Published : 13 Apr 2018 10:09 AM
Last Updated : 13 Apr 2018 10:09 AM
ஒ
வ்வொருவருக்கும் ஒரு நிறம் பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால், தற்போது டிரெண்டிங்கில் என்ன நிறம் பிரபலமாக இருக்கிறதோ அது இளைஞர்கள் மத்தியிலும் பிடித்த நிறமாக வலம் வரும். அந்த வகையில் தற்போது உலகெங்கும் இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்காக உள்ள நிறம் வயலட். இந்த நிறத்தில் உடையை அணிவது முதல் பொருட்களை வாங்கிக்குவிப்பதுவரை வயலட் மோகம் அதிகரித்திருக்கிறது.
அப்போ பச்சை, இப்போ வயலட்
அதெல்லாம் சரி, உலகெங்கும் ஒரு நிறம் எப்படி டிரெண்டாகிறது? அதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது பான்டோன் (pantone) என்ற நிறுவனம். இந்த நிறுவனம் புதுமையான வண்ணங்களை அறிமுகப்படுத்துவதற்குப் புகழ்பெற்றது. இந்நிறுவனம் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்துக்கொண்டு பிரத்யேகமாக நிறங்களைத் தேர்வுசெய்து வருகிறது. இவ்வாறு தேர்வுசெய்யப்படும் நிறங்கள் அந்த ஆண்டு ஃபேஷன் உலகிலும் அலங்காரப் பொருட்கள் உற்பத்தியிலும் பிரதிபலிக்கும்.
வயலட் மோகம்
கடந்த ஆண்டு பசுமைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தேர்வுசெய்யப்பட்ட பச்சை நிறம் ஃபேஷன் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த ஆண்டுக்கான நிறமாக வயலட்டை பான்டோன் நிறுவனம் தேர்வுசெய்துள்ளது. அண்டவெளியைப் பிரதிபலிப்பதிலும் புதுமையான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதிலும் வயலட் நிறம் முக்கியமானதாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான நிறமாக வயலட் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
அடர் நிறங்களை முந்தைய தலைமுறையினர் தவிர்த்துவந்த நிலையில், இன்றைய தலைமுறை இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அடர் நிறங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டுக்கான நிறமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளதால் லிப் ஸ்டிக், நெயில் பாலிஷ், சன் கிளாஸ், தொப்பி, ஹேர் கலரிங், காலணிகள், ஆடைகள் என ஃபேஷன் உலகில் வயலட் தற்போது கோலோச்சிக்கொண்டிருக்கிறது.
இவ்வளவு ஏன், இருசக்கர வாகனங்களைக்கூட வயலட் வண்ணத்தில் பார்த்து வாங்கும் அளவுக்கு வயலட் வண்ணத்தின் மீதான மோகம் இளைஞர்கள் மத்தியில் கூடியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT