Published : 18 May 2018 11:07 AM
Last Updated : 18 May 2018 11:07 AM
மை
சூருவையும் தசராவையும் பிரித்துப் பார்க்கவோ பேசவோ முடியாது. தசரா கொண்டாட்டத்துக்குப் பெயர்போன நகரங்களில் ஒன்று, மைசூரு. விஜயதசமி தினத்தன்று ‘ஜம்போ சவாரி’ எனும் யானைகள் அணிவகுப்பும் இங்கே புகழ்பெற்றது. எங்கே திரும்பினாலும் விளக்கொளி வைபோகம், வாணவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் என மைசூரு நகரமே தசரா கொண்டாட்டத்தின்போது விழாக்கோலம் பூண்டிருக்கும். தசரா திருவிழாவுக்கு அடுத்த நாள் மைசூருவுக்குச் சுற்றுலா செல்வதைப் போல் சிறந்த வாய்ப்பு வேறொன்றில்லை.
மைசூருவை அடையும்போதே, அது இயற்கை ஆட்சி செய்யும் பகுதி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பழமை மாறாமல், இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் அந்த நகரை அமைத்திருக்கிறார்கள்.
மைசூரு என்றவுடனே ‘அம்பா விலாஸ்’ அரண்மனை என்றழைக்கப்படும் ‘மைசூரு அரண்மனை’தான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும். இந்தியாவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக, சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பது இந்த அரண்மனைதான். வெளியிலிருந்து பார்ப்பதற்குக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் அரண்மனைக்குள் செய்யப்பட்டிருக்கும் உள் அலங்கார வேலைப்பாடும் ‘ஆஹா அற்புதம்!’ ரகம். தஞ்சாவூர், மைசூர் பாணி ஓவியங்கள் அரண்மனையின் உள் அலங்காரத்துக்குத் தனி அழகு சேர்க்கின்றன.
அரண்மனை நகரம்
அடுத்து நாங்கள் சென்றதும் இன்னொரு அரண்மனைதான். அது ஜெகன்மோகன் அரண்மனை. இங்கு விஷ்ணுவின் தசாவதாரக் காட்சியும் சிற்ப வடிவமாகச் செதுக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய மரக் கதவுகளும் மைசூர் மகாராஜாக்களின் ஓவியங்களும் அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்கள்.
இரண்டு அரண்மனைகளைச் சுற்றிப் பார்த்த பிறகு, வேறு ஏதாவது புதிய இடத்துக்குச் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால், மூன்றாவதாகச் சென்றதும் ஓர் அரண்மனைக்குத்தான். அதன் பெயர் லலித மகால். இது சாமுண்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை 1921-ம் ஆண்டு அப்போதைய இந்திய வைஸ்ராய்க்காக நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் கட்டப்பட்டது.
சாமுண்டி மலை
அரண்மனை தரிசனங்களுக்குப் பிறகு மாலையில் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்கப் புறப்பட்டோம். மைசூரு நகரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சாமுண்டீஸ்வரி மலை. 3,489 அடி உயரத்திலிருக்கும் மலையிலிருந்து எந்தத் திசையில் பார்த்தாலும் மைசூரு நகரம் அழகாகத் தெரிகிறது. இந்த மலையில் உள்ள பிரம்மாண்ட நந்தியும் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது.
நந்தகுமாரன் இல்லாத பிருந்தாவனம்
மயக்கும் மாலையை மேலும் அழகாக்க பிருந்தாவன் பூங்காவில் மையம் கொண்டோம். கிருஷ்ணராஜ சாகர் சாலை வழியாகச் செல்லும்போதே தொலைவிலேயே அணை பிரம்மாண்டமாகத் தெரிந்தது.
உண்மையில் பிருந்தாவன் பூங்கா கொள்ளை அழகு! கிருஷ்ணராஜ சாகர் அணையின் இடதுபுறம் அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவில் திரும்பிய பக்கமெல்லாம் அழகழகான நீருற்றுகள், பசுமையான புல்வெளி, மரங்கள் என எங்கே திரும்பினாலும் ரம்மியமான சூழல். இரவில் அணை வெவ்வேறு வண்ணங்களில் ஜொலிக்கும்படி விளக்கொளி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இசைக்கு ஏற்றபடி வண்ண விளக்குகள் ஒளியைப் பொழிந்து நடனமாடும், நீரூற்றுகளின் நடனக் காட்சிகளை மெய்ம்மறந்து ரசித்தோம்.
ரங்கப்பட்டணம் கோட்டை
அடுத்து ரங்கப்பட்டணத்தைச் சென்றடைந்தோம். திப்பு சுல்தானின் கோட்டை உள்ள இடம். ரங்கப்பட்டணத்துக்குள் நுழையும்போதே பெரிய மதில் சுவர் வரவேற்கிறது. அகழியைத் தாண்டினால் திப்புவின் கோட்டை மதில் சுவர் இருக்கிறது. ஆனால், சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்த வாயிலைத் தாண்டிச் சென்றால் ரங்கநாதர் கோயில் கோபுரம் வரவேற்கிறது.
ரங்கப்பட்டணத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் கங்க மன்னரால் கட்டப்பட்டது. பின்னர், ஹொய்சாள மன்னர்கள், விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
திப்பு அரண்மனை
ரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்திலேயே உள்ளது திப்பு சுல்தானின் கோட்டை. வெறும் தரையும் ஆங்காங்கே தலைகாட்டும் குட்டிச் சுவர்களும்தாம் திப்புவின் கோட்டையாக எஞ்சியிருக்கின்றன. வீரமும் வரலாறும் சேர்ந்த அந்தப் பகுதியைப் பார்த்துவிட்டுக் கடந்தோம். சற்றுத் தள்ளி ஒரு மேட்டுப் பகுதி. இங்கே கர்னல் பெய்லிஸ் டன்ஜன் என்றழைக்கப்படும் திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை தென்பட்டது. இந்தச் சிறைச்சாலை மிகவும் நுட்பமாகக் கட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் வாயில்
அங்கிருந்து ஐந்து நிமிடப் பயணத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தண்ணீர் வாயில் (Water Gate) தென்பட்டது. இதைத் ‘துரோகத்தின் நினைவுச் சின்னம்’ என்று அழைப்பதுண்டு என்று வழிகாட்டி சொன்னார். சூழ்ச்சி செய்து திப்பு சுல்தானை இந்த வாயில் வழியாக வந்துதான் ஆங்கிலேயர்கள் கொன்றதாக வழிகாட்டி சொன்னார்.
தண்ணீர் வாயிலைச் சிறிது நேரம் பார்த்துவிட்டுப் புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருக்கும். 1799 மே 4 அன்று திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்று அவருடைய நினைவிடத்தைக் காட்டினார்கள். ஒரு மாவீரரைத் துரோகம் வீழ்த்திய கதையை மனதில் சுமந்தபடி அங்கிருந்து மவுனமாகப் புறப்பட்டோம்.
15 நிமிட பயணத்துக்குப் பின் திப்பு சுல்தானின் கோடை மாளிகைக்குச் சென்றோம். தாஜ்மகால் பாணியில் நீண்ட பாதை. பாதையின் இருபுறங்களிலும் கண்ணைக் கவரும் தோட்டம். ‘தாரியா தவுலத்’ என்றழைக்கப்படும் இந்த மாளிகை, சந்தனப் பலகைகளால் கட்டப்பட்டது. இதைப் பார்த்த பிறகு, அங்கிருந்து சில நிமிடப் பயணத்தில் கும்பஸ் என்ற இடத்தில் திப்பு சுல்தானின் சமாதிக்குச் சென்றோம். மறைந்த தன் பெற்றோருக்காக திப்பு சுல்தான் கட்டியது இது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட அடுத்த நாளே, அவருடைய சடலத்தை ஆங்கிலேயர்கள் இங்கே அடக்கம் செய்தார்கள்.
உயிரோட்டமான நகரமைப்பும் சிறப்பான வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மைசூரு நகரத்தை கர்நாடகத்தின் ‘பண்பாட்டுத் தலைநகரம்’ என்று அழைப்பது மிகவும் பொருத்தமானது. அதே நேரம் இந்திய விடுதலைப் போரில் வகித்த பங்கு ரங்கப்பட்டணத்தைத் தனித்துக் காட்டுகிறது. அருகருகே இருந்தாலும் இரண்டு ஊர்களும் வேறுபட்ட பரிமாணங் களைக் கொண்டிருக்கின்றன. இரண்டு நகரங்களையும் அந்த மாநில அரசு சிறப்பாகப் பராமரித்துவருகிறது. மைசூருவையும் ரங்கப்பட்டணத்தையும் முழுமையாகப் பார்த்து ரசித்தது, மனதை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT