு இருந்தோம். இப்போ பாபுவோடத்தான் அதிகமா பழகுறா” என்றவனைக் குறுக்கிட்டேன்.
“நீ அந்தப் பொண்ண லவ் பண்றதை அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டியா?".
“இல்ல சார்”
“அந்தப் பொண்ணாவது உன்கிட்ட சொல்லுச்சா?”
“இல்ல சார். ஆனால் லவ் பன்றோம் சார்”.
சரவணனும் குழம்பி என்னையும் குழப்பமாகப் பார்த்தான். அவனை அனுப்பிவிட்டு பாபுவிடம் பேசிய போது அவனுடைய புலம்பல் வேறு மாதிரி இருந்தது. “என்னோட சாப்பாட்டை எடுத்து சாப்புடுவா, எனக்கு பர்த்டே கிப்ட் தந்தா, தினமும் மொபைல் போனில் பேசுவா” எனச் சொல்லிக்கொண்டே போனான். அவனையும் அனுப்பிவிட்டு, இரண்டு நாட்கள் கழித்து மையத்தில் படிக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்துப் பேசினேன்.
“லவ்வா, இல்லவே இல்ல” என்று மறுத்தார் அந்த பெண். “கிப்ட் தர்றது, சாப்பாட்டை எடுத்து சாப்புடுறது, அவுங்களுடன் சகஜமாகப் பேசுவதையெல்லாம் லவ்வுன்னு எடுத்துக்கிட்டா, நான் என்ன பண்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் உடன் படிக்கிற எல்லோருமே என் நண்பர்கள். அவ்வளவுதான், இதுக்கு மேல ஒன்றும் இல்லை” எனத் தெளிவாகக் கூறினார்.
பிறகு சரவணன், பாபு இருவரையும் ஒன்றாக உட்கார வைத்துப் பேசினேன்.
“சரவணா, அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்ணல”.
உடனே சரவணன், “சார் பாபுவ..” என்று இழுத்தவனை குறுக்கிட்டு “அட, அந்தப் பொண்ணு யாரையும் லவ் பண்ணலப்பா” என்றேன். உடனே ஆயிரம் வாட்ஸ் பல்பு அவர்கள் முகத்தில் ஒளிர்ந்தது. தனக்குக் கிடைக்கலே என்ற வருத்தத்தைவிட எதிராளிக்குக் கிடைக்கலே என்ற சந்தோஷம். பாடத்தைச் சொல்லி புரியவைப்பதைவிட இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லி புரியவைப்பதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு அதைப் புரிந்துகொண்டார்கள். பிறகுதான் நிம்மதி அடைந்தேன்.
சமீபத்தில் ஒரு முன்னாள் மாணவரின் திருமணத்தில் அந்த மூவரையும் சந்திக்க நேர்ந்தது. தொழில், வேலை, குடும்பம் காரணமாக வெவ்வேறு இடத்தில இருந்தாலும் அவர்கள் மூவரும் இன்றும் நல்ல நட்பைத் தொடர்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே தெரிந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இன்றைய இளம் தலைமுறையினர் தான் ‘தனியாள்’ என்று சொல்லிக்கொள்வதைக் கவுரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். படிக்கும் காலமாக இருந்தாலும்கூட, தங்களுக்குத் துணை அவசியம் என்றும் நினைக்கிறார்கள். பதின் பருவத்தில் இனக்கவர்ச்சியால் உண்டாகும் இந்த உணர்வு, சிக்கலானதுதான். அது ஒரு ஆனந்த அனுபவமாக இருப்பதைப் போலத் தெரியலாம். ஆனால், மூழ்கடிக்கவும் செய்துவிடலாம். படிக்கும் பருவத்தில் எதிர் பாலினத்தினரிடம் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையே. அதைக் காதல் என்று கற்பனைக் கோட்டை கட்டுவது யாருடைய தவறு?
(அனுபவம் பேசும்)
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவரான கா. கார்த்திகேயன், ஆளுமைத் திறன் தொடர்பாக எழுதிவருகிறார். இந்தத் துறை சார்ந்து மாணவர்களுக்காகவும் தொழில்முனைவோருக்காகவும் மூன்று நூல்களை எழுதியுள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிகழ்ச்சி நடத்திவரும் இவர், கல்லூரிகளில் மென்திறன் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment