Published : 01 Aug 2014 03:22 PM
Last Updated : 01 Aug 2014 03:22 PM
புதிய வரவுகளாலும், மேலும் புதிய வரவுகள் பற்றிய வதந்திகளாலும் ஸ்மார்ட் போன் சந்தை சுறுசுறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது.
எந்த வகையில், எந்த விலையில் வேண்டுமானாலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய போன்களை அறிமுகம் செய்துவருகின்றன.
போனில் 3டி தேவையா?
முதலில் அமேசான் ஃபயர் போன் பற்றிப் பார்க்கலாம். மின்வணிக ஜாம்பவானான அமேசானின் ஸ்மார்ட் போன் நுழைவாக அமைந்த இந்த ஸ்மார்ட் போன் சமீபத்தில் அமெரிக்காவில் அறிமுகமானது.
ஆப்பிளின் ஐபோன் மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி ரக போன்களுடன் ஒப்பிட்டு இதன் சாதக பாதகங்கள் அலசப்பட்டாலும், வல்லுநர்களின் கருத்து இரண்டும் கலந்ததாக இருக்கிறது. இந்த போனில் உள்ள 3-டி வசதி மற்றும் ஃபயர்பிளை வசதிகளை அமேசான் பெரிதாக நினைத்திருக்க வேண்டும்.
நான்கு கேமராக்கள் கொண்ட இந்த போன் பயனாளிகளின் முகம் செல்லும் திசையை அறிந்து அதன் மூலம் 3டி விளைவை அளிக்கக்கூடியது. அதே போல ஃபயர்பிளை வசதி ஒரு பொருளை ஸ்கேன் செய்து அமேசான் இணையக் கடை மூலம் வாங்கும் வசதியைத் தருகிறது.
இந்த வசதி வெறும் ஆரவாரம்தான், நடைமுறையில் அதிக பயனில்லாதது என அமெரிக்க நாளிதழ்கள் கூறியுள்ளன. இல்லாத ஒரு பிரச்சினையை அமேசான் தீர்க்க முயல்கிறது என ஒரு விமர்சனம் கூறுகிறது. சைக்கிளில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்துவிட்டு ஓட்டிக்காட்டும் 9 வயதுப் பையனின் பரவசம்போல இருக்கிறது என்கிறது இன்னொரு விமர்சனம்.
இவற்றை எல்லாம்விட ஐபிக்ஸிட் (iFixit) தளத்தின் கருத்துதான் சுவாரசியம். தொழில்நுட்பச் சாதனங்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசிப் பார்த்து அதைப் பழுது பார்க்கும் வழியைச் சொல்லும் இணையதளம் இது. அமேசான் ஃபயர் போனையும் இப்படிப் பிரித்து பார்த்து அதன் பாகங்களை ஆய்வு செய்துள்ள இந்தத் தளத்தின் கருத்து, அமேசான் போன் பழுதுபார்க்க மிகவும் கடினமானது என்பதாகும்.
ஐபோன் 6 எப்போது?
அடுத்த ஐபோன் பற்றி ஆப்பிள் தரப்பில் அதிகாரபூர்வமாக அதிகத் தகவல் இல்லை என்றாலும், ஐபோன் 6 பற்றிய ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் குறைவில்லை. சமீபத்திய தகவல் ஐபோன் 6 இரண்டு வகைகளில் வெளியாகலாம் என்பது.
இரண்டு ரகங்களும் ஒரே நேரத்தில் அல்லாமல் தனித்தனியே அறிமுகமாகும் என்றும் சொல்லப்படுகிறது. சுய போட்டியைத் தவிர்க்க இந்த ஏற்பாடாம். முதல் போன் செப்டம்பரிலும் அடுத்த ரகம் சில மாதங்கள் கழித்தும் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு ரகம் அளவில் பெரியதாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தொழில்நுட்ப ஆரூடங்களுக்கு டிஜிடைம்ஸ் மற்றும் 9டு5மேக் ( http://9to5mac.com/) தளங்கள் இருக்கவே இருக்கின்றன. இதனிடையே கூகிளின் நெக்சஸ் 6 போன் மோட்டோரோலா மூலம் நவம்பரில் பெரிய திரையுடன் அறிமுகமாகலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தொடரும் சீன வரவு
இந்தியச் சந்தையை நாடி வரும் சீன செல்போன் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. புதிதாக வர இருப்பதாகச் சொல்லப்படுவது சீனாவின் ஒன்பிளஸ். இந்தியச் சந்தையில் தனது மழலை அடிகளை எடுத்து வைக்க இருப்பதாக ஒன்பிளஸ் (http://oneplus.net/) அதன் இணைய விவாதப் பகுதியில் தெரிவித்துள்ளது.
இந்தியச் சந்தையில் இதுவரை அறிமுகமாகாவிட்டாலும்கூட இந்தியாவில் உள்ள பலர் அமெரிக்கா வழியாகத் தனது ஸ்மார்ட் போனை வாங்கிப் பயன்படுத்துவதாகவும் அதன் காரணமாக இந்தியா வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஒன்பிளஸ் போன், ஸ்னாப்டிராகன் 801 சி.பி.யூ. கொண்டது. முன் பக்க, பின் பக்க கேமராக்களைக் கொண்டது. இப்படி ஸ்மார்ட் போனில் தேர்வு செய்ய வாய்ப்புகள் கூடிக்கொண்டே போகின்றன.
கூகிள் கிளாசுக்குப் போட்டி
கூகிள் கிளாசுக்குப் போட்டியாக அல்லது கூட்டாக இன்னொரு கிளாஸ் வர இருக்கிறது. கம்ப்யூட்டர் தயாரிப்பில் புகழ்பெற்ற லெனாவோதான் இந்த கிளாசை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
5 மெகாபிக்சல் கேமரா, குரல் உணர்வு ஆற்றல் மற்றும் செய்கைகளைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட இந்தக் கண்ணாடி பேட்டரியைத் தனியே கழுத்தில் மாட்டிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கிறது.
நிறுவனம் இரண்டு வகையான கண்ணாடிகளை உருவாக்கிவருவதாகவும் அக்டோபரில் தகவல்கள் முழுமையாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT