Last Updated : 27 Apr, 2018 10:31 AM

 

Published : 27 Apr 2018 10:31 AM
Last Updated : 27 Apr 2018 10:31 AM

கூரையின் மீது ஓர் அறை!

 

னித வாழ்வில் முக்கியமான காலகட்டம் பதின்பருவம்தான். அப்போதுதான் மனிதர்களின் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது; கட்டமைக்கப்படுகிறது. சிலருடைய வாழ்வு அந்தப் பருவத்தில் செழித்து மலர்கிறது. சிலருடைய வாழ்வு அந்தப் பருவத்தில் கருகி உதிர்கிறது.

அதனால்தானோ என்னவோ, குழந்தைப் பருவத்தை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என எளிதில் பொதுமைப்படுத்திச் சொல்ல முடிந்த நம்மால், பதின் பருவத்தை அப்படி ஒரு வரையறைக்குள் அடக்க முடிவதில்லை.

பதின்பருவம் பயமற்ற பருவம். பிறர் கண் கொண்டு அல்லாமல், தன் கண் கொண்டு இவ்வுலகையும் சக மனிதர்களையும் பார்த்து சுயஅறிவு பெற்று திமிறிக்கொண்டு திரியும் பருவம். சுவாரசியமற்ற ஒரு நாள் என்பது பதின் பருவத்தில் கிடையாது. அந்தப் பருவத்தின் ஒரு நாளில் நிகழும் சம்பவங்களை கொண்டே ஒரு நீண்ட புதினத்தை எழுதிவிட முடியும்.

அப்படி ஒரு நாவல்தான் ரஸ்கின் பாண்ட் எழுத்தில் வெளிவந்த ‘தி ரூம் ஆன் தி ரூஃப்’. இது ஓர் இளைஞனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்புதான். இந்த நாவல் 1957-ம் ஆண்டே வெளிவந்து விட்டது. இருந்தும், இந்த நாவலின் பெரும்பாலான சம்பவங்கள் இன்றும் நமக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. இதை நாவலின் சிறப்பு என்றும் சொல்லலாம்; பதின் பருவ வாழ்வின் இயல்பு என்றும் சொல்லலாம்.

டேராடூனில் இருக்கும் ஒரு ஆங்கிலோ-இந்திய காலனிதான் இந்தக் கதையின் களம். ரஸ்டி எனும் பதினேழு வயது ஆங்கிலோ-இந்தியச் சிறுவன்தான் கதையின் நாயகன். அனாதையான ரஸ்டி தன் உறவுக்காரர் ஹாரிஸனின் பாதுகாப்பில் வளர்கிறான். அவர் விதிக்கும் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளால் ரஸ்டிக்கு மூச்சு முட்டுகிறது. தன் இந்திய நண்பர்களுடன் ஹோலி கொண்டாடியதற்காக அவர் ரஸ்டியைக் கடுமையாகத் தண்டிக்கிறார். பொறுத்ததுபோதும் என்று பொங்கி எழும் ரஸ்டி, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வீட்டை விட்டு வெளியேறி, தன் இந்திய நண்பர்களின் உதவியுடன் வளர்ந்து மனிதனாகிறான்.

ஆங்கிலோ-இந்தியர்களின் வாழ்வை ‘கான மயிலாட கண்டிருந்த வான் கோழி’யின் நிலையோடு ஒப்பிடலாம். ஆங்கிலேயராகவும் வாழ முடியாமல், இந்தியராகவும் வாழ முடியாமல், எப்போதும் ஒரு திரிசங்கு நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை இருக்கும். நுனி நாக்கு ஆங்கிலத்தையும் பகட்டு பாரம்பரியத்தையும் அவர்கள் விடாமல் சுமக்கின்றனர். இருந்தும், அவர்களுடைய வாழ்வு வறுமையின் முடைநாற்றம் சூழ்ந்த ஒரு கனவாக முடியும் துர்ப்பாக்கிய நிலையாகவே இன்றும் தொடர்கிறது.

அவர்களின் வாழ்வை இந்த அளவு தத்ரூபமாக ஒரு தேர்ந்த எழுத்தாளரால்கூட எழுத்தில் கொண்டு வர முடியாது. ஆனால், ரஸ்கின் பாண்ட் அதைத் தன் முதல் நாவலிலேயே நிகழ்த்திக் காட்டினார். இந்தச் சிறப்பின் பெரும் பங்கு அவருடைய ஆங்கிலோ-இந்திய பின்புலத்தையும் தனிப்பட்ட வாழ்வையுமே சாரும்.

அன்றிலிருந்து இன்றுவரை இந்த நூல் இளைஞர்களின் மனம் கவர்ந்த நூலாக இருந்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x