Last Updated : 25 May, 2018 11:23 AM

 

Published : 25 May 2018 11:23 AM
Last Updated : 25 May 2018 11:23 AM

‘தாய்’ எனும் அற்புதம்!

 

பெயரைக் கேட்டவுடனேயே சட்டென்று ஒரு நெருக்கம் நம் மனத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது. தமிழில் போற்றப்படும் வார்த்தையை, பெயரின் முன்பகுதியாகக் கொண்டது இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளில் தாய்லாந்து முக்கியமானது. 3 மணி நேரத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவில் இருக்கும் தாய்லாந்து, நில அமைப்பிலோ தட்பவெப்ப நிலையிலோ பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் கலை, கலாச்சாரம், ஆண்-பெண் சமத்துவம், கேளிக்கைகள் போன்றவற்றில் வித்தியாசமானது.

புலிக்குப் பால் புகட்டலாம்

தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் கால் பதித்து, அங்கிருந்தே கடற்கரை நகரான பட்டாயாவை நோக்கிப் பயணப்படத் தொடங்கினோம். இரண்டு நகரங்களுக்கு இடையில் சீனப் பெருஞ்சுவர்போல் மைல் கணக்கில் நீண்டிருந்த பாலத்தில் பயணம் செய்தது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. 2 மணி நேரத்துக்குப் பிறகு ரச்சா வேங்கைப் புலிப் பூங்காவுக்குள் நுழைந்தோம். இங்கே கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கம் இருக்கும் புலிகளின் கொஞ்சல், சண்டை, சோம்பல் முறித்தல் போன்றவற்றை ரசித்தபடியே காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டோம்.

இங்கே புலிக் குட்டியை மடியில் வைத்துப் பால் புகட்டி, ஒளிப்படம் எடுத்துக்கொள்வதற்குக் கட்டணம் அதிகம். ‘புலிக்கே பால் கொடுத்த சாதனையாளர்’ என்று சரித்திரத்தில் இடம்பெறுவதற்கு இந்தக் கட்டணம் எல்லாம் தூசு என்று பலரும் நினைக்கிறார்கள்!

மிதக்கும் சந்தைகள்

தாய்லாந்து என்றவுடன் நினைவுக்கு வருவது ‘மிதக்கும் சந்தை’ (ஃபுளோட்டிங் மார்க்கெட்). இங்கே ஆறு, கழிமுகம் போன்றவற்றில் சிறிய படகுகளில் மக்களைத் தேடிவந்து வியாபாரம் செய்கிறார்கள். சில படகுகளில் சுடச்சுட உணவும் காபி, தேநீர், பழச்சாறு போன்றவையும் கிடைக்கின்றன.

மறுநாள் பவழத் தீவு (கோரல் ஐலாண்ட்) நோக்கிப் புறப்பட்டோம். பயணப்பட்டது ஸ்பீட் போட் என்பதால், படகின் வேகம் சற்றுத் திகிலை அளித்தது. கடலுக்குள் இருந்து பட்டாயா நகரைப் பார்க்கும் காட்சி முற்றிலும் புதிய அனுபவத்தைத் தந்தது.

பவழத் தீவில் பார்த்தது போன்ற மணலை இதுவரை வேறெங்கும் பார்த்ததில்லை! வெள்ளை நிறத்தில் மாவுபோல் மெல்லிய மணல் துகள். அமைதியான குளம்போல் நிற்கும் நீலக் கடலில் மணிக்கணக்கில் மக்கள் நீந்துகிறார்கள். கரைகளில் ஓய்வெடுக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள்.

அலைத் தாலாட்டில் விருந்து

பாங்காக்கில் உள்ள சாவோ பிரயா மிக நீளமான நதி. இரவும் பகலும் நதி பரபரப்பாக இருக்கிறது.

சிறிய கப்பல்களில் இரவு உணவு சாப்பிடும் நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் ஏறியவுடன் கப்பல் நகர ஆரம்பிக்கிறது. இதமான தென்றல் காற்றின் தழுவலுடன் இருளில் தண்ணீர் மீது பயணிப்பது பிரமாதமாக இருக்கிறது. தூரத்தில் தெரிந்த ஆலயங்கள் பொன் நிறத்தில் ‘தகதக’வென்று ஜொலித்துக்கொண்டிருந்தன!

பிரம்மாண்ட மால்

மால்கள் என்ற பெயரில் ஒரு கட்டிடத்துக்குள் ஏராளமான கடைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஓர் ஊரே பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குள் இருப்பதை தாய்லாந்தில் பார்க்க முடிந்தது. மலர்கள், காய்கள், கனிகள், இறைச்சி அங்காடிகளில்கூடச் சிறு அழுக்கையோ துர்நாற்றத்தையோ பார்க்கவோ முகரவோ முடியவில்லை. எவ்வளவு பேர் வந்து சென்றாலும் தரையிலும் சுவர்களிலும் அவ்வளவு பளபளப்பு. ஒவ்வொரு பொருளுக்கும் தனித் தனிப் பகுதி. ஒரு தளம் முழுவதும் துணி வகைகள். முழு ‘மாலை’யும் சுற்றிப் பார்க்க குறைந்தபட்சம் ஒன்றிரண்டு நாட்கள் தேவைப்படும்!

புத்தர் ஆலயம்

தாய்லாந்தில் பெரும்பான்மையானவர்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். எங்கே பார்த்தாலும் புத்தர் ஆலயங்கள். பஆலயத்தைச் சுற்றியிருக்கும் பிராகாரத்தில் 64 பளிங்கு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. புத்தரைச் சற்று உற்றுப் பார்த்தாலே இது எந்த நாட்டுப் புத்தர் என்பதைச் சொல்லிவிடும் அளவுக்கு, அந்தந்த நாட்டு மக்களைப் போலவே புத்தர் சிலைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன.

கூண்டுக்கு வெளியே

மனிதர்களால் பயிற்சியளிக்கப்பட்டு சாகசங்கள் நிகழ்த்திக் காட்டும் விலங்குகளைவிட தாய்லாந்தில் திறந்தவெளிகளில் இயற்கையாக விடப்பட்ட விலங்குகளும் பறவைகளும் கூடுதல் மகிழ்ச்சியளித்தன. பாதுகாப்பான வாகனத்துக்குள் அமர்ந்தபடி சுதந்திரமாகச் சுற்றித் திரியும் விலங்குகளையும் பறவைகளையும் பார்த்தபோது, சிலிர்ப்பாக இருந்தது.

‘தாய்’ பணியாரம்

மிதக்கும் சந்தையில் கரை முழுவதும் இருந்த உணவகங்களில் சுவைத்த தாய் குழிப் பணியாரத்தின் சுவையை இன்றுவரை மறக்க முடியவில்லை. நூறு பணியாரங்கள் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமான கல்லில் வேகும் காட்சியே ரசிப்பதற்குரியதாக இருந்தது. பணியாரத்தைப் பிய்த்தால் உள்ளுக்குள் இருந்து அடர்த்தியான தேங்காய்ப் பால் வெளிவருகிறது. வேகவைத்த பணியாரத்துக்குள் திரவப் பொருள் எப்படிச் சாத்தியம் எனத் தெரியவில்லை. ஆனால், சுவை அசத்தல்.

தாய்லாந்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மா. மாம்பழத் துண்டுகளும் பெரிய அரிசிச் சாதமும் சேர்த்துச் சாப்பிடுவதை இங்கே விரும்பாதவர்களே இருக்க முடியாது. வாழைப் பழமும் அரிசிச் சாதமும் சேர்த்து, இலையில் சுற்றி வேகவைத்த புது உணவு அட்டகாசமாக இருந்தது. உலர் பழங்கள், பருப்புகள், ஜெல்லி, பால் சேர்த்த ஜில்லென்ற தேநீர் தாய்லாந்தின் ஸ்பெஷல்! ஒரு பெரிய டம்ளரில் வாங்கினால் ஒரு குடும்பமே குடிக்கலாம்!

1jpgதூங்கா நகரம்

பாங்காக்கில் பகலைவிட இரவே கூடுதல் பரபரப்பாகக் காணப்படுகிறது. மளிகைக் கடைகளிலிருந்து மால்கள்வரை திறந்திருக்கின்றன. பேருந்துகளும் டாக்சிகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆண்களும் பெண்களும் பகலைப் போலவே இரவிலும் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். தாய்லாந்தின் புகழ்பெற்ற மசாஜ் பார்லர்கள் இரவு ஒரு மணிவரை திறந்திருக்கின்றன. இரவு நேரத்திலும் பெண்கள் வேலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்புகிறார்கள்.

அந்நிய நாட்டில், நள்ளிரவில், மொழி தெரியாத ஊரில், கேளிக்கை விடுதிகள் மிகுந்திருந்த நகரில் பெண்கள் மட்டும் தனியாகச் சுற்றியதை எங்களால் நம்பவே முடியவில்லை! நிச்சயம் இந்தியாவின் எந்த நகரிலும் இப்படி ஓர் உலா செல்வதை கற்பனைகூடச் செய்துபார்த்திருக்க மாட்டோம். இரவு பெண்களுக்கும் உரியது என்பதை அங்கே முதல்முறையாகப் புரிந்துகொண்டோம். அந்த வகையில் தாய்லாந்து சுற்றுலா மறக்க முடியாத வாழ்நாள் அனுபவமாக மாறிவிட்டது!

“எதிர்க்கட்சியாக இருப்பதால் வாய்ப்பு கொடுக்கத் தயங்கினர்” - கிருத்திகா உதயநிதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x