Last Updated : 23 Feb, 2018 11:03 AM

 

Published : 23 Feb 2018 11:03 AM
Last Updated : 23 Feb 2018 11:03 AM

யூடியூப் உலா: கல்லூரிச் சேட்டைகள்- ஒரு யூடியூப் பிளாஷ்பேக்

னேகமாக எல்லோருக்கும் பிடித்தமானவை அவரவர் கல்லூரி நாட்கள். ஆனால், கல்லூரி காலத்தைக் காட்டுகிறேன் என்ற பெயரில் வகுப்பறைக்கு வெளியே நடக்கும் அரட்டைகளையும் விடலைப் பருவக் காதலையும்தான் ஏகப்பட்ட தமிழ் சினிமாக்கள் காட்டியிருக்கின்றன. இதிலிருந்து வேறுபட்டு ‘அதையும் தாண்டி சுவாரசியமான’வை எவ்வளவோ இருக்கின்றன எனச் சிரிக்கச் சிரிக்கக் காட்டும் தமிழ் யூடியூப் சேனல்களில் ஒன்றுதான் ‘பிளாக் ஷீப்’. இவர்களுடைய ‘ரேண்டம் வீடியோஸ்’, ‘டைபஸ்’ போன்ற தொடர்கள் சிரிப்பு சரவெடியைக் கொளுத்திப்போடுகின்றன.

கல்லூரி அட்டகாசங்கள்

இவர்களின் தனித்துவமே, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வெவ்வேறு விதமான நபர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைக் காட்சிப்படுத்துவதுதான்.

வகுப்பறையில் சேட்டை செய்பவர்கள் ஆசிரியரிடம் மாட்டிக்கொள்ளும்போது, யாரோ ஒரு அப்பாவியின் தலையில் பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்வார்கள், சுமாராகப் படித்த மாணவர்களே தேர்வை நன்றாக எழுதிவிட்டதாகத் தம்பட்டம் அடிக்கும்போது எதுவுமே தெரியாத மாதிரி பாவனைசெய்யும் அந்த ‘படிப்ஸ்’ பையன், எதற்கெடுத்தாலும் எதிர்மறையான கருத்தையே சொல்லிக்கொண்டு திரிபவன், பிடித்தவர்-பிடிக்காதவர் எனப் பாரபட்சம் காட்டும் ஆசிரியர், கண்டிப்பான ஆசிரியர், தோள் கொடுக்கும் ஆசிரியர், வேலைக்கான நேர்முகத் தேர்வில் மடக்கிக் மடக்கி கேள்வி கேட்கும் எச்.ஆர்.கள் - இப்படிக் கல்லூரியில் முதல் நாள் வகுப்பு கலாட்டா முதல் கேம்பஸ் நேர்முகத் தேர்வுவரை கல்லூரி அட்டகாசங்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது ‘ரேண்டம் வீடியோஸ்’ என்ற தொடர்.

அரசியல், சமூக நிலவரங்களைக் கேலி செய்து தமிழ் வலைவாசிகளைக் கவர்ந்துவரும் ‘ஸ்மைல் சேட்டை’ என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த இளைஞர் பட்டாளம்தான் ‘பிளாக் ஷீப்’ சேனலையும் நடத்திக் கலக்குகிறது.

யூடியூப் போதும்

collaanbujpg100 

“ரெண்டு வருஷமா நாங்கள் ஸ்மைல் சேட்டைல பேசாத விஷயங்களைக் காட்ட நினைச்சதும் கல்லூரி கலாட்டா கான்செப்ட்தான் தோணுச்சு. இது நிச்சயமா எல்லாருக்கும் பிடிக்கும். அதே நேரத்துல வெப் சீரிஸ்போல ஒரே கதையோட்டத்தில சொல்லாம, ‘ரேண்டம் வீடியோஸ்’னு கல்லூரி வாழ்க்கை சம்பந்தமான நிகழ்வுகளைத் தொகுத்துத் தர ஆரம்பிச்சோம்” என்கிறார் திரைக்கதை எழுதி, இயக்கிவருபவருமான அன்புதாசன்.

பி.இ. பட்டதாரியான இந்தத் தஞ்சாவூர் பையன், தற்போது முழுநேர யூடியூப் சேனல் கிரியேட்டராகவே மாறிவிட்டார். தமிழ் சினிமாவில் சிறுவேடங்கள் ஏற்கும் நடிகராகவும் வளர்ந்துவருகிறார். யூடியூப் சேனலை நம்பி வாழ்க்கை நடத்த முடிகிறதா என்று கேட்டால், “முன்னெல்லாம் சினிமா இல்லைனா டி.வி. என்ற சாய்ஸ் மட்டுதான் இருந்துச்சு. இப்போ யூடியூப்பும் வந்துடுச்சு. யூடியூப் சேனல் மூலமா நல்ல வருவாயும் கிடைக்குது. நான் மட்டுமல்ல; என்னைப் போல ஆயிரக்கணக்கான தமிழ் யூடியூபர்ஸ் வந்துட்டாங்க. எங்க சேனல்ல மட்டுமே 40 பேர் வேலை பார்க்கிறோம்” என்கிறார் அன்புதாசன்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்துவந்த அப்துல்லாவும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குத் திரைக்கதை எழுதிவந்த ஸ்ரீபிரசன்னாவும் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தற்போது ஸ்மைல் சேட்டையில் வேலை பார்த்துவருகிறார்கள் .

விடுதிகளில் தங்கும் விதவிதமான ‘ரூம் மேட்கள்’களின் குணாதிசயங்கள், தூங்குவதிலேயே பல வெரைட்டி காட்டுபவர்கள், பல வகையறா காதலர்கள், மழையில் நனைவதில் பலவிதமான ஆட்களை மையமாக வைத்து ‘டைப்ஸ்’ என்ற தொடரில் சிரிப்பு மழையில் நனையவைக்கிறார்கள். இதை இயக்குபவர் ஸ்ரீ பிரசன்னா.

“வட இந்தியாவில கொடிகட்டிப் பறக்குற ‘அல் இந்தியா பக்சோத்’ யூடியூப் சேனலைப் பார்த்து அதே ஸ்டைலில் தொடங்கப்பட்டதுதான் ஸ்மைல் சேட்டை. அவர்களுக்கு கோடிக்கணக்குல பார்வையாளர்கள், ரெண்டு கோடிக்கும் மேல சந்தாதாரர்கள் கிடைச்சுட்டாங்க. அதேபோல நம்ம தமிழ் யூடியூப் சேனல்களும் சீக்கிரம் சிகரம் தொடும்” என்று கோரஸாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இந்த இளம் யூடியூபர்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x