Published : 13 Apr 2018 11:08 AM
Last Updated : 13 Apr 2018 11:08 AM
தே
டல்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் என்றாலே இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். சுவாரசியமாக தேடல்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட ‘நோ ஒன் கேன் புரொனொன்ஸ் மை நேம்’ எனும் நூல் இளைஞர்களின் விருப்பப் பட்டியலில் எப்போதுமே இருந்துவருகிறது. இந்தப் புத்தகம் சொல்லும் சங்கதி என்ன?
அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்வில் ஒரு பக்கம் வசதிகளும் இன்னொரு பக்கம் நவீனமும் நிரம்பி வழிகிறது. ஆனால் மறுபக்கம் சுய அடையாளம் என்பது அவர்களிடமிருந்து முற்றிலும் துடைத்து எறியபட்டுவருகிறது. அதன் காரணமாக அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள் அவர்களுக்குள் சுய அடையாளத்துக்கான ஏக்கத்தை நிரந்தரமாக உருவாக்கிவருகின்றன. அந்த அடையாளத்துக்கான ஏக்கத்தையும் அவமானங்களையும் நகைச்சுவை ததும்ப ‘நோ ஒன் கேன் புரோனன்ஸ் மை நேம்’ என்று புத்தகமாக எழுதியதன் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளார் ராகேஷ் சத்யால் எனும் எழுத்தாளர். ரஞ்சனா எனும் குடும்ப தலைவியும் அவரது மகன் பிரசாந்த், ஹரித் எனும் இந்தியர்களும்தான் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த மூன்று பேருடைய வாழ்வும் அடையாளத்துக்கான தேடலும்தான் இந்தக் கதை.
தன் கணவர் அமெரிக்காவில் பணிபுரிவதால் ரஞ்சனாவும் அமெரிக்காவில் வசிக்கிறாள். சாதாரண குடும்பத் தலைவி போலத் தோற்றமளிக்கும் அவருக்கு ‘பாட்ஷா’ போல மறுபக்கம் உண்டு. ஆம், அவர் ஒரு புகழ்பெற்ற ரகசிய எழுத்தாளர். அவருடைய மகன், பிரசாந்தைப் பொறுத்தவரை, அமெரிக்க மக்களுக்கு இணையாகத் தன்னைக் காட்டிகொள்வதற்காக ரஞ்சனா மிகவும் மெனக்கெடுபவர். ஆனால், உண்மை அதுவல்ல. ரஞ்சனா எந்த மெனக்கெடலுமின்றி அவர்களுக்கு இணையாக வாழ்கிறாள். சொல்லப்போனால் அமெரிக்கா வருவதற்கு முன்பே, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களையும் பேட்டிகளையும் பார்த்து ரஞ்சனா தன்னை நன்கு தயார்படுத்திக்கொண்டுதான் வருகிறாள்.
பிரசாந்த் மேல்படிப்புக்காகக் கல்லூரி செல்கிறார். திடீரென்று வீட்டுக்குள் தன்னை ஆட்கொண்ட பிரச்சினையிலிருந்து வெளிவருவதற்காக அவர் வேலைக்குச் செல்கிறார். வேலைக்குச் சென்றாலும் அங்கும் அவரை பிரச்சினை துரத்துகிறது. தன் பெயரை மாற்றிவிடலாமா என்று நினைக்கும் அளவுக்கு பிரசாந்தின் பெயர் கல்லூரியில் அதகளப்படுகிறது.
கதையின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமான ஹரித்துக்கும் மறுபக்கம் உள்ளது. ஆனால், அது ‘பாட்ஷா’வைப் போல இல்லாமல் ‘அவ்வை சண்முகி’யைப் போல உள்ளது. ஆம், ஹரித் பகலில் ஆணாகவும் இரவில் பெண்ணாகவும் வாழ்ந்துவருகிறான். ஹரித்துக்கு வீட்டில் சுய அடையாளமில்லை. வேலைக்குச் செல்லும் இடத்தில் அவனுடைய சுய அடையாளம் காரணமாகத் தனிமைப்படுத்தப்படுகிறான். கவிதா என்ற பெயரில் உள்ள ‘தா’வுக்கு பதிலாக ‘ட’ என உச்சரித்து அந்தப் பெயரில் உள்ள மென்மையைக் கொல்கிறார்கள் என்று பிரசாந்த் தன் நண்பனிடம் புலம்பும் இடம் சிரிப்பை வரவழைக்கிறது. அதேபோன்று ஹரித்திடம் “உங்கள் நாட்டவர்கள் தண்ணீருக்கு பதில் எட்டு டம்ளர் டீயைத்தான் குடிப்பார்களா?” என்று உடன் பணிபுரியும் அமெரிக்கர் கேட்கும் இடமும் அப்படித்தான். எல்லா இடங்களிலும் நகைச்சுவை உணர்ச்சியைத் தாண்டி, அதன் பின் மறைந்திருக்கும் வேதனையும் வலியும் வெளிப்படுவதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
பிழைப்புக்காக அமெரிக்காவில் மிகுந்த பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் நம் இளைஞர்கள் குடியேறுவது கடந்த 20 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சி பெரும்பாலும் அந்நாட்டில் காலடி எடுத்து வைப்பதோடு தொலைந்துபோகிறது. அங்கு குடியேறிய முதல் தலைமுறையினரின் நிலைமையே இப்படி இருக்கும்போது, அங்கு பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறையினரின் நிலையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? அவர்களின் நிலையைத் தத்ரூபமாகவும் சுயஎள்ளலுடனும் விவரித்த விதத்தில் ராகேஷின் எழுத்தாளுமை பக்கமெல்லாம் மிளிர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT