Last Updated : 10 May, 2024 06:00 AM

 

Published : 10 May 2024 06:00 AM
Last Updated : 10 May 2024 06:00 AM

பாப்கார்ன்: ஜீன்ஸ் அலப்பறை!

நாம் அணியும் உடைகளில் எவ்வளவுதான் புதுசு புதுசான விஷயங்கள் வந்தாலும், என்றைக்கும் தன் இடத்தை விட்டுக்கொடுக்காமல் மக்கள் ‘இடை'யில் நிற்பது ஜீன்ஸ்தான்! காலத்துக்கு ஏற்ப ஜீன்ஸ் டிரெண்ட் மாறிக்கொண்டே போகும்.

பிளைன் ஜீன்ஸ், பாக்கெட் ஜீன்ஸ், கார்கோ ஜீன்ஸ், ஷேடு ஜீன்ஸ் எனப் பல வகைகள் இதில் உண்டு. இதில் கடந்த சில ஆண்டுகளாக ‘டார்ன்' ஜீன்ஸ் இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்காக இருந்தது. அதாவது. ‘ஏடாகூடமாகச் சில இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஜீன்ஸ் பேன்ட்டைக் கிழித்துக் கொடுப்பதுதான் ஸ்பெஷல்!

பார்ப்பவர்களின் கேலிக்கு ஆளாக நேர்ந்தாலும், இளைஞர்கள் இந்த ஜீன்ஸை விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டதால், கிழிந்த ஜீன்ஸும் உலகப் பிரபலம் ஆகிவிட்டது. கிழிந்த ஜீன்ஸ் பேன்ட்டை அணிந்து இளைஞர்களுக்குப் போரடித்துவிட்டது எனத் தயாரிப்பு நிறுவனங்கள் நினைத்து விட்டதோ என்னவோ? ‘உச்சா’ கறை ( pee stain ) ஜீன்ஸ் பேன்ட்டில் படிந்தது போன்ற ஜீன்ஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது.

பிரிட்டிஷ்- இத்தாலியைச் சேர்ந்த நிறுவனம்தான் இந்த ஜீன்ஸை அறிமுகப்படுத்துவதாக அறிவித்து, இளைஞர் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்தப் புதிய ஸ்டெயின் ஜீன்ஸின் முன்பக்கத்தில் ஸ்டோன்வாஷ் கறையும், பின் பாக்கெட்டில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட டெமோனாலஜி ஹார்ன் விவரம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ.50,000 முதல் 67,000 ரூபாய் வரை என்றும் நிர்ணயித்து இருக்கிறார்கள். இந்த ஜீன்ஸ் பற்றிய அறிவிப்பு வந்தவுடனே சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விதவிதமாகக் கற்பனையைத் தட்டிவிடத் தொடங்கிவிட்டார்கள். கைக்கு ஜீன்ஸ் கிடைக்கும்போது என்ன செய்வார்களோ? அதே நேரம் இந்த ஜீன்ஸ் குறித்து நிறைய எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன.

3டி மனிதன்! - இத்தாலியைச் சேர்ந்த மேக்கப் கலைஞர் லூக்கா லூச்சே. கைகளில் மாயத் தன்மையான 3டி ஓவியங்களை வரைவதில் கில்லாடி. தன்னுடைய கைகளில் இதுபோன்ற ஓவியங்களை வரைந்து அனைவரையும் அசத்திவருகிறார். சாதாரண காஸ்மெடிக் பொருள்களைக் கொண்டே இந்த ஓவியங்களை வரைகிறார் இவர்.

ஐப்ரோ பென்சில், ஐ ஷேடோ போன்றவற்றைப் பயன்படுத்தி கண்களை ஏமாற்றும் மாய ஓவியங்களை வரைகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய ஓவியங்களை இவர் வரைந்துவருகிறார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே 3டி ஓவியங்களை வரைய ஆரம்பித்துவிட்டாராம் லூக்கா. ஐப்ரோ பென்சிலால் அடிப்படையான கோடுகளைக் கொண்டு ஓவியத்தை வரைகிறார். பின்னர் ஐ ஷேடோவைப் பயன்படுத்தி அதில் 3 டி ‘எபெக்ட்’டைக் கொடுக்கிறார். ஓர் ஓவியத்தைக் கைகளில் வரைய இவருக்கு 30 நிமிடங்கள்தான் ஆகின்றன.



பின்னர் தேவையான நகாசு வேலைகளை முடித்து ஒரு மணி நேரத்துக்குள்ளாக ஓவியத்தை முழுவதுமாக வரைந்து முடித்துவிடுகிறார். கையின் நடுவே ஓட்டை போட்டது போன்ற ஓவியம், கை பிளவானது போன்ற ஓவியம் என விதவிதமாக மிரட்டுகிறார்.

இப்போது கைகளில் மட்டுமல்ல, தன்னுடைய தலையிலும் இதுபோன்ற 3டி ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். இவருடைய அனைத்து ஓவியங்களையும் இன்ஸ்டகிராமிலும் உடனே பதிவேற்றி விடுகிறார். அதனால், இவருடைய ஓவியங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் வரவேற்பு இருக்கிறது. இதுபோன்ற ஓவியங்களைப் பார்த்து மயங்காதவர்கள் யாராவது இருப்பார்களா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x