Published : 05 Apr 2014 12:00 PM
Last Updated : 05 Apr 2014 12:00 PM
முல்லாவுக்கென்று ஒரே ஒரு கழுதைதான் இருந்தது. தன் கழுதையை தொலைத்து விட்டார். அது ஒன்றுதான் அவருக்கென்று இருந்த சொத்து. முல்லாவுக்கு ஒரே கவலை. ஊரெல்லாம் அலைந்து அதைத் தேடிப்பார்த்து விட்டார். கழுதை கிடைக்கவில்லை. முல்லாவுக்காப் பரிதாபப் பட்ட கிராம மக்கள் சிலரும் தேடிப் பார்த்தார்கள். ஆனாலும் கழுதை கிடைக்க வில்லை. அது ஒரு புனித மாதம் என்பதால் யாத்ரீகர்கள் சிலர் அந்த ஊர் வழியாகத் தலயாத்திரைக்குச் சென்று கொண்டிருந்த காலம்.
கழுதை அந்தக் கூட்டத்துடன் போயிருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். முல்லாவும் அதை அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டார். என்றாலும், கடைசியாக ஒரு முறை முயன்று பார்க்கலாம் என்றார் அவர். அங்கேயே அப்படியே நின்று, கண்களை மூடிக்கொண்டார். பிறகு, சட்டெனக் குனிந்து கை கால்களால் ஒரு விலங்குபோல நடக்கத் தொடங்கினார். வீட்டைச் சுற்றிப் போனார். தோட்டத்தையும் சுற்றி வந்தார். அப்புறம் அப்படியே நடந்து போய் ஒரு பெரிய பள்ளத்தைப் பார்த்தார். அந்தப் பள்ளத்தில்தான் அவரது கழுதை விழுந்து கிடந்தது.
ஊரர் ஆச்சரியப்பட்டனர். ‘இது எப்படி? எப்படி இதைச் செய்யத் தோன்றியது? ஏன்?’ என்று கேட்டார்கள். முல்லா சொன்னார்: ‘ஒரு மனிதனால் தன் கழுதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், திறவுகோல் அவனிடம் இல்லையென்று அர்த்தம். அதனால் கழுதையைக் கண்டுபிடிக்க நான் கழுதையாக வேண்டி வந்தது. கழுதையானவுடனே, ஒரு கழுதையை எங்கே தேட வேண்டும் என்பது தெரிந்துவிட்டது. கழுதை எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாதுதான். ஆனால், கழுதையாகக் கண்களை மூடி நடந்தேன். கண்களைத் திறந்தபோது எதிரே பள்ளம். அதில் என் கழுதை.’ என்றார் முல்லா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment