Published : 20 Apr 2018 09:59 AM
Last Updated : 20 Apr 2018 09:59 AM
கா
தலை உருகி மருகிச் சொல்லும் கதைப் புத்தகங்களுக்கு எப்போதுமே இளைஞர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். ‘ஆக்ஸிடெண்ட்லி இன் லவ்’ என்ற புத்தகத்துக்கும் இளைஞர்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள். ஏனென்றால், இந்தக் கதையின் கரு, காதலும் காதல் நிமித்தமுமே.
பொதுவாக, காதல் படங்களும் காதல் புத்தகங்களும் பெரும்பாலும் நமக்குப் பிடித்தவைதான். குறிப்பாக, சோகத்தில் முடியும் லைலா மஜ்னு வகைக் காதல். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இன்று காதலை எப்படிச் சொல்வது என்று தயங்கி எந்த இளைஞனும் ‘இதயம்’ முரளியைப் போல் கையில் புத்தகத்துடன் தலையைக் குனிந்தபடி மருகித் திரிவதில்லை. ஒருவேளை அந்தக் காதல் தோல்வியில் முடிந்தாலும், அதற்காக அவர்கள் தாடி வளர்த்து சோகத்தில் மூழ்குவதில்லை. இன்றைய இளைஞர்கள் ‘அட்டகத்தி’ தினேஷைப் போல் காதலை எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்வை வீணடிக்காமல் மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்கள்
நிகிதா சிங் எழுதியிருக்கும் ‘ஆக்ஸிடெண்ட்லி இன் லவ்’ என்ற புத்தகத்தில் இருக்கும் காதல் இன்றைய தலைமுறையினரின் காதல்தான். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எவையுமின்றி, ‘எது நடந்தால்தான் என்ன?’ என்ற ரீதியில் வெகு சாதாரணமாகக் கடந்துசெல்லும் காதல் அது. சொல்லப்போனால் இந்தப் புத்தகத்தின் மையக் கருவை மணிரத்னம் சுட்டுவிட்டாரோ என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இதன் கரு ‘ஓகே கண்மணி’ படத்தின் கதையுடன் ஒத்துப்போகிறது.
அந்தப் படம் பார்த்தவர் களுக்கு இந்தப் புத்தகத்தின் கதையைத் தனியாகச் சொல்லத் தேவையில்லைதான். இருந்தாலும், மற்றவர்களுக்காக இந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து, இன்று அதே துறையில் சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஷவ்வி முகர்ஜி எனும் இளம் பெண்ணுக்கும் துஷார் மெகர் எனும் ஒளிப்படக் கலைஞனுக்கும் இடையேயான நிர்பந்தமற்ற காதல் வாழ்க்கைதான் இந்தக் கதை.
ஒரு போட்டோ சூட்டில் துஷாரைப் பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொள்கிறது. முதல் சந்திப்பின்போது இருவரும் மதுபோதையின் உச்சத்தில் இருந்தனர். அதனால், அவர்கள் அன்று பேசியதும் கூடிக் கலந்ததும் எந்த அளவுக்கு உண்மை என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
ஒருவித நெருக்கத்தை உணர முடிந்த அவர்களால் காதலை மங்கலாகவே உணர முடிகிறது. எனவே, காதல் கல்யாணம் என்ற சமூகக் கட்டுகளிலும் நிர்ப்பந்தங்களிலும் சிக்கிக் கொள்ளாமல் நெருக்கத்துடன் மட்டும் தங்கள் உறவைத் தொடர்வது என்று முடிவுசெய்து வாழ்கின்றனர். இறுதியில் சுவாரசியமும் இழுவையும் கலந்த சில பக்கங்களுக்குப் பிறகு காதலை உணர்ந்து இருவரும் இணைந்து வாழ ஆரம்பித்துக் கதையை முடித்துவைக்கிறார்கள்.
ரொம்பப் பிரமாதமான கதை இல்லை என்றாலும்கூட, சிக்கலற்ற வார்த்தைகளைக்கொண்டு வாசிப்பதற்கு எளிதான மொழியில் சுவாரசியமான சம்பவங்களைத் தொகுத்து வாசிக்கும் பொழுதுகளை நிகிதா சிங் எளிதாகக் கவர்ந்துகொள்கிறார். வாசிப்பு ஒரு சுவாரசியமான அனுபவம். ஆனால், வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு அது சிரமமான ஒன்றுதான். இந்தப் புத்தகம் அந்தச் சிரமத்தைக் களைந்து அவர்களையும் வாசிப்பைக் காதலிக்க வைக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT