Published : 25 May 2018 11:44 AM
Last Updated : 25 May 2018 11:44 AM
சதுரங்கப் போட்டி மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. அந்த இளைஞர் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறிக் கொண்டிருந்தார்.
ஏற்கெனவே உள்நாட்டில் பல சதுரங்கப் போட்டிகளில் கோப்பைகளை வென்றிருந்தார். இப்போது வெளிநாடுகளிலும் கணிசமாக வெற்றிபெறத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெற்றால், இன்னும் சில படிகள் முன்னேறலாம். உலக அளவில் கவனம் பெறலாம்.
ஆனால், அதற்கு நிறைய செலவாகும். உழைப்புச் செலவு, நேரச் செலவு, பணச் செலவு.
உழைப்பையும் நேரத்தையும் தருவதற்கு அவர் தயார். ஆனால், பணம்?
அவர்களுடைய குடும்பத்தை ஏழைக் குடும்பம் என்று சொல்ல இயலாது. அதேநேரம், பணக்காரக் குடும்பமும் இல்லை.
உள்நாட்டில் விளையாடிக்கொண்டிருந்தவரை, சதுரங்கம் அவருக்குப் பெரிய சுமையாகவோ சுகமாகவோ தெரியவில்லை. பள்ளி, கல்லூரிப் படிப்பைக் கவனித்தபடி ஓய்வுநேரத்தில் விளையாடுவது, வெற்றிபெறும்போது மகிழ்வது, தோற்றுப்போனால் அடுத்த போட்டிக்குத் தயாராவது, அவ்வளவுதான்.
ஆனால், வெளிநாட்டுப் போட்டிகள் அப்படியல்ல. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு நாட்டுக்குச் செல்வதற்கும் தங்குவதற்கும் என ஒவ்வொன்றுக்கும் பணம் செலவழிக்க வேண்டும். அடிக்கடி போட்டிகளில் கலந்துகொள்வதால், அவரது குடும்பத்துக்கு அது சுமையாகத் தோன்றியது.
போட்டியில் வென்றால் நிறையப் பணம் கிடைக்கும். அதை வைத்துச் செலவுகளைச் சமாளிக்கலாம். ஆனால், அவர் இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை. அப்போது அவர் கலந்துகொண்டவையெல்லாம் சிறிய போட்டிகள்தாம். வெற்றிபெற்றால் பரிசுத்தொகை பெரிதாக இருக்காது. அதற்காக, அந்தப் போட்டிகளை விட்டுவிடவும் முடியாது; இங்கே வெற்றிபெற்றால்தான் பெரிய போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைக்கும்.
எனவேதான், பரிசுத்தொகை குறைவாக இருந்தாலும், அந்தப் போட்டிகளில் அவர் தொடர்ந்து கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் கையில் இருக்கும் காசை எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டியிருந்தது.
செலவை மிச்சப்படுத்த, அந்தந்த நாடுகளில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களின் வீட்டில் தங்கி, போட்டிகளுக்குச் சென்றுவருவார்கள்.
ஒரு முறை ஒரு பிரச்சினை. அவர்கள் தங்கிய வீட்டின் உரிமையாளர் நாள்தோறும், ‘உங்க போட்டி இன்னும் முடியலையா?’ என்று விசாரிக்கத் தொடங்கினார்.
அதை ஒருமுறை கேட்டால் பரவாயில்லை, தினமும் கேட்டால்?
அதிர்ச்சியான, அவமானத்தைத் தருகிற கேள்விதான். ஆனால், பாதியில் கிளம்பிப்போக முடியுமா? ‘ஒரு வாரத்துல முடிஞ்சுடும்’ என்று சிரித்தபடி சொன்னார் அவர்.
அந்த நண்பர் இயல்பாக இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்; ஆனால், வளரும் நிலையில் உள்ள ஒருவருக்கு இது மிகப் பெரிய மனச்சோர்வை உண்டாக்கும்.
கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நிபுணர்கள், படைப்பாளிகள், பல்துறை வல்லுநர்கள் எல்லாரும் தங்களுடைய பணியை விரும்பித்தான் செய்கிறார்கள். அதேநேரம், அதை முழு நேரப் பணியாகச் செய்ய முடியுமா என்ற கேள்வி அவர்களுக்குள் இருக்கிறது.
நம்முடைய திறமையைக்கொண்டு பணம் சம்பாதிக்க முடியும், அதை வைத்து வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும், குடும்பம் நடத்த முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், இதைப் பகுதி நேரமாக வைத்துக்கொண்டு, வேறு எதையாவது முழுநேர வேலையாகச் செய்ய வேண்டியதுதான்.
இந்த இளைஞரையே எடுத்துக்கொள்வோம். சதுரங்கத்தில் சிறந்து விளங்கித் தேசிய அளவில் புகழ்பெற்றவர். ஆனால், அதற்காக அவர் படிப்பை விடவில்லை. கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்.
ஏனெனில், ‘நான் முழு நேரமாகச் சதுரங்கம் விளையாடப்போகிறேன்’ என்று அவர் சொல்லியிருந்தால், மற்றவர்களெல்லாம் சிரித்திருப்பார்கள். கல்லூரிப் பட்டம்தான் அவருக்கு வேலையை தரப்போகிறது, அதைக்கொண்டுதான் அவர் சம்பாதிக்கப் போகிறார் என்றுதான் பெரும்பாலானோர் சிந்திப்பார்கள். ஓய்வுநேரத்தில் கொஞ்சம் சதுரங்கம் விளையாடிக்கொள்ளலாம்!
ஆனால், அவர் அப்படி நினைக்கவில்லை; சதுரங்கம்தான் முதலில், ஒருவேளை இது சரிப்படாவிட்டால் கல்லூரிப் பட்டத்தை வைத்து வேலை தேடலாம் என்று நினைத்திருந்தார்.
அவருடைய திறமைக்கு, சதுரங்கம் அவரைக் கைவிடவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி உலக அளவில் முதல் நிலைக்கு வந்தார். அதுவே அவருடைய முழு நேரப் பணியாகவும் மாறியது. ‘இன்னும் எத்தனை நாள் தங்குவ?’ என்று முன்பு கேட்டவர்கள் இப்போது, ‘எங்க வீட்ல விஸ்வநாதன் ஆனந்த் தங்கியிருக்கார், தெரியுமா?’ என்று பெருமையடித்துக்கொள்கிறார்கள்.
இப்படி ஆனந்த் வென்றுவிட்டார், மற்றவர்கள்? விரும்பிய பணியை முழு நேரமாகச் செய்வதா பணம் கிடைக்கிற வேறு வேலைக்குச் செல்வதா என்று தவித்துக்கொண்டிருக்கிற அவர்களெல்லாம் என்ன செய்வது?
ஒருவர் தனக்குப் பிடித்த துறையில் ஆர்வத்தோடு ஈடுபடுவது முதல் நிலை, அவரை ஒரு வெற்றியாளராக எல்லாரும் ஏற்றுக்கொள்வது இரண்டாம் நிலை, இவை இரண்டுக்கும் நடுவில் உள்ள பாதை மிகக் கடினமானது.
அந்த நேரத்தில், எல்லாரும் அவர்களை ஆதரிப்பார்கள், வேண்டிய உதவிகளைச் செய்வார்கள் என்பது நிச்சயமில்லை. கைகொடுத்துக் காப்பவர்களை நன்றியோடு நினைக்கலாம், மற்றவர்களைப் புன்னகையோடு பார்த்துவிட்டுக் கடந்துசென்றுவிடுகிற மனம் வேண்டும். அநேகமாக எல்லா வெற்றியாளர்களும் இதுபோன்ற அவமானங்களைக் கடந்துதான் வந்திருப்பார்கள்.
உலகில் எத்தனையோ பணிகள் இருக்கின்றன. அவற்றில் நமக்கு ஏற்றது எது என்று யோசிக்கும்போது, இந்த மூன்று கேள்விகளைக் கேட்கலாம். மற்ற எல்லாரையும்விட நான் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்வேனா? இந்தப் பணியைச் செய்வது என் மனத்துக்குப் பிடித்திருக்கிறதா? இந்தப் பணியைச் செய்வதால் என்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார ஆதரவு (அதாவது, பணம்) கிடைக்குமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்ற பதில் வந்தால், அதுதான் நமக்கு ஏற்ற சிறந்த பணி. ஏதேனும் ஒன்றுக்கு ‘இல்லை’ என்ற பதில் வந்தாலும், அது ஒரு முழுமையற்ற வாழ்க்கையாக அமைந்துவிடும்.
முதல் இரண்டும் (திறமை, மன மகிழ்ச்சி) கிடைத்து, மூன்றாவதாகப் பணம் கிடைக்காவிட்டால், பெரும் மனக்குழப்பம் வரும். நம்பிக்கையோடு தொடர்ந்தால் மூன்றாவது விஷயமும் கிடைக்குமா? பணம் கிடைக்கிற வேறு வேலையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு இதைப் பொழுதுபோக்காக அமைத்துக்கொள்வதா? சூழ் நிலையைப் பொறுத்து அவரவர் தீர்மானிக்க வேண்டியதுதான்!
ஆனந்துக்குச் சதுரங்கத் திறமை இளவயதிலேயே கிடைத்துவிட்டது, அதுதான் தனக்கு மனமகிழ்ச்சி தருகிறது என்பதையும் அவர் உணர்ந்துவிட்டார், அந்நிலையில் பொருளாதாரச் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்ததால், மூன்றாவது விஷயமான பணத்தையும் அவரால் சம்பாதிக்க முடிந்தது; அந்த முனைப்பு, அவரிடம் நாம் கற்க வேண்டிய பாடம்!
(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com
“எனக்கு நானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தேன்” - விஜய் ஆண்டனி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT