Published : 09 Feb 2018 12:04 PM
Last Updated : 09 Feb 2018 12:04 PM
க
ல்லூரியில் எத்தனையோ மாணவர்கள் படித்தாலும், சில மாணவர்கள் மட்டுமே மனதில் இடம் பிடிக்கிறார்கள். அப்படி என்னுடைய மனதில் இடம்பிடித்த மாணவன் தான்சேன். மற்ற மாணவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன். அவன் ஒரு மாற்றுத்திறனாளி. ஒரு விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவன். இருந்தபோதும் பெற்றோரின் அரவணைப்பாலும் நண்பர்களின் ஆதரவாலும் பொறியியல் கல்லூரியில் கணினிப் படிப்பைத் தொடர்ந்தான்.
தான்சேன் படிப்பில் சராசரி மாணவன். ஆசிரியர்கள் மீது மிகுந்த மரியாதை உடையவன். தான்சேன் முதலாமாண்டு படிக்கும்போது கல்லூரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்பாக தான்சேன் என்னை வந்து சந்தித்தான், “நான் நன்றாக டிரம்ஸ் வாசிப்பேன்” என்றான். எனக்கோ வியப்பு. கைகளை இழந்த மாணவன் என்பதால், எப்படி என்று கேட்டேன்.
அதற்கு தான்சேன், “நான் தொடர்ந்து பயிற்சி எடுத்துவருகிறேன். அதனால், நன்றாக டிரம்ஸ் வாசிப்பேன்” என்றான். அது தன்னம்பிக்கை நிகழ்ச்சியல்லவா? நம்பிக்கையோடு ஒரு மாணவன் அணுகி கேட்கும்போது மறுக்க முடியுமா? உடனே அவனுக்கு அந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கினேன்.
நிகழ்ச்சி ஆரம்பமானது, தான்சேன் டிரம்ஸ் இசைக் கருவிகளை மேடையில் வைத்து தயார்படுத்திக்கொண்டிருந்தான். கீழே அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். நானும் ஆவலாக இருந்தேன்.
தான்சேன் தனது தோள்பட்டையிலிருந்து இரண்டு குச்சிகளைக் கட்டிக்கொண்டு டிரம்ஸைத் தட்ட ஆரம்பித்தான். அவனின் டிரம்ஸ் சத்தத்தைவிட மாணவர்களின் கைதட்டல் அதிகமாக இருந்தது. மிகச் சிறப்பாக அவன் டிரம்ஸ் வாசித்தான். நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், தான்சனை வெகுவாகப் பாராட்டிச் சென்றனர். அன்று முதல் தான்சேன் கல்லூரியில் பிரபலமாகிவிட்டான்.
தான்சனுக்குப் படிப்பைவிட டிரம்ஸ் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். அடுத்தடுத்த கல்லூரி விழாக்களில் தான்சனின் டிரம்ஸ் நிகழ்ச்சியும் கட்டாயம் சேர்க்கப்பட்டது. உண்மையில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வளர்க்க தான்சனின் டிரம்ஸ் நிகழ்ச்சி பெரிதும் உதவியது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவனுக்கு ஏற்பட்ட விபத்தையும் அதிலிருந்து மீண்டு டிரம்ஸ் வாசிக்கக் கற்றுக்கொண்ட தன்னம்பிக்கைக் கதையையும் அவன் கூறும்போது மற்ற மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை பிறந்தது. ஆண்டுகள் ஓடின. தான்சேன் தனது படிப்பை முடித்தான். நான் மற்றொரு கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிவந்தேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தான்சனைத் தொடர்புகொண்டு “என்ன செய்து வருகிறாய்?” என்று கேட்டேன். “பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறேன். அத்துடன் டிரம்ஸ் நிகழ்ச்சியும் நடத்தி வருகிறேன்” என்றான். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
உடனே, கல்லூரியில் தான்சேனின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன், தான்சேன் கல்லூரிக்கு வந்தான். அதிலும் ஓர் ஆச்சரியம் கண்டேன். காரை அவனே ஓட்டிவந்தான். என்னைப் பார்த்தவுடனே “இப்போது கார், பைக் ஓட்டவும் கற்றுக்கொண்டேன்” என்று பெருமையாகச் சொன்னான். எனக்கு ஆச்சரியம் விலகவில்லை.
மாணவர்கள் தங்களிடம் இல்லாத ஒன்றை தேடிக்கொண்டு இருக்கும்போது, தான்சேன் மட்டும்தான் தன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு வாழ்வில் வெற்றிபெற்றவன்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் நண்பர் மூலமாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றான். தொலைக்காட்சிப் பார்வையாளர்களையும் ஈர்த்தான். தான்சேன் தான் படித்த கணினித் துறையில் வேலையைப் பெறவில்லை என்றாலும், தன்னிடம் உள்ள திறமையை வைத்துக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற்றான்.
தான்சேனைப் பார்க்கும்போதெல்லாம், விபத்தில் சிக்கி வலது கையை இழந்து, இடது கையால் பயிற்சி பெற்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹங்கேரி துப்பாக்கி சுடும் வீரர் கரோலியின் நினைவுதான் எனக்கு வரும்.
கைகள் இல்லாமல்போனாலும், கவலைகொள்ளாமல் தன்னிடம் உள்ள நம்பிக்கை எனும் மூன்றாவது ‘கை’யைக்கொண்டு வாழ்வில் சாதித்துக்கொண்டிருக்கும் தான்சேன், தன்னம்பிக்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு முன்மாதிரி.
கட்டுரையாளர்: முதல்வர், செண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
மதுராந்தகம், காஞ்சிபுரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT