Published : 02 Feb 2018 11:18 AM
Last Updated : 02 Feb 2018 11:18 AM
ப
டுக்கையிலிருந்து எழும்போதே, ஸ்மார்ட்போனில் விழிக்கும் காலமாகிவிட்டது. எழுந்தவுடனே, குரூப்பில் இருப்பவர்கள், நண்பர்கள், சொந்தங்கள், உறவினர்களுக்கு குட்மார்னிங் மெசேஜ் தட்டிவிடுவதும் இன்று அன்றாட பழக்கங்களுள் ஒன்றாகிவிட்டது. அப்படி அனுப்பும் குட்மார்னிங் மெசேஜ் இன்று ஸ்மார்ட் போன்களின் வில்லனாக இந்தியாவில் மாறிவருகிறது என அமெரிக்க புள்ளிவிவரம் ஒன்று கொளுத்திப்போட்டுள்ளது.
குட்மார்னிங் மெசெஜ் அனுப்புவோர் டெக்ஸ்ட் வாக்கியமாக அனுப்புவதில்லை. கலர் கலரான படங்கள், வீடியோக்களில்தான் அனுப்புகின்றனர். இன்னும் பலர் அனிமேஷன் செய்யப்பட்ட அலங்கார வார்த்தைகள் இருந்தால்தான், அனுப்பிய மெசேஜை படிப்பார்கள் என்ற ரீதியில் குட்மார்னிங் மெசேஜ் அனுப்புகிறார்கள்.
இது மட்டுமல்ல, விதவிதமான குட்மார்னிங் மெசேஜ்களைத் தேர்வு செய்யவே குட்மார்னிங் கிரீட்டிங்ஸ், விஷ்சஸ் மெசேஜஸ் உள்ளிட்ட இணைய தளங்களும் செயல்படுகின்றன. இதிலிருந்து ஒரு குட்மார்னிங் மெசேஜைத் தேர்வு செய்து, தனக்கு தெரிந்த அனைவருக்கும் அனுப்பி வைத்துவிட்டு மகிழ்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், உண்மை நிலை வேறுவிதமாக இருக்கிறது. இந்தியாவில் பத்தில் மூன்று ஸ்மார்ட் போன்களும், அமெரிக்காவில் பத்தில் ஒரு ஸ்மார்ட்போனும் குட்மார்னிங் மெசேஜ்களால் பாதிக்கப்படுவதாகப் புள்ளி விவரத்தை அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படி அனுப்பும் குட்மார்னிங் மெசேஜ்களில் வைரஸ் பிரச்சினை இருக்கிறதோ என விபரீதமாகக் கற்பனை செய்ய வேண்டாம். டேட்டா ஸ்டோரேஜில்தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறதாம். அமெரிக்காவில் டேட்டா ஸ்டோரேஜ் நிறுவனமான வெஸ்டர்ன் டிஜிட்டல் கார்ப்பரேஷன் நடத்திய ஆய்வின்படி, மொபைலில் இடத்தை அடைக்கும் அனிமேஷன் பாணி குட்மார்னிங் மெசேஜ்களால் ஸ்மார்ட்போன்கள் போதிய இடமின்றி திணறுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் செல்போன்களில் பயன்படுத்தப்படும் செயலிகள் சுயமாகத் (சாஃப்ட்வேர் அப்டேஷன்) தங்களை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து செயலிகளை அப்டேட் வெர்ஷனுக்கு மாற்றும். அப்போது அதிகளவு இடத்தை அந்த செயலிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அதோடு குட்மார்னிங் மெசேஜ்களும் சேர்ந்துகொள்வதால் ஸ்மார்ட்போனின் மெமரி முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாகவே, பல்வேறு சிக்கல்கள் ஸ்மார்ட்போனுக்கு ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. குட்மார்னிங் மெசேஜ் அனுப்புவதற்கு பதிலாக, தினமும் ஏதாவது ஒரு ஆக்கப்பூர்வமான தகவலை அறிந்துகொள்ளும் வகையில் பொதுஅறிவு செய்திகள், தேவையான விஷயங்களை சாதாரண டெக்ஸ்ட் வடிவத்தில் அனுப்பினாலே, அதைப் படிப்பவருக்கும் பலன் கிடைக்கும், ஸ்மார்ட்போனின் மெமரியும் அதிகம் நிரம்பாது.
இனியும் நீங்கள் குட்மார்னிங் மெசேஜ் அனுப்புவீர்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT