Published : 04 May 2018 10:06 AM
Last Updated : 04 May 2018 10:06 AM
இணையத்தில் எத்தனையோ பிரவுசர்கள் அறிமுகமாகியுள்ளபோதும், ‘மொசைக்’ (Mosaic) பிரவுசரை எளிதில் மறந்துவிட முடியாது. கூகுள் குரோமுக்கும் ஓபராவுக்கும் பழகிய நவீன தலைமுறைக்கு இந்தப் பெயர் விநோதமாக இருக்கலாம். இணைய வரலாற்றில் ‘மொசைக்’ பிரவுசரின் இடத்தையோ முக்கியத்துவத்தையோ குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இன்றைய நவீன இணையப் பயன்பாட்டை விசாலமாக்கியது இந்த பிரவுசர்தான்.
மொசைக்குக்கு முன்னதாகவே பல பிரவுசர்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், 1993-ம் ஆண்டு அறிமுகமான ‘மொசைக்’ பிரவுசர் தனி இடம் பெற்றது. மூல வடிவில் ‘மொசைக்’ பிரவுசர் வழக்கொழிந்துவிட்டது. ஆனால், அது உண்டாக்கிய தாக்கம் இணைய வரலாற்றின் மைல்கற்களில் ஒன்று. ‘மொசைக்’ இந்த ஆண்டு வெள்ளி விழா காணும் நிலையில், அதன் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது இணைய அனுபவத்தைப் புரிந்து கொள்ள உதவும்.
தீர்ந்த சிக்கல்
இன்றைய நவீன பிரவுசர்களுடன் ஒப்பிட்டால் ‘மொசைக்’ ஒன்றுமே இல்லைதான். அதுவும் இந்த பிரவுசரின் பழைய ஸ்கிரீன்ஷாட்டைப் பார்த்தால் அதன் புராதன வடிவமைப்பு ஏமாற்றத்தையே அளிக்கும். வெறும் வரி வடிவ எழுத்துகளை கொண்டதாக அதன் முகப்புப் பக்கம் அமைந்திருக்கிறது. அதன் மெனு பட்டியலிலும் பெரிய வசதிகள் இல்லை.
ஆனால், ‘மொசைக்’ அறிமுகமான காலத்தில் அது புரட்சிகரமானதாக இருந்தது. இணையத்தில் அது பல விஷயங்களை முதன் முறையாக நிகழ்த்திக்காட்டியது. இணையத்தின் நவீன வடிவமான வலையின் அடிநாதமாக கருதப்படும் இணைப்புகளை எளிதாக ‘கிளிக்’ செய்து அவை பின்னே உள்ள இணையப் பக்கங்களை சிக்கல் இல்லாமல் அணுக மொசைக் வழி செய்தது.
இதென்ன பெரிய விஷயமா? என்று கேட்கலாம். அந்தக் காலகட்டத்தில் இது பெரிய அதிசயம்தான். இணையம் அப்போது புதுமையாக மட்டுமல்ல; புரியாத புதிராகவும் கருதப்பட்டது. வலைப்பின்னல்களால் இணைக்கப்பட்ட இணையத்தை அணுகுவதும் பயன்படுத்துவதும் சிக்கலாக இருந்தன. ஆய்வாளர்களும் தொழில்நுட்ப அறிவாளிகளுமே இணையத்தைப் பயன்படுத்திவந்தனர். குறிப்பிட்ட நிரல்களை அறிந்திருந்தால் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தலாம் எனும் நிலை இருந்தது.
ஆடம்பரம்
இந்தப் பின்னணியில்தான் 1991-ல் ‘வைய விரிவு வலை’ அறிமுகமானது. அதன் பிறகு அறிமுகமான கோபர், லின்க்ஸ், வியோலா போன்ற பிரவுசர்கள் வரி வடிவ செய்திகளுடன், ஒளிப்படங்களை காணவும் வழிசெய்தன. ஆனால், படங்களைக் காண வேண்டுமென்றால், அவற்றுக்கான இணைப்பை ‘கிளிக்’ செய்தால் தொடர்புடைய படம் தனியே தோன்றும்.
அது மட்டுமா? பெரும்பாலும் ‘யுனிக்ஸ்’ இயங்குதளத்தில் மட்டுமே இவை வேலை செய்தன. எனவே, பணியிடம் அல்லது ஆய்வகங்களில்தான் இந்த பிரவுசர்களை அணுக முடிந்தது. வீட்டிலிருந்தபடியே கணினியில் இணையத்தை அணுகுவது மிகப் பெரிய ஆடம்பரமாக இருந்தது. இந்தச் சூழலில் கணினி, மென்பொருள், இணையம் ஆகிய நுட்பங்களில் சிறந்தவரான மார்க் ஆண்ட்ரீசன் என்ற இளைஞர் இந்தத் துறைக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த அவர், சக மாணவர் உதவியுடன் ‘மொசைக்’ வலைக்குள் நுழைவதற்கான நுழைவு வாயில் மென்பொருளை உருவாக்க முயன்றார்.
பலவிதங்களில் ‘மொசைக்’ மேம்பட்டதாக இருந்தது. ‘மொசைக்’ இலவச மென் பொருளாக இருந்தாலும், முதலில் யுனிக்ஸ் இயங்கு தளத்தில் மட்டுமே அறிமுகமானது. அடுத்த சில மாதங்களில் ஏப்ரல் 22 அன்று ‘மொசைக்’ அடுத்த வெர்ஷன் அறிமுகமானது. வீட்டில் உள்ள மேக், கணினிகளிலும் இயங்கக்கூடிய வடிவில் அறிமுகமானது.
‘மொசைக்’கை நிறுவுவது பயன்படுத்துவது இரண்டுமே எளிது. இதனால் கம்ப்யூட்டர் ஆர்வம் கொண்ட பொதுமக்களும் அதைப் பயன்படுத்த முடிந்தது. அதோடு ஒரே பக்கத்தில் வரி வடிவத் தகவல்கள், ஒளிப்படங்கள் இரண்டையும் பார்க்க முடிந்தது. இணையதளங்களைக் காட்சிரீதியாக ஈர்க்கும் வகையில் வடிவமைப்பதை இது சாத்தியமாக்கியது. பத்திரிகைபோல் இணைய பக்கங்களையும் அழகாக வடிவமைப்பது சாத்தியமானது.
பிரபலமான மொசைக்
இந்த அம்சங்கள்தாம் ‘மொசைக்’ பிரவுசரை மிகவும் பிரபலமாக்கின. இணையத்தில் உலவும் அனுபவத்தை ‘மொசைக்’ சுவாரசியமாக்கியது. இதன் பிறகே மக்கள் மத்தியிலும் இணையம் தொடர்பான ஈர்ப்பும் ஆர்வமும் அதிகமானது. அந்த வகையில் இணையத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்ட முதல் பிரவுசர் ‘மொசைக்’.
‘மொசைக்’ பிரவுசரை உருவாக்கிய ஆண்ட்ரீசன், அதன் பின்னர் ஜிம் கிளார்க் எனும் நண்பருடன் இணைந்து, தனது அடுத்த பிரவுசரை அறிமுகம் செய்தார். ‘நெட்ஸ்கேப் நெவிகேட்டர்’ எனும் பெயரிலான அந்த பிரவுசர்தான் இணையத்தை மேலும் வெகுஜனமயமாக்கியது. பின்னர் அலையென உருவாகத் தொடங்கிய டாட்காம்களுக்கெல்லாம் ‘நெட்ஸ்கேப்’ பிள்ளையார் சுழி போட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT