Published : 04 May 2018 10:06 AM
Last Updated : 04 May 2018 10:06 AM

அனுபவம் புதுமை 03: தீயாய் இருக்கணும் குமாரு!

 

ன்னதான் வகுப்பில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் தாண்டி எப்போதும் அலப்பறைகளை அள்ளிவிடக்கூடியவர்கள் கல்லூரி மாணவர்கள். அதுவும் கல்விச் சுற்றுலா என்றால், லூட்டிகளுக்குப் பஞ்சமே இருக்காது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என எல்லையில்லா மகிழ்ச்சியைத் தரக்கூடியது கல்விச் சுற்றுலா. மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரக்கூடியது. ஆனால், இவர்களை அழைத்துச் செல்லும் பேராசிரியர்களுக்குதான் இரட்டை வேலை ஆகிவிடும். எல்லோரையும் ஒருங்கிணைப்பது, பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்பி வருவது என சுற்றுலா முடிவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

கல்விச் சுற்றுலாவுக்காகப் பல நிறுவனங்களுக்கு மாணவர்களை அழைத்து சென்றுவந்திருக்கிறேன். ஆனால், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக மாணவர்களைக் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுவந்த அனுபவம் நினைவைவிட்டு அகலாமல் நிற்கிறது.

பெங்களூரு நிறுவனம், குளிர்சாதனப் பேருந்துப் பயணம் என்று சொன்னவுடனேயே மாணவ மாணவிகளுக்கு ஏக சந்தோஷம். பயணம் முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். கல்லூரியில் அடக்க ஒடுக்கமாக இருந்த மாணவ மாணவிகள்கூட கேலி, கிண்டல் என சேட்டையில் இறங்கினார்கள். ஒவ்வொருவரும் பை நிறைய வாங்கி வந்த தின்பண்டங்களைக் கொறித்துகொண்டே வந்தார்கள்.

‘இண்டஸ்ட்ரியல் விசிட்’டுக்காகப் போகிறோம் என்பதைத் தாண்டி, இன்பச் சுற்றுலாவுக்குச் செல்வதுபோல விடிய விடிய மாணவர்களின் சேட்டைகள் தொடர்ந்தன. ஒரு வழியாக பெங்களூரு வந்துசேர்ந்தோம். இரவு முழுவதும் ஆடி, பாடி வந்த மாணவர்கள், காலையில் தூங்கி வழிந்தார்கள். இருந்தாலும், எல்லோரும் குறிப்பிட்ட நேரத்துக்குத் தயாராகிவிட்டார்கள்.

அந்த நிறுவனத்துக்குச் சென்றோம். அதுவரை ஒன்றாக இருந்த மாணவ, மாணவிகள் ஃபேக்டரிக்குள் நுழைந்ததும் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்துவிட்டார்கள். சிலர் மட்டுமே செயல்முறைகளைக் கேட்டுகொண்டிருந்தனர். பலர் சுற்றுலா வந்ததுபோல ஜாலியாக எதையும் கவனிக்காமல் தீவிரமாக அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். எதைச் சொன்னாலும் அதற்கு நக்கல், நையாண்டித்தான் பதிலாக வந்தது.

ஒரே நாளில் நிறுவனத்தின் அனைத்துத் துறைகளையும் நேரில் பார்த்தது ஆச்சரியமான விஷயம்தான். அங்கிருந்து கிளம்பும்போது மாலை ஆகிவிட்டது. தூக்கமின்மை, அலைச்சல், ஆட்டம், பாட்டத்தால் மாணவர்கள் எல்லோரும் சோர்வாக இருந்தார்கள். இரவு உணவை முடித்தால், எல்லோரும் பேருந்தில் தூங்கியபடி ஊருக்குப் போக வேண்டியதுதான்.

நான் டிரைவரிடம், “நல்ல ஓட்டலா பார்த்து நிறுத்துங்க” என்றேன்.

ஓரிடத்தில் வண்டியை நிறுத்தினார். எல்லோரும் ஹோட்டலில் நுழைந்ததுமே நாற்காலியில் இடம் பிடிக்கச் செல்லச் சண்டை நடந்தது. எல்லோரும் அமர்ந்த பிறகுதான், அந்த ஓட்டலில் ஒரே நேரத்தில் 50 பேருக்குச் சாப்பாடு இல்லை என்ற விஷயம் தெரிந்தது. அதனால், அங்கிருந்து கிளம்ப வேண்டியிருந்தது. அப்போதே இரவு மணி 8. சுமார் 1 மணி நேரப் பயணத்துக்கு பிறகு அடுத்த ஹோட்டலுக்கு சென்று இறங்கினோம். அப்போது ஒரு மாணவனிடமிருந்து குரல்.

“சார், குமாரைக் காணோம்”.

இதைக் கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. “ நல்லா தேடிப் பாருங்க”.

அந்த நேரம் பார்த்து மொபைல் ஒலித்தது. “சார், நான் குமார் அப்பா பேசறேன்”.

குமாரைக் காணவில்லை என்ற நிலையில் அவரது அப்பா பேசுகிறாரே என்று பதற்றத்தில் போனை எடுத்தேன். “என்ன சார், என் பையனை ஹோட்டலிலேயே விட்டுட்டு வந்துட்டீங்க” என்று அழாத குறையாகப் பேசினார்.

“கவலைப்படாதீங்க, அங்கதான் நாங்க போய்கிட்டு இருக்கோம். குமாரை பஸ்சில் ஏத்திட்டு உங்களுக்கு போன் பண்றேன்” என்று எல்லாம் தெரிந்ததுபோல பேசி அவரைச் சமாதானப்படுத்தினேன்.

பேருந்தைப் பழைய ஹோட்டலுக்கே விரட்டினோம். அங்கே பயம் கலந்த கலக்கத்துடன் குமார் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய நண்பர்கள், ‘எங்கடா போய்த் தொலஞ்ச’ என்று திட்ட ஆரம்பித்தார்கள். அவன் பதற்றமாக இருந்ததால், அவனை ஆசுவாசப்படுத்திவிட்டுப் பேசினேன்.

“என்ன ஆச்சு?”

“சார் எல்லோருக்கும் சாப்பாட்டு அவசரம்னா, எனக்கு வேறு அவரசம். பாத்ரூம் போய்ட்டேன்” என்று சொல்ல எல்லோரும் கேலியாகச் சிரித்தனர்.

“சரிப்பா, என் நம்பருக்கு போன் செய்திருந்தா, உங்கப்பா பயப்பட்டு இருக்க மாட்டார்ல” என்றேன்

“சார், பயத்துல என்ன செய்யுறதுன்னு தெரியல. அதான் அப்பாவைக் கூப்பிட்டேன்” என்றான்.

இங்க குமாரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும், படிப்பில் கெட்டி. தான் உண்டு; தன் படிப்புண்டு, கல்லூரி உண்டு; வீடு உண்டு என்ற அளவில்தான் இருப்பான். யாரிடமும் சரியாகப் பேச மாட்டான். பிற கல்லூரிகளில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டான். படிப்பைத் தாண்டி மற்ற எதிலும் ஈடுபாடு காட்ட மாட்டான். அதனால்தான், ஒரு பதற்றமான நிகழ்வு வந்தவுடன், அதை எதிர்கொள்ள அனுபவமும் தைரியமும் இல்லாமல் போய்விட்டது. பேருந்து சென்றுவிட்டது என்றதும், பயத்தில் தந்தைக்கு போன் செய்திருக்கிறான்.

“சரி, வண்டியில ஏறு” என்று சொல்லிவிட்டு, மறக்காமல் குமார் தந்தைக்கு போன் செய்து அவரது பதற்றத்தைக் குறைத்தேன்.

குமார் போன்ற மாணவர்கள் நம்மை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். கல்வி மட்டுமே போதும் என்று நினைத்துகொண்டு வெளி உலக அனுபவங்களை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள். ஆனால், கல்வியும் வெளியுலக அனுபவங்களும் சரிநிகராய் இணையும்போதுதான் பலனை முழுமையாகப் பெறமுடியும்.

தொழில் மற்றும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு தன்னைத் தயார்செய்துகொள்ள தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே போதுமானது அல்ல. அதையும் தாண்டி தன்னம்பிக்கை, மன தைரியம், சிந்திக்கும் திறன், சமயோசித புத்தியும் மிகவும் முக்கியம். அன்று குமார் மூலம் இந்த அனுபவப் பாடத்தை எல்லோருமே தெரிந்துகொண்டார்கள்.

(அனுபவம் பேசும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x