Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM
இந்தியர்களின் கார் மோகத்தால் கார் கம்பனிகளுக்கு நல்ல லாபம். புதிது புதிதாக கார்கள் வரும்போதெல்லாம் ஜாலியான ரைடிங் செல்ல குதூகலத்துடன் வாங்கி மகிழ்கிறார்கள் கஸ்டமர்கள்.
ஏகப்பட்ட கார்களை இந்தியச் சாலைகளில் புழங்கவிட்டுக் கல்லாவை நிரப்பிக்கொள்கின்றன ஆட்டோமொபைல் நிறுவனங்கள். ஐரோப்பாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனோ இந்தியாவில் ஏற்கனவே, ஃப்ளுயன்ஸ் சேடன், கொலியோஸ் எஸ்யூவி, பல்ஸ் காம்பாக்ட் கார், டஸ்டர் எஸ்யூவி, ஸ்காலா சேடன் ஆகிய ஐந்து மாடல்களை விற்றுவருகிறது.
அவற்றுக்குக் கிடைத்துவந்த உற்சாக வரவேற்பால் இன்னும் 3 புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மூன்று மாடல்களும் இன்னும் ஓர் ஆண்டுக்குள் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
டஸ்டர் எஸ்யூவி கார் 2013-ல் அறிமுகமானதிலிருந்து இதுவரை ஒரு லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. டஸ்டர் எஸ்யூவி மாடலின் ஆல் வீல் டிரைவ் கார் ஃபெஸ்டிவல் சீஸனுக்கு முன்னர் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை ஒரகடம் தொழிற்சாலையில் உருவாகும் இந்த கார் அநேகமாக செப்டம்பரில் விற்பனைக்கு வந்துவிடும். இதன் மைலேஜ் 19.72 என்கிறார்கள். அதே போல் மாருதி ஆல்டோ 800 போன்ற குட்டிக் கார்களுக்குச் சவால்விடும் வகையில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரையும் இந்நிறுவனம் உருவாக்கிவருகிறது.
எம்பிவி மாடலில் உருவாகும் கார் ஹோண்டா மொபிலியோ மாருதி எர்டிகா போன்ற கார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தயாராகும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், நல்ல மைலேஜ், இந்திய சாலைகளுக்கேற்ற டிஸைன், வாங்குவதற்கேற்ற விலை போன்ற காரணங்களால் குட்டிக் கார்களின் சந்தையில் மாருதி ஆல்டோ 800 ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
இம்மாடலில் மேக்ஸிமம் என்னும் லிமிடெட் எடிசனை மாருதி நிறுவனம் சந்தைக்குக் கொண்டுவரப்போகிறது. வழக்கம்போல் மாருதி ஆல்டோ 800 கார்களை அத்தனை சவுகரியங்களையும் இது கொண்டிருக்கும்.
ஸ்டிக்கர்க்ஸ், கிராபிக்ஸ் போன்றவற்றின் உதவியால் இதன் தோற்றம் கண்ணைக் கவரும் வகையில் அமையும். இதனால் சாலையில் ஓடும்போது இந்த கார் தனித்துத் தெரியும். சாதாரண இந்திய நுகர்வோரும் வாங்கும் வகையில் இதன் விலை இருக்கும் என்பதால் இதுதான் இந்த காரின் ஹைலைட் என மாருதி நிறுவனம் நம்புகிறது.
இதன் விலை 2.94 லட்சத்திலிருந்து 3.73 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. ரக ரகமான கார்கள் நமது சாலைகளில் வலம் வருவது மகிழ்ச்சிதானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT