Last Updated : 02 Feb, 2018 11:23 AM

 

Published : 02 Feb 2018 11:23 AM
Last Updated : 02 Feb 2018 11:23 AM

கிராஃபிக் நாவல்: தமிழகத்தை மையம்கொண்ட அமானுஷ்யம்!

பேய்க் கதை மன்னன் ஸ்டீஃபன் கிங்கின் அதிதீவிர ரசிகர் கதாசிரியர் ஷமிக் தாஸ் குப்தா. பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் ஸ்டீஃபன் கிங்கின் கதைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது, குறிப்பிட்ட கதையோட்டம் பெரிய விவாதமாக முன்னேறியது. ரத்தக் காட்டேரிகளை மையமாக வைத்து கிங் எழுதிய ‘ஒன் ஃபார் த ரோட்’ என்ற சிறுகதைதான் அப்படி விவாதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு கதையை இந்தியாவில் நடப்பதுபோல் எழுத வேண்டும் என்று ஷமிக் ஆசைப்பட்டார்.

அதன் பிறகு, ஷமிக் ஒரு காமிக்ஸ் கதாசிரியராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். தொடர்ச்சியாகப் பல கதைகளை எழுதிவந்த அவருக்கு, கிங்கின் இந்தக் கதை அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். பின்னர் யாளி ட்ரீம்ஸ் நிறுவனத்துக்காக ரத்தக் காட்டேரிகளைப் பற்றிய கதையை ஷமிக் எழுதியபோது, அது பிரபலமாகப் பேசப்பட்டது. 2016-ம் ஆண்டின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘த வில்லேஜ்’ என்ற கிராஃபிக் நாவல்.

02CHVAN_The_Village_Cover.jpgதமிழ்நாட்டுக் கதை

அமானுஷ்யம் கலந்த பேய்க் கதை என்று முடிவான பிறகு, ஸ்டீஃபன் கிங்கின் கதையைப் பற்றி ஷமிக் சொல்ல, பதிப்பாளர் அஸ்வினும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அந்தக் கதையின் ஒன் லைனை மட்டும் எடுத்துக்கொண்டு அதை இந்திய பாணிக் கதையாக எழுதினார் ஷமிக். கதை 2024-ல் நடப்பதைப்போலவும், கதையின் முக்கிய நிகழ்வை ஆழிப்பேரலை முன்னெடுத்துச் செல்வதுபோலவும் எழுதிய அவர், இன்னொரு புதுமையைச் செய்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பல ஆங்கில கிராஃபிக் நாவல்கள் உருவாக்கப்பட்டு வந்தாலும், அவற்றில் எதுவுமே தமிழகத்தைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை கிடையாது. இந்தப் பின்னணியில் இந்தக் கதையை தமிழ்நாட்டில் நடக்கும் கதையாக எழுதினார் ஷமிக்.

சூழும் அமானுஷ்யம்

கதை 2024-ல் நடக்கிறது. நவமலை என்ற கிராமத்தில் பருவமழை பெய்யத் தொடங்கிய ஒரு நாளில் கதை நடக்கிறது. மழை பெய்யும் இரவில் உதவி கேட்டு மருத்துவர் கௌதம் வருகிறார். அப்போது அமானுஷ்யத்தின் நிழல் நவமலையின் மீது படர்கிறது. மாற்று வழியில் சென்ற அவருடைய கார் பழுதடைந்ததால், அதை ரிப்பேர் செய்ய மெக்கானிக்கைத் தேடி ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்து நவமலைக்கு வருகிறார். காரில் அவரது மனைவியும் மகளும் இருக்க, கௌதம் மட்டுமே வருகிறார். ஆனால், அவரது கார் எங்கே பழுதடைந்தது என்பதைக் கேட்ட பிறகு, அந்தக் கிராமத்தில் யாருமே அவருக்கு உதவ மறுக்கிறார்கள்.

கிராமத் தலைவரான சக்திவேல், அவரது உறவினரான ராஜா, மதுபானக் கடையை நடத்தும் பீட்டர் ஆகிய மூவர் மட்டும் உதவ முன்வருகிறார்கள். ஆனால், அவர்களின் இந்தச் செயலுக்குப் பின்னர் ஒரு மிகப்பெரிய துன்பியல் நிகழ்வும் ஒளிந்திருக்கிறது. சக்திவேலின் டிராக்டரில் அவர்கள் பயணம்செய்து, கௌதமின் கார் நின்றிருந்த இடத்துக்குப் போகும்போது, அந்த இடத்தின் ரகசியம் அவிழ்க்கப்படுகிறது.

02CHVAN_The_Village_Page_No_18.jpgright

கார் நின்றிருந்த இடத்தில் உடைந்த சில கண்ணாடித் துண்டுகள் மட்டுமே கிடக்கின்றன. கௌதமின் மனைவி, மகள் காணாமல் போயிருக்க, அவரது கார் இழுத்துச் செல்லப்பட்டது போன்ற தடயங்கள் தெரிகின்றன. இதன் பின்னால் இருப்பது மனிதர்கள்தான் என்று எண்ணி, அவர்களை மீட்க இந்த நால்வர் குழு கிளம்ப, இயற்கைக்கு மாறான ஒரு சக்தி நியாயம் கேட்டு அவர்களுக்காகக் காத்திருக்கிறது. பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் மனநிலைக்கும் பாவ மன்னிப்புக்கும் இடையே இருக்கும் உணர்வுகள்தான் இந்தக் கதையின் முக்கியமான பேசு பொருள்.

இதைக் கடந்து சாதிக் கொடுமை, அடிமைப்படுத்துதல் போன்ற சமூகப் பிரச்சினைகளையும் சுற்றுச்சூழலை சீர்கெடுக்கும் தொழிற்சாலைகள், மலைப் பகுதி மக்களை ஏமாற்றி நிலம் கையகப்படுத்துதல் என்று பல விஷயங்களை இந்த கிராஃபிக் நாவல் அலசுகிறது.

தலைப்பு: த வில்லேஜ்

கதாசிரியர்: ஷமிக் தாஸ் குப்தா

ஓவியர்: கௌரவ் ஸ்ரீவாஸ்தவா

வெளியீடு: யாளி டிரீம்ஸ் காமிக்ஸ்

பதிப்பாளர்: அஸ்வின் ஸ்ரீவத்சங்கம்

கதைக்கரு: 2014-ம் ஆண்டில் அமானுஷ்யம் சூழ்ந்த ஒரு கிராமத்தில் நடக்கும் கதை.

பக்கங்கள்: 136 முழு வண்ணப் பக்கங்கள்

 

ஷமிக் தாஸ் குப்தா (கதாசிரியர்):கொல்கத்தாவைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு முழுநேர காமிக்ஸ் படைப்பாளியானவர். இயக்குநர் ஷேகர் கபூருடன் இணைந்து இவர் எழுதிய ராமாயண் 3392 AD இந்திய காமிக்ஸ் தளத்தில் இவருக்கான இடத்தை உறுதிப்படுத்தியது.

கௌரவ் ஸ்ரீவஸ்தவா (ஓவியர்):மத்தியப் பிரதேசம், மொரேனாவைச் சேர்ந்தவர். முதலில் ராஜ் காமிக்ஸ் நிறுவனத்தில் ஓவியராக இருந்தார். தற்போது ஃப்ரீலேன்சிங் ஓவியராகச் செயல்பட்டு வருகிறார். சூப்பர்மேன் காமிக்ஸ், அர்னால்டு திரைப்படங்களின் தீவிர ரசிகர்.

அஸ்வின் ஸ்ரீவத்சங்கம் (பதிப்பாளர்):கமலஹாசனின் உறவினரான அஸ்வின் அயல்நாட்டில் பிறந்தாலும், பள்ளிப் பருவம் சென்னையில்தான் கழிந்தது. சிறுவயதிலேயே ஓவியங்கள் மீது ஆர்வம் கொண்டவர். சென்னையிலேயே ஒரு விளம்பர நிறுவனத்தில் கிராபிஃக் டிசைனராக பணிபுரிந்துவிட்டு, பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். யாளி ட்ரீம்ஸ் மூலம் இந்திய மண் சார்ந்த காமிக்ஸ் கதைகளை வெளியிட்டுவருகிறார்.

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x