Published : 13 Apr 2018 10:12 AM
Last Updated : 13 Apr 2018 10:12 AM
இ
யற்கை வளம் செழித்துக் குலுங்கும் கண்ணூரை ‘கேரளத்தின் மகுடம்’ என்பார்கள். மலபார் பிராந்தியத்தின் மிகப் பெரிய நகரமான கண்ணூர் கலாச்சாரச் சிறப்பும் நீண்ட பாரம்பரியப் பெருமையும் கொண்டது. ஒரு மழைக் காலத்தில், மழை கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாளில் கண்ணூருக்குச் செல்ல நேர்ந்தது.
கண்ணூரிலிருந்து 5 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஒரு புறநகரில் தங்குவதற்காக ஒரு லாட்ஜை அடைந்தேன். அதை லாட்ஜ் என்பதைவிட, வீடு என்பதுதான் சரியாக இருக்கும். வீட்டுக்காரர் முதல் மாடியில் வசித்துக்கொண்டு இரண்டு படுக்கை அறை கொண்ட கீழ்த்தளத்தைப் பிறருக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். ‘குளித்துவிட்டுச் சாப்பிட என்ன கிடைக்கும்?’ என்று கேட்டால், ‘உணவக வசதி இல்லை’ என்றார்கள். ‘மெயின் ரோட்டில் பல உணவகங்கள் உண்டு’ என்றும் சொன்னார்கள். இணையவழித் திட்டமிடல் சில நேரம் சொதப்பிவிடும் என்று நினைத்தபடி, சற்றே மேடான மெயின் ரோட்டுக்கு ஏறிச் சென்றேன். கேரளத்தின் ஏற்றமும் இறக்கமுமான சாலைகளில் நடப்பதே தனி சுகம்தான்.
கண்களை நிரப்பிய பசுமையும் சுவாசத்துக்குக் கிடைத்த சுத்தமான காற்றும் சுமார் ஒரு கி.மீ. தூரத்தை எளிதில் மறக்கடித்தன. உணவகத்தை அடைந்தேன். அது பீடி நிறுவனம் ஒன்று நடத்தும் மெஸ். காலை உணவு முடிந்துவிட்டதால் மதிய உணவுதான் கிடைத்தது. வெறும் முப்பது ரூபாயில் கிடைத்த சுவையான மீன் சாப்பாடு வயிற்றை மட்டுமல்ல; மனதையும் நிறைத்தது. அந்த மெஸ் முதலாளியிடம் ‘இங்கு என்னென்ன பார்க்கலாம்?’ என்று கேட்டேன். அவர் ஏற்கெனவே நான் முடிவு செய்துவைத்திருந்த அதே இடங்களையே பரிந்துரைத்தார். தனது நிறுவன ஆட்டோவையே வாடகைக்குத் தருவதாகச் சொல்லி, அதன் ஓட்டுநரை சீக்கிரம் வரும்படி போனில் அழைத்தார். ஆட்டோ ஓட்டுநர் வருவதற்காகக் காத்திருந்த வேளையில் "நகரத்துக்குள் தங்காமல், இப்படி அமைதியான புறநகரில் தங்குவதன்மூலம் பயணத்தை நன்கு ரசிக்கலாம்” என்றார். நானும் அதை ஆமோதித்தேன்.
ஒரே முஸ்லிம் அரச குடும்பம்
முதலில் பார்த்த இடம் ‘அரக்கல் அருங்காட்சியகம்’. அருங்காட்சியகம் அரக்கல்கேட்டு எனும் அரண்மனையின் ஒரு பகுதி. மலபார் பிராந்தியத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய அரக்கல் அரச குடும்பத்தினர் வசித்த அரண்மனை இது. சொல்லப்போனால், கேரளத்தின் ஒரே முஸ்லிம் அரச குடும்பம் இவர்களுடையதுதான்.
கடலுக்கு எதிரே அமைந்திருந்த அந்த அரண்மனை தற்போது அருங்காட்சியமாக மாறியுள்ளது. அந்த அரண்மனையைப் பார்த்தவுடன் ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் வரும் அரண்மனை ஞாபகத்துக்கு வந்தது. அரண்மனையின் தோற்ற அமைப்பு அத்தகைய எண்ணத்தை உருவாக்கியிருக்கலாம். வாசலிலேயே கம்பீரமான தேக்கு மரக் கதவு வரவேற்றது. அறைக் கதவுகளும் ஜன்னல் கதவுகளும் படிகளும் இன்றைக்கும் உறுதியாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கின்றன. சின்ன அரண்மனைதான். சுற்றி வருவதற்கு ஐந்து நிமிடங்கள் போதும். ஆனால், ரசித்துப் பார்க்க வேண்டும் என்றால், பார்ப்பவரின் ரசனைக்கு ஏற்ப நேரம் அதிகரிக்கும்.
அதிகாரத்தின் எச்சமான கோட்டை
பின்பு அங்கிருந்து ‘செயின்ட் ஏஞ்சலியோ கோட்டை’க்குச் சென்றேன். இந்தக் கோட்டை ‘கண்ணூர் கோட்டை’ என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோட்டை. அரபிக் கடலின் கரையில் 1505-ம் வருடம் டாம் பிரான்சிஸ்கோ டி அல்மிய்டா எனும் போர்த்துக்கீசியரால் கட்டப்பட்டது இது. இந்தியாவில் போர்ச்சுக்கல் நாடு பெற்ற முதல் வெற்றியைக் குறிக்கும் வண்ணம் கட்டப்பட்ட கோட்டை.
இந்தக் கோட்டை இன்று முற்றிலும் சிதிலமடைந்த நிலையில், கோட்டை என்ற பெயரைப் பெயர்ப் பலகையில் மட்டும் பரிதாபகரமாகச் சுமந்து நிற்கிறது. ‘பம்பாய்’ திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா ‘உயிரே... உயிரே... வந்து என்னோடு கலந்துவிடு…’ எனும் பாடலில் அடர்மழையில் ஒரு சிதிலமடைந்த கோட்டையில் ஓடி வருவார் இல்லையா? அந்தப் பாடல் இங்கேதான் எடுக்கப்பட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்வண்ணம் கடற்கரையை ஒட்டியிருக்கும் இந்தக் கோட்டையின் அமைப்பு உள்ளது. கோட்டையை முழுவதும் பார்த்துவிட்டு வெளியே வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் பிடிக்கும்.
மணல் வீடும் குழந்தைகளும்
பின் அங்கிருந்து பயம்பளம் கடற்கரைக்குச் சென்றேன். பயம்பளம் கடற்கரை கண்ணூரின் முக்கியமான சுற்றுலாத் தலம். குடும்பத்துடன் சென்று இந்தக் கடற்கரையின் அழகையும் சீராக எழுந்து கரையில் சிதறி உடையும் அலைகளையும் குளிர்ந்த காற்றையும் ரசித்து அனுபவிக்கலாம். மலையாளத் திரைப்படங்களில் வரும் பெரும்பாலான கடற்கரைக் காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டவையே. விடுமுறை நாள் என்பதால், மொத்த கண்ணூர் மக்களும் அங்குதான் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் கொள்ளும் அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அலைகள் சீற்றம் குறைந்து பழகிய நாய்க்குட்டியைப் போல் பாதங்களைத் தொட்டுச் சென்றன. குழந்தைகள் பயமின்றி அந்த அலைகளின் அருகில் மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். மணல் வீட்டைக் கலைத்துச் செல்லும் அலைகள், அவர்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்தின. கலையாத மணல் வீடுகளால் என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது?
‘தி இந்து’ சித்திரை மலர் 2018-ல் வெளியான கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது. இது போன்ற சுவையான பல கட்டுரைகள் சித்திரை மலரில் இடம்பெற்றுள்ளன.
படங்கள்: முகமது ஹுசைன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT